பாடல் #1591

பாடல் #1591: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

தாடந்த போதே தனைத்தந்த தெம்மிறை
வாடந்து ஞான வலியையுந் தந்திட்டு
வீடந்த மன்றியே யாள்கென விட்டருள்ப்
பாவின் முடிவைத்துப் பார்வேந்துந் தந்ததே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தாடநத பொதெ தனைததநத தெமமிறை
வாடநது ஞான வலியையுந தநதிடடு
வீடநத மனறியெ யாளகென விடடருளப
பாவின முடிவைததுப பாரவெநதுந தநததெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தாள் தந்த போதே தனை தந்தது எம் இறை
வாள் தந்து ஞான வலியையும் தந்து இட்டு
வீடு அந்தம் அன்றியே ஆள்க என விட்டு அருள்
ஆவின் முடி வைத்து பார் வேந்தும் தந்ததே.

பதப்பொருள்:

தாள் (குருவாக வந்து தமது திருவடியை) தந்த (அடியவரின் உள்ளத்திற்குள் தந்த) போதே (அந்த கணமே) தனை (தன்னையும்) தந்தது (தந்து அருளுகின்றார்) எம் (எமது) இறை (இறைவன்)
வாள் (அதனோடு அடியவருக்கு ஞானமாகிய வாளையும்) தந்து (தந்து) ஞான (அந்த ஞானத்தை) வலியையும் (உபயோகிக்கும் பக்குவத்தையும்) தந்து (கொடுத்து) இட்டு (வைத்து)
வீடு (அடியவருக்கு முக்தியாகிய எல்லையும் இல்லாமல்) அந்தம் (அவரின் உடலுக்கு அழிவும்) அன்றியே (இல்லாமல்) ஆள்க (இந்த உலகத்தையே ஆட்சி செய்) என (என்று) விட்டு (விட்டு) அருள் (தமது அருளை)
ஆவின் (அடியவரின் உயிருக்கு) முடி (கிரீடமாக) வைத்து (வைத்து அருளி) பார் (இந்த உலகத்தையே ஆளுகின்ற) வேந்தும் (அரச பதவியையும்) தந்ததே (தந்து அருளுகின்றார்).

விளக்கம்:

பாடல் #1590 இல் உள்ளபடி குருவாக வந்து தமது திருவடியை அடியவரின் உள்ளத்திற்குள் தந்த அந்த கணமே தன்னையும் தந்து அருளுகின்றார் எமது இறைவன். அதனோடு அடியவருக்கு ஞானமாகிய வாளையும் தந்து அந்த ஞானத்தை உபயோகிக்கும் பக்குவத்தையும் கொடுத்து வைத்து, அடியவருக்கு முக்தியாகிய எல்லையும் இல்லாமல் அவரின் உடலுக்கு அழிவும் இல்லாமல் இந்த உலகத்தையே ஆட்சி செய் என்று விட்டு, தமது அருளை அடியவரின் உயிருக்கு கிரீடமாக வைத்து அருளி, இந்த உலகத்தையே ஆளுகின்ற அரச பதவியையும் தந்து அருளுகின்றார்.

பாடல் #1590

பாடல் #1590: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

இசைந் தெழுமன்பி லெழுந்த படியில்
பசைந் திடுமீசனார் பாசத்து ளேகச்
சிவந்த குருவந்து சென்னிகை வைக்க
வுவந்த குருபத முள்ளத்து வந்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இசைந தெழுமனபி லெழுநத படியில
பசைந திடுமீசனார பாசதது ளெகச
சிவநத குருவநது செனனிகை வைகக
வுவநத குருபத முளளதது வநதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இசைந்து எழும் அன்பில் எழுந்த படியில்
பசைந்து இடும் ஈசனார் பாசத்து உள் ஏக
சிவந்த குரு வந்து சென்னி கை வைக்க
உவந்த குரு பதம் உள்ளத்து வந்தே.

பதப்பொருள்:

இசைந்து (இறையருள் சேர்ந்து இருக்கின்ற மனதில்) எழும் (எழுகின்ற) அன்பில் (உண்மையான அன்பில்) எழுந்த (இறைவன் எழுந்து) படியில் (அருளியதால்)
பசைந்து (அடியவரோடு ஒன்றாக சேர்ந்து) இடும் (இருக்கின்ற) ஈசனார் (இறைவனார்) பாசத்து (அடியவரின் பாசத் தளைகளை) உள் (அவருக்குள்ளிருந்து) ஏக (விலகும் போகும் படி செய்து)
சிவந்த (அருள் வடிவமான பரம்பொருளே) குரு (குருவாக) வந்து (வந்து) சென்னி (அடியவரின் தலையின் மேல்) கை (தமது திருக்கைகளை) வைக்க (வைத்து அருளும் போது)
உவந்த (அந்த அருளால் மகிழ்ந்து) குரு (குருவாக வந்திருக்கும்) பதம் (இறைவனின் திருவடிகளானது) உள்ளத்து (அடியவரின் உள்ளத்திற்குள்) வந்தே (வந்து வீற்றிருக்கும்).

