பாடல் #1383

பாடல் #1383: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

பாசம தாகிய வேரை யறுத்திட்டு
நேசம தாக நினைந்திடு மும்முளே
நாசம தெல்லா நடந்திடு மையாண்டிற்
காசினி மேலமர் கண்ணுத லாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பாசம தாகிய வெரை யறுததிடடு
நெசம தாக நினைநதிடு முமமுளெ
நாசம தெலலா நடநதிடு மையாணடிற
காசினி மெலமர கணணுத லாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பாசம் அது ஆகிய வேரை அறுத்து இட்டு
நேசம் அது ஆக நினைத்து இடும் உம் உள்ளே
நாசம் அது எல்லாம் நடந்திடும் ஐ ஆண்டில்
காசினி மேல் அமர் கண் நுதல் ஆகுமே.

பதப்பொருள்:

பாசம் (பாசம் என்கிற) அது (உலகப் பற்றுக்கள்) ஆகிய (ஆக இருக்கின்ற ஆசையை) வேரை (வேரோடு) அறுத்து (அறுத்து) இட்டு (எறிந்து விட்டு)
நேசம் (உண்மையான அன்பையே) அது (சிவம்) ஆக (என்று) நினைத்து (நினைத்துக் கொண்டு) இடும் (வைத்து) உம் (சாதகர் தமக்கு) உள்ளே (உள்ளேயே தியானித்து இருந்தால்)
நாசம் (தீமையானது) அது (என்று உலகத்தில் இருக்கின்ற) எல்லாம் (அனைத்தும்) நடந்திடும் (சாதகரை விட்டு விலகி விடும்) ஐ (ஐந்து) ஆண்டில் (ஆண்டுகளில்)
காசினி (பூமிக்கு) மேல் (மேலாக) அமர் (அமர்ந்திருக்கின்ற சாதகர்) கண் (ஞானக் கண்ணை) நுதல் (நெற்றியில் வைத்திருக்கும் சிவபெருமானாகவே) ஆகுமே (ஆகிவிடுவார்).

விளக்கம்:

பாடல் #1382 இல் உள்ளபடி இறைவியானவள் தனது திருக்கரங்களில் ஏந்தி இருக்கும் பாசம் என்கிற கயிறாக இருக்கின்ற உலகப் பற்றுக்கள் எனும் ஆசையை வேரோடு அறுத்து எறிந்து விட்டு உண்மையான அன்பையே சிவமாக நினைத்துக் கொண்டு சாதகர் தமக்கு உள்ளே சிவமான அன்பையே வைத்து தியானித்து இருக்க வேண்டும். அப்படி தியானித்து இருந்தால் ஐந்து ஆண்டுகளில் தீமையானது என்று உலகத்தில் இருக்கின்ற அனைத்தும் சாதகரை விட்டு விலகி விடும். அதன் பிறகு பூமிக்கு மேலாக அமர்ந்திருக்கின்ற சாதகர் ஞானக் கண்ணை நெற்றியில் வைத்திருக்கும் சிவபெருமானாகவே ஆகிவிடுவார்.

பாடல் #1384

பாடல் #1384: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி
பண்ணுயர் நாதம் பகையற நின்றிடில்
விண்ணமர் சோதி விளங்கிடி றீங்கார
மண்ணுடை நாயகி மண்டல மாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கணணுடை நாயகி தனனரு ளாமவழி
பணணுயர நாதம பகையற நினறிடில
விணணமர சொதி விளஙகிடி றீஙகார
மணணுடை நாயகி மணடல மாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கண் உடை நாயகி தன் அருள் ஆம் வழி
பண் உயர் நாதம் பகை அற நின்று இடில்
விண் அமர் சோதி விளங்க இடில் ஹ்ரீம் காரம்
மண் உடை நாயகி மண்டலம் ஆகுமே.

