பாடல் #1583

பாடல் #1583: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

தானந்தி நீர்மையுட் சந்தித்த சீர்வைத்த
கோனந்தி யெந்தை குறிப்பறி வாரில்லை
வானந்தி யென்றும் கீழுமொரு வர்க்குத்
தானந்தி யங்கித் தனிச்சுட ராமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தானநதி நீரமையுட சநதிதத சீரவைதத
கொனநதி யெநதை குறிபபறி வாரிலலை
வானநதி யெனறும கிழுமொரு வரககுத
தானநதி யஙகித தனிசசுட ராமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தான் நந்தி நீர்மை உள் சந்தித்த சீர் வைத்த
கோன் நந்தி எந்தை குறிப்பு அறிவார் இல்லை
வான் நந்தி என்றும் கீழும் ஒருவர்க்கு
தான் நந்தி அங்கி தனி சுடர் ஆமே.

பதப்பொருள்:

தான் (அடியவர் தாமே) நந்தி (குருவாக இருக்கின்ற இறைவனின்) நீர்மை (மழை போன்ற அளவில்லாத தன்மையில் அடியவரின் பாத்திரம் போன்ற பக்குவத்துக்கு ஏற்ற தன்மைகளை அடையும் பொருட்டு) உள் (தமக்குள்) சந்தித்த (சந்தித்த இறைவன் தனது அருளால்) சீர் (சிறப்பாக) வைத்த (வைத்து அருளிய ஞானத்தின் மூலம்)
கோன் (வழிகாட்டியும் தவறு செய்தால் தண்டிக்கும் தலைவனாகவும்) நந்தி (குருவாகவும் இருக்கின்ற இறைவனாகிய) எந்தை (எமது தந்தையே) குறிப்பு (எனும் உண்மையை) அறிவார் (அறிந்து கொள்ளுகின்றவர்கள்) இல்லை (யாரும் இல்லை)
வான் (அவ்வாறு அறிந்து கொண்டவர்களுக்கு வானத்தில் இருந்து பொழியும் மழை போல) நந்தி (குருவாக வீற்றிருந்து அனைவருக்கும் அருளும் இறைவனே) என்றும் (என்றும்) கீழும் (இந்த உலகத்திலும்) ஒருவர்க்கு (இறைவனது உண்மை ஞானத்தை உணர்ந்த ஞானியாகிய ஒருவரின் பக்குவத்துக்கு ஏற்ற பாத்திரமாகி)
தான் (தாமே) நந்தி (குருவாக இருக்கின்ற இறைவனின் நிலையில் நின்று) அங்கி (அனைவருக்கும் நன்மை தரும் நெருப்பாகவும்) தனி (தனக்கு சரிசமமாக வேறு எதுவும் இல்லாத தனிப் பெரும்) சுடர் (சுடர் ஒளியாகவும்) ஆமே (இருக்கின்றார்).

விளக்கம்:

அடியவர் தாமே குருவாக இருக்கின்ற இறைவனின் மழை போன்ற அளவில்லாத தன்மையில் அடியவரின் பாத்திரம் போன்ற பக்குவத்துக்கு ஏற்ற தன்மைகளை அடையும் பொருட்டு தமக்குள் சந்தித்த இறைவன் தனது அருளால் சிறப்பாக வைத்து அருளிய ஞானத்தின் மூலம் வழிகாட்டியும் தவறு செய்தால் தண்டிக்கும் தலைவனாகவும் குருவாகவும் இருக்கின்ற இறைவனாகிய எமது தந்தையே எனும் உண்மையை அறிந்து கொள்ளுகின்றவர்கள் யாரும் இல்லை. அவ்வாறு அறிந்து கொண்டவர்களுக்கு வானத்தில் இருந்து பொழியும் மழை போல குருவாக வீற்றிருந்து அனைவருக்கும் அருளும் இறைவனே என்றும் இந்த உலகத்திலும் இறைவனது உண்மை ஞானத்தை உணர்ந்த ஞானியாகிய ஒருவரின் பக்குவத்துக்கு ஏற்ற பாத்திரமாகி தாமே குருவாக இருக்கின்ற இறைவனின் நிலையில் நின்று அனைவருக்கும் நன்மை தரும் நெருப்பாகவும் தனக்கு சரிசமமாக வேறு எதுவும் இல்லாத தனிப் பெரும் சுடர் ஒளியாகவும் இருக்கின்றார்.