விளக்கம்:

இறையருள் சேர்ந்து இருக்கின்ற மனதில் எழுகின்ற உண்மையான அன்பில் இறைவன் எழுந்து அருளியதால், அடியவரோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்ற இறைவனார் அடியவரின் பாசத் தளைகளை அவருக்குள்ளிருந்து விலகும் போகும் படி செய்து, அருள் வடிவமான பரம்பொருளே குருவாக வந்து அடியவரின் தலையின் மேல் தமது திருக்கைகளை வைத்து அருளுவார். அப்போது அந்த அருளால் மகிழ்ந்து இருக்கும் அடியவரின் உள்ளத்திற்குள் குருவாக வந்திருக்கும் இறைவனின் திருவடிகளானது வந்து வீற்றிருக்கும்.

பாடல் #1589

பாடல் #1589: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவ
னிருக்கின்ற தன்மையை யேது முணரார்
பிரிக்கின்ற விந்தப் பிணக்கறுத் தெல்லாங்
கரிக்கொன்ற வீசனைக் கண்டுகொண் டேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தரிககினற பலலுயிரக கெலலாந தலைவ
னிருககினற தனமையை யெது முணரார
பிரிககினற விநதப பிணககறுத தெலலாங
கரிககொனற வீசனைக கணடுகொண டெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தரிக்கின்ற பல் உயிர்க்கு எல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்த பிணக்கு அறுத்து எல்லாம்
கரி கொன்ற ஈசனை கண்டு கொண்டேனே.

பதப்பொருள்:

தரிக்கின்ற (வினைகளை தீர்ப்பதற்காக உடலை எடுத்து வருகின்ற) பல் (பல விதமான) உயிர்க்கு (உயிர்கள்) எல்லாம் (எல்லாவற்றுக்கும்) தலைவன் (தலைவனாகிய இறைவன்)
இருக்கின்ற (அந்த உயிர்களுக்குள்ளேயே மறைந்து இருக்கின்ற) தன்மையை (தன்மையை) ஏதும் (சிறிது அளவும்) உணரார் (உணராமல் இருக்கின்றார்கள் உலகத்தவர்கள்)
பிரிக்கின்ற (இறைவனையும் ஆன்மாவையும் மாயையால் பிரித்து வைத்து இருக்கின்ற) இந்த (இந்த) பிணக்கு (உலகப் பற்றுக்கள், ஆசைகள், பாசம் எனும் தளைகளை) அறுத்து (அறுத்து) எல்லாம் (அனைத்தையும் நீக்கி)
கரி (தான் எனும் அகங்காரத்தை) கொன்ற (கொன்று) ஈசனை (தனக்குள் இருப்பது ஈசனே என்பதையும் அவனே அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்றான் என்பதையும்) கண்டு (யான் கண்டு) கொண்டேனே (கொண்டேனே).

விளக்கம்:

வினைகளை தீர்ப்பதற்காக உடலை எடுத்து வருகின்ற பல விதமான உயிர்கள் எல்லாவற்றுக்கும் தலைவனாகிய இறைவன் அந்த உயிர்களுக்குள்ளேயே மறைந்து இருக்கின்ற தன்மையை சிறிது அளவும் உணராமல் இருக்கின்றார்கள் உலகத்தவர்கள். இறைவனையும் ஆன்மாவையும் மாயையால் பிரித்து வைத்து இருக்கின்ற இந்த உலகப் பற்றுக்கள், ஆசைகள், பாசம் எனும் தளைகளை எல்லாம் அறுத்து விட்டு தான் எனும் அகங்காரத்தை கொன்று தனக்குள் இருப்பது ஈசனே என்பதையும் அவனே அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்றான் என்பதையும் யான் கண்டு கொண்டேனே.

பாடல் #1588

பாடல் #1588: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

அறிந்துணர்ந் தேனிவ் வகலிட முற்றுஞ்
செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்
மறந்தொழிந் தேன்மதி மானிடர் வாழ்க்கை
பிறந்தொழிந் தேனிப் பிறவியை நானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறிநதுணரந தெனிவ வகலிட முறறுஞ
செறிநதுணரந தொதித திருவருள பெறறென
மறநதொழிந தெனமதி மானிடர வாழககை
பிறிநதொழிந தெனிப பிறவியை நானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறிந்து உணர்ந்தேன் இவ் அகல் இடம் முற்றும்
செறிந்து உணர்ந்து ஓதி திரு அருள் பெற்றேன்
மறந்து ஒழிந்தேன் மதி மானிடர் வாழ்க்கை
பிறிந்து ஒழிந்தேன் இப் பிறவியை நானே.