பதப்பொருள்:

கண் (ஞானக் கண்ணை) உடை (நெற்றியில் உடைய) நாயகி (இறைவியானவள்) தன் (தனது) அருள் (திருவருளால்) ஆம் (அருளிய) வழி (வழியின் படியே நடந்து)
பண் (இசைகளிலே) உயர் (உயர்வான) நாதம் (நாதமாகிய இறைவனை) பகை (அடைவதற்கு தடையாக இருக்கின்ற அகங்கார எண்ணங்கள்) அற (இல்லாமல்) நின்று (தமக்குள்) இடில் (வைத்து இருந்தால்)
விண் (விண்ணுலகத்தில்) அமர் (வீற்றிருக்கும்) சோதி (பேரொளியான இறைவன்) விளங்க (தமக்குள் வீற்றிருக்கும் படி) இடில் (சாதகர் வைத்து) ஹ்ரீம் (‘ஹ்ரீம்’ எனும்) காரம் (பீஜத்திலேயே தியானித்து இருந்தால்)
மண் (பூமியை) உடை (உடையவளாகிய) நாயகி (இறைவியின்) மண்டலம் (சக்தி மண்டலமாகவே) ஆகுமே (சாதகரைச் சுற்றி இருக்கும்).

விளக்கம்:

பாடல் #1383 இல் உள்ளபடி தனது நெற்றியில் ஞானக் கண்ணை உடைய இறைவியானவளின் திருவருளால் அருளிய வழியின் படியே நடந்து இசைகளிலே உயர்வான நாதமாகிய இறைவனை அடைவதற்கு தடையாக இருக்கின்ற அகங்கார எண்ணங்கள் இல்லாமல் தமக்குள் வைத்து இருந்தால் விண்ணுலகத்தில் வீற்றிருக்கும் பேரொளியான இறைவன் தமக்குள் வீற்றிருக்கும் படி சாதகர் வைத்து ‘ஹ்ரீம்’ எனும் பீஜத்திலேயே தியானித்து இருந்தால் பூமியை உடையவளாகிய இறைவியின் சக்தி மண்டலமாகவே சாதகரைச் சுற்றி இருக்கும்.

பாடல் #1385

பாடல் #1385: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

மண்டலத் துள்ளே மலர்ந்தெழு தீபத்தைக்
கண்டகத் துள்ளே கருதி யிருந்திடும்
விண்டகத் துள்ளே விளங்கி வருதலாற்
றண்டகத் துள்ளவை தாங்கலு மாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மணடலத துளளெ மலரநதெழு தீபததைக
கணடகத துளளெ கருதி யிருநதிடும
விணடகத துளளெ விளஙகி வருதலாற
றணடகத துளளவை தாஙகலு மாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மண்டலத்து உள்ளே மலர்ந்து எழு தீபத்தை
கண்டு அகத்து உள்ளே கருதி இருந்திடும்
விண்டு அகத்து உள்ளே விளங்கி வருதலால்
தண்டு அகத்து உள்ளவை தாங்கலும் ஆமே.

பதப்பொருள்:

மண்டலத்து (சாதகரைச் சுற்றி இருக்கின்ற சக்தி மண்டலத்தின்) உள்ளே (உள்ளிருந்து) மலர்ந்து (மலர் போல விரிந்து) எழு (எழுகின்ற) தீபத்தை (ஜோதியை)
கண்டு (தரிசித்து) அகத்து (அதைத் தமக்கு) உள்ளே (உள்ளே வைத்து) கருதி (அந்த ஜோதியும் தானும் வேறு வேறு இல்லை எனும் எண்ணத்திலேயே) இருந்திடும் (தியானத்தில் வீற்றிருந்தால்)
விண்டு (பரந்து விரிந்து இருக்கின்ற ஆகாயத்தில்) அகத்து (இருக்கின்ற அனைத்து தத்துவங்களையும்) உள்ளே (தமக்கு உள்ளேயே) விளங்கி (தெளிவாகப் புரிந்து கொள்ளும் படி) வருதலால் (கிடைக்கப் பெறுவதால்)
தண்டு (அதன் பிறகு சாதகரின் உடலுக்கு நடுவில் இருக்கின்ற சுழுமுனை நாடியின்) அகத்து (அடியிலிருந்து உச்சி வரை இருக்கின்ற இடத்திற்கு) உள் (உள்ளேயே) அவை (பரந்து விரிந்து இருக்கின்ற ஆகாயத்தில் இருக்கின்ற அனைத்தையும்) தாங்கலும் (தாங்கிக் கொண்டு வீற்றிருக்கின்ற இயல்பை) ஆமே (சாதகர் அடைந்து விடுவார்).