கருத்து:

குருவாக இருக்கின்ற இறைவன் மழை போல தனது அருளை வழங்கினாலும் இந்த உலகத்தில் இறைவனின் அருளை உணர்ந்த ஞானிகளின் பக்குவத்துக்கு ஏற்றபடி யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களே அனைவருக்கும் நன்மை செய்யும் தனிப் பெரும் சுடரொளியாக திகழ்கின்றார்கள்.

பாடல் #1584

பாடல் #1584: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

திருவாகிச் சித்தியு முத்தியுஞ் சீர்மை
யருளா தருளு மயக்கறு வாய்மை
பொருளாய வேதாந்த போதமு நாத
னுருவருளா விடிலோர வொண் ணாதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

திருவாகிச சிததியு முததியுஞ சீரமை
யருளா தருளு மயககறு வாயமை
பொருளாய வெதாநத பொதமு நாத
னுருவருளா விடிலொர வொண ணாதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

திரு ஆகி சித்தியும் முத்தியும் சீர்மை
அருளாது அருளும் மயக்கம் அறு வாய்மை
பொருள் ஆய வேத அந்த போதமும் நாதன்
உரு அருளா விடில் ஒர ஒண்ணாதே.

பதப்பொருள்:

திரு (அடியவரின் உள்ளிருக்கும் ஜோதியே தெய்வமாக) ஆகி (வீற்றிருந்து) சித்தியும் (அனைத்து சித்திகளையும் கொடுப்பதும்) முத்தியும் (முக்தியாகிய விடுதலையையும் கொடுப்பதும்) சீர்மை (உள்ளிருந்து வழிகாட்டி இறைவனை அடைவதற்கான வழியில் செல்ல வைப்பதும்)
அருளாது (வெளிப்புறத்திலிருந்த அருளாமல்) அருளும் (குருவாக தமக்கு உள்ளிருந்தே அருளி) மயக்கம் (மாயையாகிய மயக்கத்தை) அறு (அறுப்பதும்) வாய்மை (உண்மை)
பொருள் (பொருளாக) ஆய (இருக்கின்ற) வேத (வேதத்தின்) அந்த (எல்லையாகிய) போதமும் (ஞானத்தை கொடுப்பதும் ஆகிய இவை அனைத்தும்) நாதன் (இறைவனே)
உரு (சிவகுருவாக அடியவரின் உள்ளுக்குள் இருந்து) அருளா (அருளாமல்) விடில் (போனால்) ஒர (அடியவரால் தாமாகவே எப்போதும் ஆராய்ந்து) ஒண்ணாதே (அறிந்து கொள்ளவோ அல்லது பெற்றுக் கொள்ளவோ முடியாது).

விளக்கம்:

அடியவரின் உள்ளிருக்கும் ஜோதியே தெய்வமாக வீற்றிருந்து அனைத்து சித்திகளையும் கொடுப்பதும் முக்தியாகிய விடுதலையையும் கொடுப்பதும் உள்ளிருந்து வழிகாட்டி இறைவனை அடைவதற்கான வழியில் செல்ல வைப்பதும் வெளிப்புறத்திலிருந்த அருளாமல் குருவாக தமக்கு உள்ளிருந்தே அருளி மாயையாகிய மயக்கத்தை அறுப்பதும் உண்மை பொருளாகிய வேதத்தின் எல்லையாகிய ஞானத்தை கொடுப்பதும் ஆகிய இவை அனைத்தும் இறைவனே சிவகுருவாக அடியவரின் உள்ளுக்குள் இருந்து அருளாமல் போனால், அடியவரால் தாமாகவே எப்போதும் ஆராய்ந்து அறிந்து கொள்ளவோ அல்லது பெற்றுக் கொள்ளவோ முடியாது.

பாடல் #1585

பாடல் #1585: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

பத்தியு ஞான வயிராக்க மும்பர
சித்திக்கு வித்தாஞ் சிவோகமே சேர்தலான்
முத்தியில் ஞான முளைத்தலா லம்முளை
சத்தி யருடரிற றானெளி தாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பததியு ஞான வயிராகக முமபர
சிததிககு விததாஞ சிவோகமெ செரதலான
முததியில ஞான முளைததலா லமமுளை
சததி யருடரிற றானெளி தாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பத்தியும் ஞான வயிராக்கமும் பர
சித்திக்கு வித்து ஆம் சிவ அகம் சேர்தல் ஆல்
முத்தியில் ஞானம் முளைத்தல் ஆல் அம் முளை
சத்தி அருள் தரில் தான் எளிது ஆமே.

