பாடல் #157

பாடல் #157: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலைப் போக்கி விறகிட் டெரிமூட்டி
நீர்த்தலையில் மூழ்குவர் நீதியில் லாரே.

விளக்கம்:

ஒருவன் இறந்தபின் அவனது உடலைச் சுற்றி நின்று கூவி ஒப்பாரி வைக்கும் உறவினர்களும் சுற்றத்தாரும் மனைவியும் மக்களும் அவனது உடலை ஊரின் எல்லை சுடுகாடு வரை எடுத்துச் சென்றபின் தங்களின் நெற்றியின் மேல் அரும்பிவிட்ட வேர்வையை துடைத்து நீக்குவது போல் அவனது உடலையும் இறக்கி வைத்து விறகுகளை அடுக்கி அதற்கு நெருப்பு மூட்டிவிட்டு நீரினில் தலை முழுகி விட்டுச் சென்று விடுபவர்கள். தனக்கு உறுதிணையாய் இருந்த அவனது உடலையும் அவனது அன்பையும் அப்போதே மறந்துவிட்ட நீதியில்லாதவர்கள் இவர்கள்.

கருத்து: ஒருவன் இருக்கும் வரை அவன் மூலம் கிடைத்த அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு அவனோடு அன்பாக இருந்தவர்கள் அவன் இறந்ததும் அனைத்தையும் மறந்துவிட்டும் தங்களுக்கும் ஒரு நாள் இறப்பு வரும் என்பதை நினைத்துப் பார்க்காதவர்கள் நீதியில்லாதவர்கள்.

பாடல் #158

பாடல் #158: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றும்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும்வை யாரே.

விளக்கம்:

இந்த உலகம் முழுவதும் பிறக்கின்ற உயிர்களின் உடல்கள் எல்லாம் அழகாக செய்யப்பட்ட மண்குடம் போன்றது. தாயின் வளமை பொருந்திய இடையின் முன்பிருக்கும் வயிற்றிலிருக்கும் குளமாகிய கருப்பைக்குள் சுரோணிதமாகிய மண் மற்றும் சுக்கிலமாகிய நீர் கலந்து குயவனாகிய இறைவனால் படைந்த உடல் இது. மண்ணால் செய்யப்பட்ட குடம் உடைந்து போனால் கூட ஓடாக பயன்படும் என்று வைத்திருக்கும் மனிதர்கள் தோலாகிய மண்ணால் செய்யப்பட்ட இந்த உடலாகிய குடம் உடைந்து போனால் (இறந்து போனால்) மட்டும் வைத்திருக்காமல் வெளியே எடுத்துச் சென்று சுடுகாட்டில் வைத்து எரித்துவிடுவார்கள்.

கருத்து: களிமண்ணால் செய்யப்பட்ட உடைந்த குடத்திற்கு இருக்கும் மதிப்பு கூட உயிர்பிரிந்த உடலுக்கு கிடையாது.

பாடல் #159

பாடல் #159: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

ஐந்து தலைப்பறி யாறு சடையுள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்தது கிடந்தது மேலறி யோமே.

விளக்கம்:

ஐம்புலன்களும் செயல்படும் தலையாய ஐந்து இந்திரியங்களும் (கண், காது, மூக்கு, வாய், தோல்) நாடிகளோடு பினைந்துக் கிடக்கும் ஆறு ஆதாரங்களும் (மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை) முப்பது எலும்புகளும் அந்த எலும்புகளை இணைக்கும் பதினெட்டு மூட்டுக்களும் இவை அனைத்தையும் போர்வை போல மூடி வைத்திருக்கும் தோலும் அந்தத் தோலிலுள்ள ஒன்பது துவாரங்களும் (2 கண், 2 காது, 2 நாசி, வாய், பால்குறி, ஆசனவாய்) பதினைந்துவித எலும்புவரிகளும் (மண்டையெலும்பு, தாடையெலும்பு, கழுத்தெலும்பு, மார்பெலும்பு, முதுகெலும்பு, முதலியன) ஆகிய அனைத்தும் சேர்ந்து இருக்கும் இந்த மனித உடலானது இறந்தபின் சுடுகாட்டில் கொண்டுபோய் எரிக்கப்படும்போது அனைத்தும் எரிந்து வெறும் சாம்பல் மட்டுமே கிடக்கும். அப்படி வெந்து கிடக்கும் சாம்பலுக்குப் பிறகு அந்த உயிருக்கு என்னவாகின்றது என்பதை யாரும் அறிவதில்லை.

