பாடல் #1392

பாடல் #1392: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

இருந்தவிச் சத்தி யிருநாலு கையிற்
பரந்தவிப் பூக்கிளி பாச மழுவாழ்
கரந்த கடகுடன் வில்லம்பு கொண்டங்
குரந்தங் கிருந்தவன் கூத்துகந் தாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இருநதவிச சததி யிருநாலு கையிற
பரநதவிப பூககிளி பாச மழுவாழ
கரநத கடகுடன விலலமபு கொணடங
குரநதங கிருநதவன கூத்துகந தாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இருந்த இச் சத்தி இரு நாலு கையில்
பரந்த இப் பூ கிளி பாசம் மழு வாள்
கரந்திடும் கடகு உடன் வில் அம்பு கொண்டு அங்கு
உரந்து அங்கு இருந்தவள் கூத்து உகந்தாளே.

பதப்பொருள்:

இருந்த (சாதகரின் எண்ணங்கள் இல்லாத மனதிற்குள் இன்பமுடன் இருந்த) இச் (இந்த) சத்தி (இறைவியானவள்) இரு (இரண்டும்) நாலு (நான்கும் பெருக்கி வரும் மெத்தம் எட்டு எண்ணிக்கையில் இருக்கும்) கையில் (தனது திருக்கரங்களில்)
பரந்த (பரந்து விரிந்து இருக்கும்) இப் (இந்த) பூ (பூமித் தாமரையையும்) கிளி (ஆன்மாவாகிய கிளியையும்) பாசம் (பாசமாகிய கயிறையும்) மழு (அந்த பாசத்தை அறுக்கின்ற மழுவையும்) வாள் (உலகத்தை சார்ந்து இருக்கின்ற [உணவு, நீர், காற்று] பகைகளை வாளால்)
கரந்திடும் (அழிக்கின்ற படியும்) கடகு (காக்கின்ற கேடயத்தையும்) உடன் (அதனுடன் சேர்ந்து) வில் (இனி வரும் பிறவிகளை அழிக்கின்ற வில்லையும்) அம்பு (அம்பையும்) கொண்டு (ஏந்திக் கொண்டு) அங்கு (சாதகருக்குள்)
உரந்து (முழுவதும் பரவி) அங்கு (அவருக்குள்ளேயே) இருந்தவள் (வீற்றிருந்த அவள்) கூத்து (சாதகரின் அனைத்து கர்மங்களையும் அழிக்கின்ற தாண்டவத்தை) உகந்தாளே (விருப்பமுடன் ஆடுகின்றாள்).

விளக்கம்:

பாடல் #1391 இல் உள்ளபடி சாதகரின் எண்ணங்கள் இல்லாத மனதிற்குள் இன்பமுடன் இருந்த இந்த இறைவியானவள் தனது எட்டு திருக்கரங்களிலும் 1. பரந்து விரிந்து இருக்கும் இந்த பூமித் தாமரையையும், 2. ஆன்மாவாகிய கிளியையும், 3. பாசமாகிய கயிறையும், 4. அந்த பாசத்தை அறுக்கின்ற மழுவையும், 5. உலகத்தை சார்ந்து இருக்கின்ற உணவு, நீர், காற்று ஆகிய பகைகளை அழிக்கின்ற வாளையும், 6. காக்கின்ற கேடயத்தையும், 7. அதனுடன் சேர்ந்து இனி வரும் பிறவிகளை அழிக்கின்ற வில்லையும், 8. அம்பையும் ஏந்திக் கொண்டு சாதகருக்குள் முழுவதும் பரவி அவருக்குள்ளேயே வீற்றிருந்து சாதகரின் அனைத்து கர்மங்களையும் அழிக்கின்ற தாண்டவத்தை விருப்பமுடன் ஆடுகின்றாள்.

பாடல் #1391

பாடல் #1391: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கண்டவிச் சத்தி யிருதய பங்கயங்
கொண்டவித் தத்துவ நாயகி யானவள்
பண்டையவ் வாயுப் பகையை யறுத்திட
வின்றென் மனத்து ளினிதிருந் தாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கணடவிச சததி யிருதய பஙகயங
கொணடவித தததுவ நாயகி யானவள
பணடையவ வாயுப பகையை யறுததிட
வினறென மனதது ளினிதிருந தாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கண்ட இச் சத்தி இருதய பங்கயம்
கொண்ட இத் தத்துவ நாயகி ஆனவள்
பண்டை அவ் வாயு பகையை அறுத்திட
இன்று என் மனத்துள் இனிது இருந்தாளே.