பதப்பொருள்:

பத்தியும் (இறைவனிடம் மிகுந்த பக்தியும்) ஞான (அவனை அடைய வேண்டும் என்ற ஞானத்தில்) வயிராக்கமும் (மிகவும் உறுதியாக நிற்பதும்) பர (பரம் பொருளை)
சித்திக்கு (அடைவதற்கு) வித்து (விதையாக) ஆம் (இருக்கின்றது) சிவ (அதுவே சிவமே) அகம் (தாம் என்று உணர்ந்து) சேர்தல் (தமக்குள் இருக்கும் இறை சக்தியோடு ஒன்றாக சேர்வதை) ஆல் (செய்வதால்)
முத்தியில் (அதன் விளைவாக கிடைக்கின்ற முக்தி எனும் விடுதலை நிலைக்கு விதையாக இருந்து) ஞானம் (உண்மை அறிவான ஞானத்தையும்) முளைத்தல் (தமக்குள் முளைக்க வைக்கின்றது) ஆல் (ஆதலால்) அம் (அந்த ஞானத்தை) முளை (உருவாக வைப்பதற்கு)
சத்தி (தமக்குள் இருக்கின்ற இறை சக்தியானது) அருள் (தனது அருளை) தரில் (கொடுத்தால்) தான் (தான்) எளிது (எளிமையாக) ஆமே (நடக்கும். இல்லாவிட்டால் கடினமே).

விளக்கம்:

இறைவனிடம் மிகுந்த பக்தியும் அவனை அடைய வேண்டும் என்ற ஞானத்தில் மிகவும் உறுதியாக நிற்பதும் பரம் பொருளை அடைவதற்கு விதையாக இருக்கின்றது. இந்த விதையானது தமக்குள் இருக்கின்ற சிவமே தாம் என்பதை உணர்ந்து அந்த இறை சக்தியோடு ஒன்றாக சேர்ந்து இருப்பதால் தான் கிடைக்கின்றது. இந்த நிலையில் இருக்கும் போது கிடைக்கின்ற முக்தி எனும் விடுதலையில் உண்மை அறிவான ஞானத்தை இந்த விதையே தமக்குள் முளைக்க வைக்கின்றது. ஆனால் இந்த ஞானத்தை முளைக்க வைப்பதற்கு தமக்குள் இருக்கின்ற இறை சக்தியானது தனது அருளை கொடுத்தால் தான் எளிமையாக நடக்கும். இல்லாவிட்டால் கடினமே.

பாடல் #1586

பாடல் #1586: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

பின்னெய்த வைத்ததோ ரின்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதல்வனே யெம்மிறை
தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படு
மன்னெய்த வைத்த மனமது தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பினனெயத வைதததொ ரினபப பிறபபினை
முனனெயத வைதத முதலவனெ யெமமிறை
தனனெயதுங காலததுத தானெ வெளிபபடு
மனனெயத வைதத மனமது தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பின் எய்த வைத்தது ஓர் இன்ப பிறப்பினை
முன் எய்த வைத்த முதல்வனே எம் இறை
தன் எய்தும் காலத்து தானே வெளிப்படும்
மன் எய்த வைத்த மனம் அது தானே.

பதப்பொருள்:

