பாடல் #1766: ஏழாம் தந்திரம் – 6. ஞான லிங்கம் (உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றுமாக இருக்கின்ற சதாசிவத்தை ஞான இலிங்கமாக உணர்வது)
வேண்டி நின்றேதொழு தேன்வினை போயற
வாண்டொரு திங்களும் நாளு மளக்கின்ற
காண்டகை யானோடும் கன்னி யுணரினு
மூண்டகை மாறினு மொன்றது வாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
வெணடி நினறெதொழு தெனவினை பொயற
வாணடொரு திஙகளும நாளு மளககினற
காணடகை யானொடுங கனனி யுணரினு
மூணடகை மாறினு மொனறது வாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
வேண்டி நின்றே தொழுதேன் வினை போய் அற
ஆண்டு ஒரு திங்களும் நாளும் அளக்கின்ற
காண் தகை ஆன் ஓடும் கன்னி உணரினும்
ஊண் தகை மாறினும் ஒன்று அது ஆமே.
பதப்பொருள்:
வேண்டி (இறைவனை வேண்டி) நின்றே (நின்று) தொழுதேன் (வணங்கினேன்) வினை (எனது வினைகள் அனைத்தும்) போய் (நீங்கி) அற (அழிந்து விடும் படி)
ஆண்டு (ஆண்டுகள்) ஒரு (ஒவ்வொன்றையும்) திங்களும் (மாதங்கள்) நாளும் (நாட்கள்) அளக்கின்ற (என்று இருக்கின்ற உயிர்களின் வாழ் நாளை அளந்து அருளுபவனை)
காண் (கண்டு தரிசிக்கும்) தகை (இயல்போடு) ஆன் (இருக்கின்ற நாயகனாகிய) ஓடும் (இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற) கன்னி (என்றும் இளமையான இறைவியையும்) உணரினும் (உணர்ந்து தொழுதாலும்)
ஊண் (தமது உடலின்) தகை (இயல்பை கடினமான சாதகங்களால்) மாறினும் (மாற்றி யோகத்தின் மூலம் உணர்ந்தாலும்) ஒன்று (இரண்டுமே ஒன்றான) அது (ஞான இலிங்கத்தின் வழியாகவே) ஆமே (இருக்கின்றது).
விளக்கம்:
எனது வினைகள் அனைத்தும் நீங்கி அழிந்து விடும் படி இறைவனை வேண்டி நின்று வணங்கினேன். ஆண்டுகள் ஒவ்வொன்றையும் மாதங்கள், நாட்கள் என்று இருக்கின்ற உயிர்களின் வாழ் நாளை அளந்து அருளுபவனை கண்டு தரிசிக்கும் இயல்போடு இருக்கின்ற நாயகனாகிய இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற என்றும் இளமையான இறைவியையும் உணர்ந்து தொழுதாலும், தமது உடலின் இயல்பை கடினமான சாதகங்களால் மாற்றி யோகத்தின் மூலம் உணர்ந்தாலும், இரண்டுமே ஒன்றான ஞான இலிங்கத்தின் வழியாகவே இருக்கின்றது.