பதப்பொருள்:

கண்ட (சாதகர் தமக்குள் தரிசித்த) இச் (இந்த) சத்தி (இறைவியானவள்) இருதய (சாதகரின் இதயத்) பங்கயம் (தாமரையை தனது இருப்பிடமாக)
கொண்ட (கொண்டு வீற்றிருக்கும்) இத் (இந்த) தத்துவ (தத்துவங்களுக்கு எல்லாம்) நாயகி (தலைவியாக) ஆனவள் (இருக்கின்றாள்)
பண்டை (ஆதியிலிருந்தே) அவ் (உயிர்களைத் தொடர்ந்து வருகின்ற) வாயு (மனமாகிய) பகையை (எண்ணங்களை) அறுத்திட (முழுவதுமாக நீக்கி விட்டால்)
இன்று (முழுவதுமாக நீங்கிய அன்றே) என் (சாதகரின்) மனத்துள் (எண்ணங்கள் இல்லாத மனதிற்குள்) இனிது (இறைவியானவள் இன்பமுடன்) இருந்தாளே (வீற்றிருப்பாள்).

விளக்கம்:

பாடல் #1390 இல் உள்ளபடி சாதகர் தமக்குள் தரிசித்த இந்த இறைவியானவள் சாதகரின் இதயத் தாமரையை தனது இருப்பிடமாக கொண்டு வீற்றிருப்பாள். அப்படி அவள் வீற்றிருக்கும் முறைக்கு வேண்டிய அனைத்து தத்துவங்களுக்கும் அவளே தலைவியாக ஆகின்றாள். அவளை எண்ணிக் கொண்டே இருந்து ஆதியிலிருந்தே உயிர்களைத் தொடர்ந்து வருகின்ற மனமாகிய எண்ணங்களை சாதகர் தம்மிடமிருந்து முழுவதுமாக நீக்கி விட்டால் அது முழுவதுமாக நீங்கிய அன்றே சாதகரின் எண்ணங்கள் இல்லாத மனதிற்குள் இறைவியானவள் இன்பமுடன் வீற்றிருப்பாள்.

பாடல் #1390

பாடல் #1390: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நின்ற விச்சத்தி நிலைபெற நின்றிடிற்
கண்டவிவ் வன்னி கலந்திடு மோராண்டிற்
கொண்ட விரதநீர் குன்றாம னின்றிடின்
மன்றினி லாடு மணியது காணுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நினற விசசததி நிலைபெற நினறிடிற
கணடவிவ வனனி கலநதிடு மொராணடிற
கொணட விரதநீர குனறாம னினறிடின
மனறினி லாடு மணியது காணுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நின்ற இச் சத்தி நிலை பெற நின்றிடில்
கண்ட இவ் வன்னி கலந்திடும் ஓர் ஆண்டில்
கொண்ட விரத நீர் குன்றாமல் நின்றிடில்
மன்றினில் ஆடும் மணி அது காணுமே.

பதப்பொருள்:

நின்ற (ஐம்பத்து இருவரும் ஒன்றாக ஆகி நிற்கின்ற) இச் (இந்த) சத்தி (இறைவியானவள்) நிலை (சாதகருக்குள் நிலையாக) பெற (உறுதியுடன்) நின்றிடில் (நின்று விட்டால்)
கண்ட (சாதகர் தமக்குள் தரிசித்த) இவ் (இந்த) வன்னி (அக்னி வடிவான இறைவியோடு) கலந்திடும் (சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரமும் கலந்து விடும்) ஓர் (ஒரு) ஆண்டில் (வருடம் உறுதியுடன் சாதகத்தை செய்தால்)
கொண்ட (அதன் பிறகும் தாம் எடுத்துக் கொண்ட நவாக்கிரி சக்கரத்தின்) விரத (சாதகத்தை) நீர் (நீங்கள்) குன்றாமல் (ஒரு குறையும் இல்லாமல்) நின்றிடில் (தொடர்ந்து செய்து வந்தால்)
மன்றினில் (சாதகருக்குள் இருக்கும் அம்பலத்தில்) ஆடும் (ஒன்றாக ஆடுகின்ற) மணி (வைரக் கல்லாகிய இறைவனையும் அதன் ஒளியாகிய சக்தியையும்) அது (தமக்குள்) காணுமே (தரிசிக்கலாம்).