பின் (அடியவர்கள் தாங்கள் செய்கின்ற சாதகங்களால் பெற்ற புண்ணியத்தின் பயனால் பிறகு எடுக்கின்ற ஏதோ ஒரு பிறவியில்) எய்த (அடையக் கூடிய துன்பமில்லாத இன்பமான பிறவியை இந்த பிறவியிலேயே அடையும் படி) வைத்தது (வைத்து அருளிய) ஓர் (ஒரு இறை சக்தியானது) இன்ப (இன்பத்தை அனுபவிக்கின்ற) பிறப்பினை (பிறவியை இந்த பிறவியிலேயே கொடுத்து அருளுவதும்)
முன் (இந்த பிறவியை எடுப்பதற்கு முன்பே) எய்த (இந்தப் பிறவியில் அந்த நிலையை அடையும் படி) வைத்த (வைத்து அருளியதும்) முதல்வனே (அனைத்திற்கும் முதல்வனாக இருக்கின்ற) எம் (எமது) இறை (இறைவனே ஆகும்)
தன் (அந்த இன்பமான பிறவியிலும் ஆசைகளின் மேல் செல்லாமல் இறைவன் மேல் எண்ணம் வைக்கின்ற நிலையை அடியவர் தாமும்) எய்தும் (அடையும்) காலத்து (காலத்தில்) தானே (இறைவன் தாமே) வெளிப்படும் (அடியவருக்குள்ளிருந்து வெளிப்பட்டு)
மன் (என்றும் அவனை விட்டு நீங்காமல் உறுதியாக அவனையே பற்றிக் கொண்டு) எய்த (இருக்கின்ற நிலையை அடையும் படி) வைத்த (வைத்து அருளிய) மனம் (மனமாகவும்) அது (அடியவருக்குள்ளிருந்து வெளிப்பட்ட அந்த இறை சக்தியே) தானே (இருக்கின்றது).

விளக்கம்:

அடியவர்கள் தாங்கள் செய்கின்ற சாதகங்களால் பெற்ற புண்ணியத்தின் பயனால் பிறகு எடுக்கின்ற ஏதோ ஒரு பிறவியில் அடையக் கூடிய துன்பமில்லாத இன்பமான பிறவியை இந்த பிறவியிலேயே அடையும் படி கொடுத்து அருளுவதும் இந்த பிறவியை எடுப்பதற்கு முன்பே அந்த நிலையை அடையும் படி வைத்து அருளியதும் அனைத்திற்கும் முதல்வனாக இருக்கின்ற எமது இறைவனே ஆகும். அந்த இன்பமான பிறவியிலும் ஆசைகளின் மேல் செல்லாமல் இறைவன் மேல் எண்ணம் வைக்கின்ற நிலையை அடியவர் தாமும் அடையும் காலத்தில் இறைவன் தாமே அடியவருக்குள்ளிருந்து வெளிப்பட்டு என்றும் அவனை விட்டு நீங்காமல் உறுதியாக அவனையே பற்றிக் கொண்டு இருக்கின்ற உறுதியான மன வலிமையை அடையும் படி செய்து அருளுகின்றார்.

பாடல் #1565

பாடல் #1565: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

மினக்குறி யாளனை வேதியர் வேதத்
தினக்குறி யாளனை ஆதிப் பிரானை
நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தின்
நயக்குறி காணிலர னெறியா குமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மினககுறி யாளனை வெதியர வெதத
தினககுறி யாளனை யாதிப பிரானை
நினைககுறி யாளனை ஞானக கொழுநதின
நயககுறி காணிலர னெறியா குமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மினல் குறி ஆளனை வேதியர் வேதத்தின்
அக் குறி ஆளனை ஆதி பிரானை
நினை குறி ஆளனை ஞான கொழுந்தின்
நய குறி காணில் அரன் நெறி ஆகுமே.

பதப்பொருள்:

மினல் (மின்னல் போன்ற ஒளியும் ஒலியும் சேர்ந்த) குறி (வடிவமாக) ஆளனை (இருப்பவனை) வேதியர் (அந்தணர்கள்) வேதத்தின் (ஓதுகின்ற வேதத்தின்)
அக் (உட்பொருள்) குறி (வடிவமாக) ஆளனை (இருப்பவனை) ஆதி (ஆதியிலிருந்தே) பிரானை (இருக்கின்ற தலைவனை)
நினை (அடியவர்கள் நினைக்கின்ற) குறி (வடிவமாகவே) ஆளனை (வந்திருந்து அருளுபவனை) ஞான (ஞானத்தின்) கொழுந்தின் (உச்சியான நிலையில்)
நய (அன்பின்) குறி (வடிவமாகவே) காணில் (கண்டு தரிசித்தால்) அரன் (அதுவே அவனை அடைவதற்கான) நெறி (வழி முறையாக) ஆகுமே (ஆகி விடும்).

விளக்கம்:

மின்னல் போன்ற ஒளியும் ஒலியும் சேர்ந்த வடிவமாக இருப்பவனை அந்தணர்கள் ஓதுகின்ற வேதத்தின் உட்பொருள் வடிவமாக இருப்பவனை ஆதியிலிருந்தே இருக்கின்ற தலைவனை அடியவர்கள் நினைக்கின்ற வடிவமாகவே வந்திருந்து அருளுபவனை ஞானத்தின் உச்சியான நிலையில் அன்பின் வடிவமாகவே கண்டு தரிசித்தால் அதுவே அவனை அடைவதற்கான வழி முறையாக ஆகி விடும்.

