பாடல் #477

பாடல் #477: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

மாண்பது வாக வளர்கின்ற வன்னியைக்
காண்பது ஆண்பெண் அலியெனும் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தானச் சோதிதன் ஆண்மையே.

விளக்கம்:

இறைவனது கருணையினால் தாயின் வயிற்றில் வளர்கின்ற ஜோதி வடிவமான ஆன்மாவை ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் பார்ப்பது மாயையாகும். அப்படியெல்லாம் உருவைக் கொடுப்பது அந்தக் குழந்தையின் தாய் தந்தையரின் வழிமுறைகளால் தானே தவிர ஆன்மாவிற்கு என்று ஒரு உருவமும் கிடையாது. தந்தை தாயின் வழியாகவே அவர்களின் சாயலில் கருவைப் பதித்து அதை ஆண் பெண் அலி என்ற உருவமாகச் செய்வது இறைவனின் வல்லமையே ஆகும்.

பாடல் #478

பாடல் #478: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.

விளக்கம்:

ஆண் பெண் இன்பத்தின் முடிவில் கலக்கும் நீரில் ஆணின் சுக்கிலம் பெண்ணின் சுரோணிதத்தை விட அதிகமாக இருந்தால் பிறப்பது ஆண் குழந்தையாக இருக்கும். அப்படி இல்லாமல் ஆணின் சுக்கிலத்தை விட பெண்ணின் சுரோணிதம் அதிகமாக இருந்தால் பிறப்பது பெண் குழந்தையாக இருக்கும். அப்படியும் இல்லாமல் ஆணின் சுக்கிலமும் பெண்ணின் சுரோணிதமும் சமமாக இருந்தால் பிறப்பது அலியாக இருக்கும். இதில் ஆணின் சுக்கிலத்தில் உயிரணுவின் சக்தி மிகவும் அதிகமாக இருந்தால் பிறக்கின்ற குழந்தை உலகத்தையே ஆளுகின்ற அரசன் போல சீரும் சிறப்பும் மிகுந்ததாக இருக்கும். பெண்ணின் சுரோணிதத்தின் உயிரணு அழிப்பு சக்தி மிகவும் அதிகமாக இருந்தால் சுக்கிலம் பாய்ந்தும் ஒரு பயனும் இல்லாமல் கரு உருவாகாமல் போய்விடும்.

பாடல் #479

பாடல் #479: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் தவ்வகை
பாய்ந்திடும் யோகியர்க்குப் பாய்ச்சலும் ஆமே.

விளக்கம்:

ஆண் பெண் இன்பத்தின் முடிவில் ஆணிடமிருந்து சுக்கிலம் வெளிவந்து பெண்ணின் யோனியில் பாய்ந்த பிறகு ஆண் விடும் மூச்சுக்காற்றின் அளவு ஐந்து வினாடிகள் அளவிற்கு வெளிவந்தால் பிறக்கும் குழந்தை நூறு ஆண்டுகள் ஆயுளோடு பிறக்கும். ஆண் விடும் மூச்சுக்காற்றின் அளவு நான்கு வினாடிகள் அளவிற்கு வெளிவந்தால் பிறக்கும் குழந்தை எண்பது ஆண்டுகள் ஆயுளோடு பிறக்கும். எந்த அளவு மூச்சுக்காற்று வெளிவருகின்றது என்பதை பிரித்துப் பார்த்து அறிந்து கொண்டு தமக்கு வேண்டிய அளவிற்கு வெளிவரும் படி செய்வது யோக சாதனைகளைப் புரிந்து சாதனைகள் கைவரப்பெற்ற யோகியர்களுக்கே முடியும் என்பதால் அவர்களுக்கு ஆயுள் அளவு கிடையாது.

குறிப்பு :மூச்சுக்காற்றைத் தம் வசம் பழக்கி அளவு அறிந்து இழுத்து அளவு அறிந்து வெளிவிடும் ஆற்றலைப் பெற்றவர்கள் யோகியர்கள். அவர்களால் தாம் வெளிவிடும் மூச்சுக்காற்றின் நேர அளவைக் கூட்டி தங்களது ஆயுளை எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டிக்க முடியும்.

பாடல் #480

பாடல் #480: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லை பார்க்கிலே.

விளக்கம்:

ஆண் பெண் இன்பத்தின் முடிவில் ஆணிடமிருந்து சுக்கிலம் வெளிவந்து பெண்ணின் யோனியில் பாய்ந்த பிறகு ஆண் விடும் மூச்சுக்காற்றின் அளவு நான்கு வினாடிக்கும் குறைவான அளவு வெளிவந்தால் பிறக்கும் குழந்தை குட்டையாகப் பிறக்கும். ஆணின் மூச்சுக்காற்று மெலிந்து வெளிவந்தால் பிறக்கும் குழந்தை முடமாகப் பிறக்கும். ஆணின் மூச்சுக்காற்று சீராக வராமல் தடை பட்டு தடை பட்டு வந்தால் பிறக்கும் குழந்தை கூனுடன் பிறக்கும். இப்படி வெளிவருகின்ற மூச்சுக்காற்றின் அளவைக் கணக்கிடும் முறை ஆண்களுக்குத் தானே தவிர பெண்கள் விடும் மூச்சுக் காற்றின் அளவு கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.

