பாடல் #1049: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)
தாளணி நூபுரஞ் செம்பட்டுத் தானுடை
வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்
ஏரணி யங்குச பாச மெழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே.
விளக்கம்:
அழகிய சிலம்பணிந்த திருவடிகளும், சிவந்த பட்டு அணிந்த உடலும், அழகிய கச்சையணிந்த மார்பும், அம்பைப் போன்ற மலர்க்கொத்து வில்லைப் போன்ற கரும்பு அங்குசம் பாசக் கயிறு ஆகியவற்றை அணிந்த நான்கு கரங்களும், அழகிய நீண்ட கருமையான கூந்தலும், பெரிய மணிகள் பதித்த குண்டலங்களை அணிந்த காதுகளும் கொண்ட உருவமாக திரிபுரை இருக்கின்றாள்.
கருத்து:
திரிபுரை சக்தியானது உலகத்தை இயக்கும் முறைகளை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். சிலம்பிலிருந்து வரும் ஒலியும் பட்டு போல் சிகப்பாக ஜொலிக்கும் ஒளியும் உலக உருவாக்கத்தின் (படைத்தல்) காரணத்தை குறிக்கின்றது. மார்பு கச்சை உலக உயிர்களுக்கு பாதுகாப்பாக (காத்தல்) உணவு அளிப்பதை குறிக்கின்றது. நான்கு கரங்களில் உள்ளவற்றில் மலர்க்கொத்து அருளலையும், வில்லைப் போன்ற கரும்பு அழித்தலையும், பாசக் கயிறு மாயையால் மறைத்தலையும், அங்குசம் அடியவர்கள் மாயையில் சிக்கித் தவிக்கும் போது தடுப்பதையும் குறிக்கின்றது. கருமையான கூந்தல் பரந்து விரிந்த அண்டங்களைக் குறிக்கின்றது. காதுகளில் அணிந்த குண்டலங்கள் சூரிய சந்திரனைக் குறிக்கின்றது.