கருத்து:

இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளில் எந்த வழி முறையில் சென்றாலும் அனைத்திற்கும் பொதுவாக இருப்பது அன்பின் வழியாக இறைவனை அடைவதே ஆகும்.

பாடல் #1566

பாடல் #1566: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

ஆய்ந்துணர் வார்களான சாத்திரம் பல
வாய்ந்துணரா வகை நின்ற வரனெறி
யாய்ந்துணர் வாரரன் சேவடி கைதொழு
தேய்ந்துணரச் செய்வ தோரின்பமு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆயநதுணர வாரகளான சாததிரம பல
வாயநதுணரா வகை நினற வரனெறி
யாயநதுணர வாரரன செவடி கைதொழு
தெயநதுணரச செயவ தொரினபமு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆய்ந்து உணர்வார்கள் ஆன சாத்திரம் பல
ஆய்ந்து உணரா வகை நின்ற அரன் நெறி
ஆய்ந்து உணர்வார் அரன் சேவடி கை தொழுது
ஏய்ந்து உணர செய்வது ஓர் இன்பமும் ஆமே.

பதப்பொருள்:

ஆய்ந்து (ஆராய்ந்து) உணர்வார்கள் (உணர்ந்தவர்கள்) ஆன (அதற்கான) சாத்திரம் (விதி முறைகளை) பல (பல விதமாக கூறுகின்றார்கள்)
ஆய்ந்து (ஆனால் இந்த விதி முறைகளை ஆராய்ந்து) உணரா (உணர முடியாத) வகை (வகையில் தான்) நின்ற (நிற்கின்றது) அரன் (இறைவனை அடைவதற்கான) நெறி (உண்மையான வழி முறை)
ஆய்ந்து (அதனை தமக்குள் ஆராய்ந்து) உணர்வார் (உணர்ந்து கொண்டவர்கள்) அரன் (இறைவனின்) சேவடி (திருவடிகளை) கை (இரண்டு கைகளும் கூப்பி) தொழுது (தொழுது வணங்கி)
ஏய்ந்து (தம்முடைய தூய்மையான அன்பினால்) உணர (இறைவனை உணர்ந்து) செய்வது (கொள்ளுவதே) ஓர் (ஒரு) இன்பமும் (பேரின்பம்) ஆமே (ஆகும்).

விளக்கம்:

இறைவனை அடைய தாங்கள் கடைபிடிக்கும் ஒரு வழி முறையை ஆராய்ந்து உணர்ந்தவர்கள் அதற்கான விதி முறைகளை பல விதமாக கூறுகின்றார்கள். ஆனால் இந்த விதி முறைகளை ஆராய்ந்து உணர முடியாத வகையில் தான் நிற்கின்றது இறைவனை அடைவதற்கான உண்மையான வழி முறை. அதனை தமக்குள் ஆராய்ந்து உணர்ந்து கொண்டவர்கள் இறைவனின் திருவடிகளை இரண்டு கைகளும் கூப்பி தொழுது வணங்கி தம்முடைய தூய்மையான அன்பினால் இறைவனை உணர்ந்து கொள்ளுவதே ஒரு பேரின்பம் ஆகும்.

கருத்து:

இறைவனை அடைவதற்கு சமையங்கள் சொல்லுகின்ற பல விதமான விதி முறைகளை ஆராய்வதால் ஒரு பயனும் இல்லை. அன்பினால் தமக்குள் ஆராய்ந்து உணருவதே இறைவனை அடைவதற்கான உண்மையான வழியாகும்.

பாடல் #1567

பாடல் #1567: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

சைவச் சமையத் தனிநாயக னந்தி
யுய்ய வகுத்த தொருநெறி யொன்றுண்டு
தெய்வ வரனெறி சன்மார்கஞ் சேர்ந்தது
வையத் துள்ளவர்க்கு வகுத்துவைத் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சைவச சமையத தனிநாயக னநதி
யுயய வகுதத தொருநெறி யொனறுணடு
தெயவ வரனெறி சனமாரகஞ செரநதது
வையத துளளவரககு வகுததுவைத தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சைவ சமைய தனி நாயகன் நந்தி
உய்ய வகுத்தது ஒரு நெறி ஒன்று உண்டு
தெய்வ அரன் நெறி சன்மார்க்கம் சேர்ந்தது
வையத்து உள்ளவர்க்கு வகுத்து வைத்தானே.