பதப்பொருள்:

அறிந்து (முழுமையாக அறிந்து) உணர்ந்தேன் (உணர்ந்து கொண்டேன்) இவ் (இந்த) அகல் (பரந்து விரிந்து இருக்கின்ற) இடம் (உலகம்) முற்றும் (முழுவதும் உள்ள பொருள்களை)
செறிந்து (அந்த அனைத்திற்குள்ளும் சிறப்பாக விளங்குகின்ற உண்மை பொருளான இறைவனை) உணர்ந்து (உணர்ந்து கொண்டு) ஓதி (அந்த இறைவனை ஓதி) திரு (திரு) அருள் (அருளையும்) பெற்றேன் (பெற்றுக் கொண்டேன்)
மறந்து (மறந்து) ஒழிந்தேன் (ஒழித்து விட்டேன்) மதி (தன்னுடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்து நடக்கின்ற) மானிடர் (பிற மனிதர்களின்) வாழ்க்கை (வாழ்க்கையை)
பிறிந்து (அவர்களை விட்டு பிரிந்து) ஒழிந்தேன் (உலகப் பற்றுக்களை எல்லாம் ஒழித்து விட்டேன்) இப் (இந்த) பிறவியை (பிறவியையும்) நானே (யானே).

விளக்கம்:

இந்த பரந்து விரிந்து இருக்கின்ற உலகம் முழுவதும் உள்ள பொருள்களை முழுமையாக அறிந்து உணர்ந்து கொண்டேன். அந்த அனைத்து பொருளுக்குள்ளும் சிறப்பாக விளங்குகின்ற உண்மை பொருளான இறைவனை உணர்ந்து கொண்டு அந்த இறைவனை ஓதி திரு அருளையும் பெற்றுக் கொண்டேன். பிற மனிதர்களின் வாழ்க்கையை தன்னுடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்து நடக்கின்ற தன்மையை மறந்து ஒழித்து விட்டேன். அவர்களை விட்டு பிரிந்து உலகப் பற்றுக்களை எல்லாம் ஒழித்து விட்டு இந்த பிறவியையும் நீங்கி விட்டேன்.

பாடல் #1587

பாடல் #1587: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

சிவமான ஞானந் தெளியவொண் சித்தி
சிவமான ஞானந் தெளியவு முத்தி
சிவமான ஞானஞ் சிவபர தேகுஞ்
சிவமான ஞானஞ் சிவானந்த நல்குமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சிவமான ஞானந தெளியவொண சிததி
சிவமான ஞானந தெளியவு முததி
சிவமான ஞானஞ சிவபர தெகுஞ
சிவமான ஞானஞ சிவானநத நலகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சிவம் ஆன ஞானம் தெளிய ஒண் சித்தி
சிவம் ஆன ஞானம் தெளியவும் முத்தி
சிவம் ஆன ஞானம் சிவ பரத்து ஏகும்
சிவம் ஆன ஞானம் சிவ ஆனந்தம் நல்குமே.

பதப்பொருள்:

சிவம் (சிவமாகவே) ஆன (ஆகிவிட்ட) ஞானம் (பேரறிவு ஞானத்தினால்) தெளிய (அடியவரின் மனமும் முழுமையாக தெளிவு பெற்று) ஒண் (அவரது மனம் இறைவனோடு ஒன்றி இருக்கும் போது) சித்தி (அனைத்து விதமான சித்திகளையும் பெற்று விடுவார்)
சிவம் (சிவமாகவே) ஆன (ஆகிவிட்ட) ஞானம் (பேரறிவு ஞானத்தினால்) தெளியவும் (அவரது மனம் தெளியும் போதே) முத்தி (அடியவர் விடுதலை எனும் முக்தி நிலையையும் பெற்று விடுவார்)
சிவம் (சிவமாகவே) ஆன (ஆகிவிட்ட) ஞானம் (பேரறிவு ஞானத்தினால்) சிவ (சிவத்தின்) பரத்து (பரம்பொருள் இருக்கின்ற பரவெளியில்) ஏகும் (தாமும் சென்று அடைகின்ற நிலையை அடியவர் பெற்று விடுவார்)
சிவம் (சிவமாகவே) ஆன (ஆகிவிட்ட) ஞானம் (பேரறிவு ஞானமே) சிவ (சிவத்தின்) ஆனந்தம் (பேரானந்த நிலையையும்) நல்குமே (அடியவருக்கு கொடுக்கும்).

விளக்கம்:

சிவமாகவே ஆகிவிட்ட பேரறிவு ஞானத்தினால் அடியவரின் மனமும் முழுமையாக தெளிவு பெற்று அவரது மனம் இறைவனோடு ஒன்றி இருக்கும் போது அனைத்து விதமான சித்திகளையும் பெற்று விடுவார். அப்படி அவரது மனம் தெளியும் போதே அடியவர் விடுதலை எனும் முக்தி நிலையையும் பெற்று விடுவார். அப்போது சிவத்தின் பரம்பொருள் இருக்கின்ற பரவெளியில் தாமும் சென்று அடைகின்ற நிலையையும் அடியவர் பெற்று விடுவார். அதன் பிறகு சிவமாகவே ஆகிவிட்ட பேரறிவு ஞானமே சிவத்தின் பேரானந்த நிலையையும் அடியவருக்கு கொடுக்கும்.