குறிப்பு ஆணின் மூச்சுக்காற்று சுக்கிலத்திலிருந்து உயிரணுக்களைத் தருகின்றது. பெண்ணின் மூச்சுக்காற்று சுரோணிதத்திலிருந்து அழிக்கும் சக்தியைத் தருகின்றது (பாடல் #478 இல் இதற்கான விளக்கம் காண்க). உயிரின் ஆயுள் காலம் ஆணின் மூச்சுக்காற்றின் அளவிலிருந்து மட்டுமே நிர்ணயிக்கப்படுகின்றது.

பாடல் #481

பாடல் #481: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

மாதா உதரம் மலமிகின் மந்தனாம்
மாதா உதரம் சலமிகின் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.

விளக்கம்:

ஆண் பெண் இன்பத்தின் முடிவில் சுக்கிலம் கருமுட்டையுடன் சேரும் போது தாயாகப் போகின்ற பெண்ணின் வயிற்றில் மலக்கழிவு அதிகமாக இருந்தால் பிறக்கும் குழந்தை மந்த புத்தியுடன் பிறக்கும். அவள் வயிற்றில் சிறுநீர் அதிகமாக இருந்தால் பிறக்கும் குழந்தை ஊமையாகப் பிறக்கும். மலக்கழிவும் சிறுநீரும் சமமான அளவு இருந்தால் பிறக்கும் குழந்தை குருடாகப் பிறக்கும். உடலுறவின் போது பெண்கள் தங்களின் வயிற்றில் மலக்கழிவோ சிறுநீரோ அதிகமாக இல்லாமல் பார்த்துக் கொள்வது ஆரோக்கியமான குழந்தைக்கு வழிவகுக்கும்.

பாடல் #482

பாடல் #482: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவி இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாம் கொண்டகால் ஒக்கிலே.

விளக்கம்:

ஆண் பெண் இன்பத்தின் போது ஆணின் மூச்சுக்காற்று வலது புற நாசியான சூரியகலையின் வழியே சென்றால் பிறக்கும் குழந்தை ஆணாகப் பிறக்கும். ஆணின் மூச்சுக்காற்று இடது புற நாசியான சந்திரகலையின் வழியே சென்றால் பிறக்கும் குழந்தை பெண்ணாகப் பிறக்கும். ஆணின் மூச்சுக்காற்று இரண்டு நாசிகளின் வழியாகவும் ஒன்றாக சென்றால் பிறக்கும் குழந்தை அலியாகப் பிறக்கும். உடலுறவின் போது பெண்ணின் மூச்சுக்காற்றை எதிர்த்துக் கொண்டு மலக்காற்று வந்தால் பிறக்கும் குழந்தை இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கும்.

குறிப்பு: அபானன் என்பது மனித உடலின் வயிற்றிலிருந்து கீழ் நோக்கிப் பாயும் ஒரு வாயு. இது மலக்காற்று என்று அறியப்படுகின்றது.

பாடல் #483

பாடல் #483: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியும் கோமள மாயிடுங்
கொண்ட வாயு இருவர்க்குங் குழறிடில்
கொண்டதும் இல்லையாங் கோல்வளை யார்கட்கே.

விளக்கம்:

ஆண் பெண் இன்பத்தின் போது உடலுக்கு நன்மை தரும் மூச்சுக் காற்றை இருவரும் சீராக இழுத்து விட்டால் பிறக்கும் குழந்தை மிகவும் அழகாகப் பிறக்கும். இருவருக்கும் மூச்சுக் காற்று தடுமாறி சீரில்லாமல் ஓடினால் பெண்ணின் வயிற்றில் கருத்தரித்தாலும் அது குழந்தையாக மாறாமல் சிதைந்து போய்விடும்.

பாடல் #484

பாடல் #484: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்
போல்வளர்ந் துள்ளே பொருந்துஉரு வாமே.

விளக்கம்:

ஆண் பெண் இன்பத்தின் முடிவில் பெண்ணின் வயிற்றில் தங்கிய கருவானது மனித உடலின் உள் நாக்கிற்கு மேலே இருக்கும் சுழு முனை நாடித் துளை வழியே தரிசிக்கும் ஜோதி வடிவான இறைவனின் அம்சமாகும். அந்தக் கரு குழந்தையாக மாறும் போது சூரியனைப் போன்ற தகதகக்கும் தங்க நிறத்தில் இருக்கும். பிறகு அதுவே உடலின் பல்வேறு உறுப்புகளாக வளரும் போது தந்தை தாயின் உருவத்திற்கு ஏற்ற மாதிரி குழந்தையின் உருவமும் பொருத்தமாக வளரும்.