பதப்பொருள்:

சைவ (சைவ) சமைய (சமயத்திற்கு) தனி (தனிப் பெரும்) நாயகன் (தலைவனாகவும்) நந்தி (குரு நாதனாகவும் இருக்கின்ற இறைவன்)
உய்ய (அனைத்து உயிர்களும் முக்தியை அடைவதற்காக) வகுத்தது (வகுத்து அருளிய) ஒரு (ஒரு) நெறி (வழி முறையில்) ஒன்று (அன்பு ஒன்று மட்டுமே) உண்டு (இருக்கின்றது)
தெய்வ (அதுவே தெய்வீகமான) அரன் (இறைவனை அடைவதற்கான) நெறி (வழி முறையாகும்) சன்மார்க்கம் (உண்மை வழி முறைகள் அனைத்தும்) சேர்ந்தது (அதனோடு சேர்ந்தே)
வையத்து (உலகத்தில்) உள்ளவர்க்கு (உள்ள அனைத்து உயிர்களுக்கும் அதனதன் தகுதிக்கு ஏற்றவாறு) வகுத்து (பல வழி முறைகளாக பிரித்து) வைத்தானே (வைத்து அருளினான் இறைவன்).

விளக்கம்:

சைவ சமயத்திற்கு தனிப் பெரும் தலைவனாகவும் குரு நாதனாகவும் இருக்கின்ற இறைவன் அனைத்து உயிர்களும் முக்தியை அடைவதற்காக வகுத்து அருளிய வழி முறையில் அன்பு ஒன்று மட்டுமே இருக்கின்றது. அதுவே தெய்வீகமான இறைவனை அடைவதற்கான வழி முறையாகும். உண்மை வழி முறைகள் அனைத்தும் அதனோடு சேர்ந்தே உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அதனதன் தகுதிக்கு ஏற்றவாறு பல வழி முறைகளாக பிரித்து வைத்து அருளினான் இறைவன்.

பாடல் #1568

பாடல் #1568: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

இத்தவ மத்தவ மென்றிரு பேரிடும்
பித்தரைக் காணில னாமெங்கள் பேர்நந்தி
யெத்தவ மாகிலெ னெங்கும் பிறக்கிலெ
னொத்துணர் வார்க்குஒல்லை யூர்புக லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இததவ மததவ மெனறிரு பெரிடும
பிததரைக காணில னாமெஙகள பெரநநதி
யெததவ மாகிலெ னெஙகும பிறககிலெ
னொததுணர வாரககுஒலலை யூரபுக லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இத் தவம் அத் தவம் என்று இரு பேர் இடும்
பித்தரை காண் இலன் ஆம் எங்கள் பேர் நந்தி
எத் தவம் ஆகில் என் எங்கும் பிறக்கில் என்
ஒத்து உணர்வார்க்கு ஒல்லை ஊர் புகல் ஆமே.

பதப்பொருள்:

இத் (இந்த) தவம் (தவம் சிறந்தது) அத் (அந்த) தவம் (தவம் சிறப்பு இல்லாதது) என்று (என்று) இரு (நன்மை தீமை என்று இரண்டு விதமான) பேர் (பெயர்களை) இடும் (வைக்கின்ற)
பித்தரை (பைத்தியக் காரர்களை) காண் (காண்பது) இலன் (இல்லாதவன்) ஆம் (ஆக இருக்கின்றான்) எங்கள் (எங்களின்) பேர் (பெருமை மிக்க) நந்தி (குருநாதனாகிய இறைவன்)
எத் (எந்த) தவம் (தவத்தை) ஆகில் (கடைபிடித்தால்) என் (என்ன?) எங்கும் (இந்த உலகத்தில் எந்த இடத்தில்) பிறக்கில் (எந்த உயிராக பிறந்திருந்தால்) என் (என்ன?)
ஒத்து (அனைத்து உயிர்களிலும் அன்பின் வடிவமாக இறைவன் ஒருவனே இருக்கின்றான் என்பதை) உணர்வார்க்கு (உணருபவர்களுக்கு) ஒல்லை (உடனடியாக) ஊர் (முக்திக்குள்) புகல் (நுழைய) ஆமே (முடியும்).