விளக்கம்:

பாடல் #1384 இல் உள்ளபடி சாதகரைச் சுற்றி இருக்கின்ற சக்தி மண்டலத்தின் உள்ளிருந்து மலர் போல விரிந்து எழுகின்ற ஜோதியை தரிசித்து அதைத் தமக்கு உள்ளே வைத்து அந்த ஜோதியும் தானும் வேறு வேறு இல்லை எனும் எண்ணத்திலேயே தியானத்தில் வீற்றிருந்தால் பரந்து விரிந்து இருக்கின்ற ஆகாயத்தில் இருக்கின்ற அனைத்து தத்துவங்களையும் தமக்கு உள்ளேயே தெளிவாகப் புரிந்து கொள்ளும் படி கிடைக்கப் பெறும். அதன் பிறகு சாதகரின் உடலுக்கு நடுவில் இருக்கின்ற சுழுமுனை நாடியின் அடியிலிருந்து உச்சி வரை இருக்கின்ற இடத்திற்கு உள்ளேயே பரந்து விரிந்து இருக்கின்ற ஆகாயத்தில் இருக்கின்ற அனைத்தையும் தாங்கிக் கொண்டு வீற்றிருக்கின்ற இயல்பை சாதகர் அடைந்து விடுவார்.

பாடல் #1386

பாடல் #1386: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தாங்கிய நாவித் தடமலர் மண்டலத்
தோங்கி யெழுங்கலைக் குள்ளுணர் வானவ
ளேங்க வரும்பிறப் பெண்ணி யறுத்திட
வாங்கிய னாதம் வலியுட னாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தாஙகிய நாவித தடமலர மணடலத
தொஙகி யெழுஙகலைக குளளுணர வானவ
ளெஙக வருமபிறப பெணணி யறுததிட
வாஙகிய னாதம வலியுட னாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தாங்கிய நாவி தட மலர் மண்டலத்து
ஓங்கி எழும் கலைக்கு உள் உணர்வு ஆனவள்
ஏங்க வரும் பிறப்பு எண்ணி அறுத்திட
வாங்கிய நாதம் வலியுடன் ஆகுமே.

பதப்பொருள்:

தாங்கிய (ஆகாயத்தில் இருக்கின்ற அனைத்தையும் தமக்குள்ளே தாங்கி இருக்கின்ற) நாவி (சாதகரின் தொப்புள் கொடியிலிருக்கும் மணிப்பூரகச் சக்கரத்தின்) தட (தாமரை) மலர் (மலர் போன்ற) மண்டலத்து (மண்டலத்தில் இருந்து)
ஓங்கி (வேகமாக மேலே) எழும் (எழுந்து வரும்) கலைக்கு (நவாக்கிரி சக்கரத்தின் கலைக்கு) உள் (உள்ளே இருக்கின்ற) உணர்வு (உணர்வு வடிவமாக) ஆனவள் (இருக்கின்ற இறைவியானவளை)
ஏங்க (இனி வருகின்ற பிறவிகள் நீங்கி எப்போது சென்று அடைவோமோ என்று ஏங்கி இருந்து) வரும் (இனிமேல் வருகின்ற) பிறப்பு (பிறப்புகளை எல்லாம்) எண்ணி (இறைவியையே எண்ணி இருந்து) அறுத்திட (அறுத்து விட)
வாங்கிய (அதன் பிறகு சாதகர் தமக்குள் பேரன்பின் உருவமாக வைத்திருந்த) நாதம் (நாத வடிவான இறைவன்) வலியுடன் (மிகவும் வலிமையுடன்) ஆகுமே (வீற்றிருப்பார்).