உட்கருத்து: உடலின் ஆறு ஆதாரச் சக்கரங்களும் நடுவில் இருக்கும் சுழுமுனை நாடியின் வழியில்தான் இருக்கின்றன. அதன் வழியே குண்டலினி சக்தியை மேலே ஏற்றினால் அது ஏழாவது இடமான தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரர தளத்தைச் சென்று சேர்ந்து அங்கே ஒளி வடிவமாக வீற்றிருக்கும் இறைவனோடு கலந்து பிறகு அங்கிருந்து கீழே வந்து உள் நாக்கிற்கு மேலே இருக்கும் துளை வழியே அமிர்தமாகப் பொழிந்தால் பிறவி இல்லாத பெரும் வாழ்வு கிடைக்கும். இந்தத் துளை வழியே இறைவனை ஜோதி வடிவாக தரிசிக்க முடியும். அங்கே ஜோதியாக வீற்றிருக்கும் இறைவனின் அம்சம்தான் தந்தையின் உடலிலிருந்து குழந்தையின் உயிராகத் தாயின் வயிற்றில் சென்று சேருகின்றது. பெண்ணின் வயிற்றில் தங்கிய கரு குழந்தையாக மாறும் போது சூரியனைப் போன்ற நிறத்திலும் பிறகு எல்லா உறுப்புகளும் உருவாகும் போது தந்தை தாயின் சாயலிலேயே உருவாகும்.

பாடல் #485

பாடல் #485: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்தில்
பருவம தாகவே பாரினில் வந்து
மருவி வளர்ந்திடும் மாயையி னாலே
அருவம தாவதிங் காரறி வாரே.

விளக்கம்:

குழந்தையின் உருவம் பத்து மாதங்களாகத் தாயின் கர்ப்பப் பைக்குள் கருவாக வளர்ந்து பூமியில் குழந்தையாக பிறந்து இளைஞன் முதியவன் ஆகிய பலவித பருவங்களாக வளர்ந்தாலும் தனக்குள் இருக்கும் இறைவனையும் தான் யார் என்பதையும் மாயையினால் அறியாமலேயே வளரும். எப்பொழுது அந்த உயிர் இறக்கின்றதோ அப்போது அதனின் உடலை விட்டு சூட்சுமமான ஆன்மாவாகத் திரும்பி போய்விடுவதை உலகத்தவர்கள் எவரும் அறிய மாட்டார்கள். மாயையினால் கட்டுண்டு இருக்கும் உலகத்தவர்கள் உயிர் ஆன்மாவாக இருப்பதையோ ஆன்மா இறைவனின் அம்சமாக இருப்பதையோ என்றும் அறியாமலேயே பிறந்து வாழ்ந்து இறந்து போகின்றனர்.

பாடல் #486

பாடல் #486: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

இட்டார் அறிந்திலர் ஏற்றவர் கண்டிலர்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன்இம் மாயையின் கீழ்மையைஇவ் வாறே.

விளக்கம்:

சுக்கிலத்தை இட்ட ஆண்களும் அது கருவாகியதா என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். அந்த சுக்கிலத்தை ஏற்றுக் கொண்ட பெண்களும் அது கருவாகியதா என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். தங்கத்தை நகையாகச் செய்யும் தச்சன் போல ஆன்மாவை வினைப்படி உயிராகச் செய்யும் பிரம்மன் இதை அறிந்திருந்தாலும் அதை யாருக்கும் அவன் சொன்னதில்லை. அனைத்தும் அறிந்த இறைவனும் உயிர்களிடம் கலந்து இருந்தாலும் அவனும் யாருக்கும் ஒன்றும் சொல்வதில்லை. இதையெல்லாம் உயிர்கள் அறியாதது அவர்களின் மாயையினால் தான். இறைவனின் அருளால் யான் இறைவனை எனக்குள்ளேயே கண்டு உணர்ந்துவிட்டதால் அந்த மாயையை அழித்து இதை அறிந்து கொண்டேன்.

உட்கருத்து: மாயையினால் உயிர்கள் எதையும் அறியாமல் இருக்கின்றார்கள். உண்மையை அறிந்த பிரம்மனும் இறைவனும் உயிர்களுக்கு தாமாகவே எதையும் சொல்லுவதில்லை. இறைவனை அறிந்து தமக்குள்ளேயே உயிர்கள் உணர்ந்து விட்டால் மாயை அழித்து உண்மையை உள்ளபடியே அறிந்து கொள்ளலாம். (இதை எவ்வாறு செய்வது என்பதை அடுத்த பாடல் #487 இல் விளக்குகின்றார்)