விளக்கம்:

இந்த தவம் சிறந்தது அந்த தவம் சிறப்பு இல்லாதது என்று நன்மை தீமை என்று இரண்டு விதமான பெயர்களை வைக்கின்ற பைத்தியக்காரர்களை எங்களின் பெருமை மிக்க குருநாதனாகிய இறைவன் கண்டு கொள்வது இல்லை. எந்த தவத்தை கடைபிடித்தால் என்ன? இந்த உலகத்தில் எந்த இடத்தில் எந்த உயிராக பிறந்திருந்தால் என்ன? அனைத்து உயிர்களிலும் அன்பின் வடிவமாக இறைவன் ஒருவனே இருக்கின்றான் என்பதை உணருபவர்களுக்கு உடனடியாக முக்திக்குள் நுழைய முடியும்.

பாடல் #1569

பாடல் #1569: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

ஆமே பிரான்முக மைந்தொடு மாருயி
ராமே பிரானுக் கதோமுக மானதா
மாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரரியல் பாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆமெ பிரானமுக மைநதொடு மாருயி
ராமெ பிரானுக கதொமுக மானதா
மாமெ பிரானுககுந தனசிர மாலைககும
நாமெ பிரானுககு நரரியல பாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆமே பிரான் முகம் ஐந்தொடும் ஆருயிர்
ஆமே பிரானுக்கு அதோ முகம் ஆனதாம்
ஆமே பிரானுக்கும் தன் சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரர் இயல்பு ஆமே.

பதப்பொருள்:

ஆமே (ஆமாம் இருக்கின்றது) பிரான் (தலைவனாகிய இறைவனுக்கு) முகம் (முகங்கள்) ஐந்தொடும் (ஐந்தோடு) ஆருயிர் (உலகில் உள்ள உயிர்கள் எல்லாம்)
ஆமே (ஆமாம் இருக்கின்றது) பிரானுக்கு (தலைவனாகிய இறைவனுக்கு) அதோ (கீழ் நோக்கி இருக்கின்ற ஆறாவது) முகம் (முகமான) ஆனதாம் (அதோ முகமாக இருக்கின்றது. ஆகவே அண்ட சராசரங்களும் அதிலுள்ள அனைத்து உயிர்களும் இறைவனுக்கு அதோ முகமாகவே இருக்கின்றன)
ஆமே (ஆமாம் இருக்கின்றது) பிரானுக்கும் (தலைவனாகிய இறைவனுக்கும்) தன் (தமது கழுத்தில் அணிந்திருக்கும்) சிர (மண்டையோட்டு) மாலைக்கும் (மாலையாக)
நாமே (உயிர்கள் பலவாறாக அழைக்கின்ற பெயர்களே இருக்கின்றது) பிரானுக்கு (இவையெல்லாம் தலைவனாகிய இறைவனுக்கு) நரர் (மனிதர்களாகிய உயிர்களின்) இயல்பு (இயல்பான மாயையினால்) ஆமே (இருக்கின்றனவே தவிர இறைவனுக்கு என்று தனியாக ஒரு பெயரோ உருவமோ அல்லது தன்மையோ கிடையாது.

விளக்கம்:

அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனுக்கு ஐந்து திரு முகங்களோடு ஆறாவது முகமான அதோ முகமாக அண்ட சராசரங்களும் அதிலுள்ள அனைத்து உயிர்களுமே இருக்கின்றன. இந்த உலகத்தில் இருக்கின்ற உயிர்களால் அழைக்கப் படுகின்ற பலவாறான பெயர்களே இறைவன் தனது திருக்கழுத்தில் அணிந்து இருக்கின்ற மண்டையோட்டு மாலையாக இருக்கின்றது. இவையெல்லாம் மாயையை தமது இயல்பாக கொண்ட மனிதர்களால் பாவனை செய்யப் பட்ட உருவகங்களே தவிர இறைவனுக்கு என்று தனியாக ஒரு பெயரோ உருவமோ அல்லது தன்மையோ கிடையாது.