பாடல் #160

பாடல் #160: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

அத்திப் பழமும் அரைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அரைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக் காரே.

விளக்கம்:

அத்திப்பழத்தையும் (பெண்ணின் உடல்தரும் சுரோணிதம்) நல்ல அரைக்கீரை வித்தையும் (ஆணின் உடல்தரும் சுக்கிலம்) ஒன்றாகக் கலக்கும்படி கொத்தி (ஆணும் பெண்ணும் ஒன்றாக சேருதல்) அதை உலையில் வைத்து (கருப்பை) கூழாக (தூமை எனப்படும் குழந்தையின் சதை உருவம்) சமைத்து வைத்தனர் பெற்றோர். பின்பு அத்திப்பழமாகிய சுரோணிதத்தை அரைக்கீரை வித்தாகிய சுக்கிலம் உண்டு குழந்தையின் உடலாக மாறிவிட்டபின் பிரசவ வேதனையில் கதறி அதைப் பெற்றெடுத்தவர்கள் ஒரு நாள் அந்த உடல் இறந்தபின் அதை எரிக்க சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

கருத்து: சில பொருள்கள் சேர்த்து சாப்பாடு சமைப்பது போலவே ஆணும் பெண்ணும் சேர்ந்து சமைத்த இந்த மனித உடல் சாப்பிட்டு முடித்ததும் பாத்திரத்தைக் கழுவி எடுத்து வைத்ததுபோல ஒரு நாள் உயிர் போனபின் உடல் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று வைக்கப்பட்டுவிடும். நன்றாக சமைத்த சாப்பாடும் நிரந்தரமாக பசியைப் போக்காதது போலவே உடலும் நிரந்தரமாக இருக்காது.

பாடல் #161

பாடல் #161: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை
காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு
ஓலையான் மேய்ந்தவ ரூடு வரியாமை
வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளிகையே.

விளக்கம்:

இந்த மனித உடலாகிய வீட்டிற்கு மேலும் கூரையில்லை (உச்சியில் தலை மட்டுமே) அடியிலும் செப்பனிட்ட தளமில்லை (காலுக்குக்கீழ் ஒன்றுமில்லை) வீட்டின் சுவரைத் தாங்கும் கழிகளும் இரண்டுதான் இருக்கின்றது (இரண்டு கால்கள் மட்டுமே) அதன் நடுவில் உத்திரத்தைத் தாங்கும் கழி (முதுகெலும்பு) ஒன்றுதான் இருக்கிறது. இப்படி இருக்கும் வீட்டிற்கு சொந்தக்காரனோ (மனித உயிர்) வீட்டை என்றும் அழியாமல் உறுதியாக வைக்கத் தெரியாமல் விட்டுவிட்டான் (சுழுமுனை நாடி வழியே மூச்சுக்காற்றை செலுத்தத் தெரியாமல் விட்டுவிட்டான்). வேலையால் (வினைக் கர்மங்கள்) செய்யப்பட்ட இந்த வெள்ளிக் கோயில் போன்ற உடல் (வெள்ளை நிற சுக்கிலத்தால் உருவானது) வீணே அழிந்து போகின்றது (இறந்து போகின்றது).