விளக்கம்:

பாடல் #1389 இல் உள்ளபடி ஐம்பத்து இருவரும் ஒன்றாக ஆகி நிற்கின்ற இந்த இறைவியானவள் சாதகருக்குள் நிலையாக உறுதியுடன் ஒரு வருடம் நின்று விட்டால் சாதகர் தமக்குள் தரிசித்த இந்த அக்னி வடிவான இறைவியோடு சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரமும் கலந்து விடும். அதன் பிறகும் தாம் எடுத்துக் கொண்ட நவாக்கிரி சக்கர சாதகத்தை சாதகர் ஒரு குறையும் இல்லாமல் தொடர்ந்து செய்து வந்தால் அவருக்குள் இருக்கும் அம்பலத்தில் ஒன்றாக ஆடுகின்ற பாடல் #383 இல் உள்ளபடி வைரக் கல்லாகிய இறைவனையும் அதன் ஒளியாகிய சக்தியையும் தரிசிக்கலாம்.

பாடல் #1389

பாடல் #1389: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

காரணி சத்திக ளைம்பத் திரண்டெனக்
காரணி கன்னிக ளைம்பத் திருவராய்க்
காரணி சக்கரத் துள்ளே கரந்தெங்குங்
காரணி தன்னரு ளாகிநின் றாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காரணி சததிக ளைமபத திரணடெனக
காரணி கனனிக ளைமபத திருவராயக
காரணி சககரத துளளெ கரநதெஙகுங
காரணி தனனரு ளாகிநின றாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

காரணி சத்திகள் ஐம் பத்து இரண்டு என
காரணி கன்னிகள் ஐம் பத்து இருவராய்
காரணி சக்கரத்து உள்ளே கரந்து எங்கும்
காரணி தன் அருள் ஆகி நின்றாளே.

பதப்பொருள்:

காரணி (சாதகர் தமது மலங்களும் கர்மங்களும் நீங்கி இறைவனை அடைவதற்கு காரணமாக இருக்கின்ற) சத்திகள் (சக்திகளானது) ஐம் (ஐந்தும்) பத்து (பத்தும்) இரண்டு (இரண்டும் கூட்டி மொத்தம் ஐம்பத்து இரண்டு) என (பேர்களாக பிரிந்து இருக்கின்றனர்)
காரணி (சாதகர் தமது மலங்களும் கர்மங்களும் நீங்கி இறைவனை அடைவதற்கு காரணமாக இருக்கின்ற) கன்னிகள் (என்றும் இளமையுடன் சிறிதும் அருளில் குறைவின்றி இருக்கின்ற சக்திகள்) ஐம் (ஐந்தும்) பத்து (பத்தும்) இருவராய் (இரண்டும் கூட்டி மொத்தம் ஐம்பத்து இரண்டு பேர்களாக இருக்கின்றனர்)
காரணி (சாதகர் தமது மலங்களும் கர்மங்களும் நீங்கி இறைவனை அடைவதற்கு காரணமாக இருக்கின்ற) சக்கரத்து (நவாக்கிரி சக்கரத்திற்கு) உள்ளே (உள்ளேயே நின்று) கரந்து (சாதகரின் மும்மலங்களாகிய அழுக்குகளையும் இனி வரும் பிறவிகளுக்கு காரணமாக இருக்கின்ற கர்மங்களையும்) எங்கும் (முழுவதுமாக நீக்கி இறைவியிடமே சேர்த்து விடுகின்றனர்)
காரணி (சாதகர் தமது மலங்களும் கர்மங்களும் நீங்கி இறைவனை அடைவதற்கு காரணமாக இருக்கின்ற) தன் (இறைவியே தனது) அருள் (பேரருளால்) ஆகி (ஐம்பத்து இருவரும் ஒன்றாக ஆகி) நின்றாளே (நிற்கின்றாள்).

விளக்கம்:

பாடல் #1388 இல் உள்ளபடி சாதகர் தமது மலங்களும் கர்மங்களும் நீங்கி இறைவனை அடைவதற்கு காரணமாக இருக்கின்ற சக்திகளானது மொத்தம் ஐம்பத்து இரண்டு பேர்களாக பிரிந்து இருக்கின்றனர். இந்த சக்திகள் என்றும் இளமையுடன் சிறிதும் அருளில் குறைவின்றி ஐம்பத்து இரண்டு பேர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் நவாக்கிரி சக்கரத்திற்கு உள்ளேயே நின்று சாதகரின் மும்மலங்களாகிய அழுக்குகளையும் இனி வரும் பிறவிகளுக்கு காரணமாக இருக்கின்ற கர்மங்களையும் முழுவதுமாக நீக்கி இறைவியிடமே சேர்த்து விடுகின்றனர். சாதகர் இறைவனை அடைவதற்கு காரணமாக இருக்கின்ற இறைவியே தனது பேரருளால் இந்த ஐம்பத்து இரண்டு சக்திகளும் ஒன்றாக ஆகி நிற்கின்றாள்.