கருத்து:

இறைவனை அடைவதற்கு இருக்கின்ற ஆறு விதமான வழிகளில் செல்லுகின்ற உயிர்கள் தங்களின் மாயையால் இறைவனுக்கு பல விதமான பெயர்களையும் உருவங்களையும் பாவனை செய்து வழி படுகின்றன. அனைத்து பெயர்களும் உருவங்களும் ஒரே பரம் பொருளையே குறிக்கின்றது.

இறைவனுடைய ஆறு முகங்கள்:

  1. ஈசானம்
  2. தற்புருடம்
  3. அகோரம்
  4. வாமதேவம்
  5. சத்யோ ஜாதம்
  6. அதோ முகம்

பாடல் #1570

பாடல் #1570: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

ஆதிப் பிரானுல கேழு மளந்தவ
னோதக் கடலு முயிர்களு மாய்நிற்கும்
பேதிப் பிலாமையி னின்றபரா சத்தி
யாதிகட் டெய்வமு மந்தமு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆதிப பிரானுல கெழு மளநதவ
னொதக கடலு முயிரகளு மாயநிறகும
பெதிப பிலாமையி னினறபரா சததி
யாதிகட டெயவமு மநதமு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆதி பிரான் உலகு ஏழும் அளந்தவன்
ஓத கடலும் உயிர்களும் ஆய் நிற்கும்
பேதிப்பு இலாமையில் நின்ற பராசத்தி
ஆதி கண் தெய்வமும் அந்தமும் ஆமே.

பதப்பொருள்:

ஆதி (ஆதியிலிருந்தே இருக்கின்ற) பிரான் (தலைவனாகிய இறைவனே) உலகு (உலகங்கள்) ஏழும் (ஏழையும்) அளந்தவன் (அவற்றின் தேவைக்கு ஏற்ப அளந்து படைத்தான்)
ஓத (அலைகளால் பேரிரைச்சல் கொண்டு இருக்கின்ற) கடலும் (கடல்களும்) உயிர்களும் (அது சூழ்ந்து நிற்கின்ற உலகத்தில் வாழ்கின்ற உயிர்களும்) ஆய் (ஆகிய அனைத்துமாக) நிற்கும் (அவனே நிற்கின்றான்)
பேதிப்பு (அவை அனைத்தில் இருந்தும் வேறு பட்டு) இலாமையில் (இல்லாதவனாக) நின்ற (ஒன்றாகவே கலந்து நிற்கின்ற இறைவனே) பராசத்தி (அசையும் சக்தியாகவும் இருந்து அனைத்தையும் இயக்குகின்றான்)
ஆதி (ஆதியிலிருந்தே) கண் (அனைத்தையும் பார்க்கின்றவனாகவும் பார்க்கப் படுகின்ற பொருளாகவும் இருக்கின்ற) தெய்வமும் (தெய்வமாகவும்) அந்தமும் (அனைத்தையும் ஊழிக் காலத்தில் அழிக்கின்ற தெய்வமாகவும்) ஆமே (அவனே இருக்கின்றான்).

விளக்கம்:

ஆதியிலிருந்தே இருக்கின்ற தலைவனாகிய இறைவனே ஏழு உலகங்களையும் அவற்றின் தேவைக்கு ஏற்ப அளந்து படைத்தான். அலைகளால் பேரிரைச்சல் கொண்டு இருக்கின்ற கடல்களும் அது சூழ்ந்து நிற்கின்ற உலகத்தில் வாழ்கின்ற உயிர்களும் ஆகிய அனைத்துமாக அவனே நிற்கின்றான். அவை அனைத்தில் இருந்தும் வேறு பட்டு இல்லாதவனாக ஒன்றாகவே கலந்து நிற்கின்ற இறைவனே அசையும் சக்தியாகவும் இருந்து அனைத்தையும் இயக்குகின்றான். ஆதியிலிருந்தே அனைத்தையும் பார்க்கின்றவனாகவும் பார்க்கப் படுகின்ற பொருளாகவும் இருக்கின்ற தெய்வமாகவும் அனைத்தையும் ஊழிக் காலத்தில் அழிக்கின்ற தெய்வமாகவும் அவனே இருக்கின்றான்.

கருத்து:

உயிர்களுக்குள் இருக்கின்ற இறைவனே உயிர்கள் வெளிப்புறத்தில் பார்க்கின்ற அனைத்துமாகவும் இருக்கின்றான் அனைத்தையும் இயக்குகின்றான் என்பதை உணர்ந்து வழி படுதலே அவனை அடைவதற்கு எளிதான வழியாகும்.