கருத்து: இறைவன் மனித உடலில் கூரையாக சகஸ்ரர தள பரவெளியையும் அடித்தளமாக குண்டலினி சக்தியையும் கால்களாக இடகலை பிங்கலை ஆகிய இரண்டு நாடிகளையும் தாங்கும் முதுகெலும்பாக நடுவில் சுழுமுனை நாடியையும் கொடுத்து உடம்பை ஒரு கோயிலாக படைத்திருக்கின்றான். இருப்பினும் உயிர்கள் தம் உடலிலுள்ள குண்டலினி சக்தியை சுழுமுனை நாடி வழியே மேலெழுப்பி சகஸ்ரர தளத்தில் சேர்த்து என்றும் அழியாத உடலைப் பெறும் வழியைத் தெரிந்து கொள்ளாமல் தங்களின் வாழ்க்கையை வீணே கழித்து ஒரு நாள் அழிந்து போகின்றார்கள்.

பாடல் #162

பாடல் #162: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

கூடம் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
ஆடும் இலையமும் அற்ற தறுதலும்
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்
தேடிய தீயினில் தீயவைத் தார்களே.

விளக்கம்:

நாட்டியம் ஆடுகின்ற கலைக்கூடம் வெறுமனே கிடக்கின்றது (உயிர் ஆடிய உடல் செத்துக் கிடக்கின்றது). அங்கே அழகிய அலங்காரங்கள் எதுவும் இல்லை (பிணத்திற்கு அழகு இல்லை). நாட்டியம் ஆடும் சுதியும் லயமும் இல்லை (மூச்சுக் காற்றும் இருதயத் துடிப்பும் இல்லை). அந்தக் கலைக்கூடத்தில் பாடுகின்றார்கள் சிலர் (பண்டாரங்கள் பறையறைந்து பாடுதல்) சுதியும் லயமும் இல்லாமல் வெறும் பண் வைத்துப் பாடுவது அழுவதுபோல இருக்கிறது (பிணத்தைச் சுற்றி ஒப்பாரி வைத்து அழுகின்றார்கள்). இதனால் அழகிய நாட்டியத்தைக் காண வேண்டும் என்று தேடி வந்தவர்களின் ஆசைத் தீயினில் ஏமாற்றமெனும் தீயை வைத்து ஆசையை எரித்துவிட்டார்கள் (காய்ந்த விறகுகளைத் தேடி எடுத்து வந்து வைத்த தீயினில் உடலை வைத்து எரித்துவிட்டார்கள்).

கருத்து: உயிர் இருக்கும் வரை ஓயாது ஆசை எனும் தீயினில் ஆடும் இந்த உடல் அந்த உயிர் பிரிந்தவுடன் மற்றவர்கள் வைத்த தீயினில் வெந்து சாம்பலாகின்றது. அழிகின்ற உடலை நம்பி ஆசை எனும் தீயினில் ஆடாமல் இறைவனை நாடி என்றும் நிலைத்திருக்கும் வழியைத் தேட வேண்டும்.

பாடல் #163

பாடல் #163: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம் பன்னிரண் டாண்டினில்
கெட்டது எழுபதிற் கேடறி யீரே.

விளக்கம்:

கரு முட்டையில் (சுரோணிதம்) சுக்கிலம் சேர்ந்ததால் முன்னூறு நாட்களில் (10 மாதம்) பிறந்தது மனித உடல். பிறந்த உயிர் தாமாகவே இறைவனை அறியும் அறிவை கொண்டு வரவில்லை பிறந்ததில் இருந்து இறைவனை அடையும் அறிவுச் செல்வம் இல்லாத அந்த குழந்தை 12 ஆண்டுகளில் உலக வாசனையுடன் வளர்ந்து சிறிது சிறிதாக உலகப் பற்றுக்களின் மேல் ஆசை கொண்டு அப்பற்றுகளுடன் வாழும் அந்த உயிர் எழுபது வயதில் இறைவனை அடையும் வழிகள் தெரியாமல் மனம் தெளிவை அடையாமலேயே உடல் கெட்டு அழிந்து விடுவதை யாரும் அறிந்து கொள்ளவில்லை.

பாடல் #164

பாடல் #164: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான்
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சிரு ளாவ தறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.

விளக்கம்:

விளக்கு (மனித உடல்) இருக்கும் போதே அதிலிருக்கும் ஒளியை (உயிர்) எடுத்துக் கொண்டான் (எமன்) என்று கதறுபவர்கள் எண்ணெய் (கர்ம வினைகள்) தீர்ந்துவிட்டதால்தான் ஜோதியும் (உயிர்) நின்றுவிட்டது என்பதை அறியாத மூடர்கள். தினமும் விடியும் காலைப் பொழுது (பிறப்பு) பிறகு இரவு வர மறைந்து இருளாகும் (இறப்பு) என்பதை உணராத இந்த உலகத்தவர்கள் இறந்தவனுக்காக துக்கத்தில் புலம்புகின்றனர். பிறப்பு உண்டெனில் இறப்பும் உண்டு என்பதை அறியாமல் உலகப் பற்றுக்களில் ஆசை வைத்து நிலையற்ற உடம்பை நிலையென்று எண்ணி வருந்துகின்றனரே.

பாடல் #165

பாடல் #165: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

மடல்விரிக் கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவந் தொழாமல்
இடர்படந் தேழா நரகிற் கிடப்பர்
குடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே.

விளக்கம்:

மடல் விரித்த அழகிய கொன்றை மலரை மார்பில் அணிந்த மாயவனால் (இறைவன்) மாயையில் படைக்கப்பட்ட இந்த மனித உடலும் அதிலிருக்கும் உயிரும் அந்த இறைவனின் திரு உருவத்தைத் வழிபடாமல் ஆசைகளின் வழியே வாழ்ந்து துன்பப்பட்டு இறந்தவர்களின் நெருக்கமானவர்கள் (மனைவி மக்கள் மற்றும் உறவினர்) அடிவயிற்றிலிருந்து உரக்கக் கூப்பிட்டு அழுது புலம்பிக்கொண்டிருக்க நரகிலேயே கொடியதான ஏழாவது நரகத்தில் கிடந்து அல்லல் படுவார்கள்.

கருத்து: அழியக்கூடிய இந்த உடலின் மேல் ஆசை வைத்து உலகில் ஆசையினால் பல தீய காரியங்களைச் செய்துகொண்டு தம்மைப் படைத்தவனும் என்றும் அழியாதவனும் ஆகிய இறைவனைப் போற்றி வணங்காதவர்கள் இறந்தபின் அவர்களின் உறவினர்கள் கதறி அழுது கூப்பிட்டாலும் திரும்பி வரமுடியாமல் ஏழாவது நரகத்தில் கிடந்து துன்பப்படுவார்கள்.

பாடல் #166

பாடல் #166: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

குடையும் குதிரையும் கொற்றவா ளும்கொண்
டிடையுமக் காலம் இருந்து நடுவே
புடையு மனிதனார் போகும்அப் போதே
அடையும் இடம்வலம் ஆருயி ராமே.

விளக்கம்:

அரசாட்சியும் வலிமையான குதிரை படையும் உறுதியான வாளும் செங்கோலும் தரித்துக் கொண்டு வாழ வேண்டிய காலம் வரை அரசனாக வாழும் மனிதர்களும் அவர்களின் நடுவே நான்கு பக்கமும் மனிதர்களோடு புடைசூழ சென்று கொண்டிருக்கும் போதே அவர்களது உயிரானது இடகலை பிங்கலை நாசிகளின் வழியே பிரிந்து அடையவேண்டிய இடத்துக்குச் சென்று அடைந்துவிடும்.

உட்கருத்து: மக்கள் படைசூழ வலம் வரும் பாராளும் அரசன் ஆனாலும் உயிர் பிரிந்து போவதை யாராலும் தடுக்க இயலாது.