விளக்கம்:

பாடல் #1385 இல் உள்ளபடி பரந்து விரிந்து இருக்கின்ற ஆகாயத்தில் இருக்கின்ற அனைத்தையும் தமக்குள்ளே தாங்கி இருக்கின்ற சாதகரின் தொப்புள் கொடியிலிருக்கும் மணிப்பூரகச் சக்கரத்தின் தாமரை மலர் போன்ற மண்டலத்தில் இருந்து வேகமாக மேலே எழுந்து வரும் நவாக்கிரி சக்கரத்தின் கலைக்கு உள்ளே இருக்கின்ற உணர்வு வடிவமாக இருக்கின்ற இறைவியானவளை இனி வருகின்ற பிறவிகள் நீங்கி எப்போது சென்று அடைவோமோ என்று ஏங்கி இருந்து இனிமேல் வருகின்ற பிறப்புகளை எல்லாம் இறைவியையே எண்ணி இருந்து அறுத்து விட வேண்டும். அதன் பிறகு பாடல் #1383 இல் உள்ளபடி சாதகர் தமக்குள் பேரன்பின் உருவமாக வைத்திருந்த நாத வடிவான இறைவன் மிகவும் வலிமையுடன் வீற்றிருப்பார்.

பாடல் #1387

பாடல் #1387: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நாவுக்கு நாயகி நன்மணிப் பூணாரம்
பூவுக்கு நாயகி பொன்முடி யாடையாள்
பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்த
ளாவுக்கு நாயகி யங்கமர்ந் தாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நாவுககு நாயகி நனமணிப பூணாரம
பூவுககு நாயகி பொனமுடி யாடையாள
பாவுககு நாயகி பாலொதத வணணதத
ளாவுககு நாயகி யஙகமரந தாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நாவுக்கு நாயகி நல் மணி பூண் ஆரம்
பூவுக்கு நாயகி பொன் முடி ஆடை ஆள்
பாவுக்கு நாயகி பால் ஒத்த வண்ணத்தள்
ஆவுக்கு நாயகி அங்கு அமர்ந்தாளே.

பதப்பொருள்:

நாவுக்கு (நாக்கிற்கு / நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற பீஜ மந்திரங்களை சொல்லும் சாதகரின் வாக்கிற்கு) நாயகி (தலைவியான இறைவி) நல் (நல்ல / நன்மையைக் கொடுக்கும்) மணி (நவரத்தினங்களை / பிரகாசத்தினால் ஈர்க்கின்ற) பூண் (பதித்து இருக்கும் / தேஜஸை) ஆரம் (மாலையை அணிந்து இருக்கின்றாள் / கொண்டு விளங்குகின்றாள்)
பூவுக்கு (மலர் வடிவான / போல மென்மையான சக்கரத்திற்கு) நாயகி (தலைவியான இறைவி) பொன் (தங்கம் போல் தகதகக்கும் / சாதகருக்கு உள்ளிருந்து பிரகாசமாக) முடி (தலை முடியிலிருந்து கீழ் வரை) ஆடை (ஆடையை / சூரியக் கதிர்களைப் போல பிரகாசமாக) ஆள் (அணிந்து இருக்கின்றாள் / வெளிப்பட்டு வருவாள்)
பாவுக்கு (பாடல்களுக்கு / நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற மந்திரத்தின்) நாயகி (தலைவியான இறைவி) பால் (பாலைப் / சாதகரின் சாதகத் தன்மைக்கு) ஒத்த (போன்ற / ஏற்ற) வண்ணத்தள் (வெண்மையான நிறம் கொண்டு இருக்கின்றாள் / விதத்தில் அருளுபவளாக இருக்கின்றாள்)
ஆவுக்கு (ஆன்மாவிற்கு) நாயகி (தலைவியான அவளே) அங்கு (சாதகரின் ஆன்மாவோடு அங்கேயே) அமர்ந்தாளே (வீற்றிருக்கின்றாள்).

விளக்கம்:

நாக்கிற்கு தலைவியான இறைவி நல்ல நவரத்தினங்களை பதித்து இருக்கும் மாலையை அணிந்து இருக்கின்றாள். மலர் வடிவான சக்கரத்திற்கு தலைவியான இறைவி தலை முடியிலிருந்து கீழ் வரை தங்கம் போல் தகதகக்கும் ஆடையை அணிந்து இருக்கின்றாள். பாடல்களுக்கு தலைவியான இறைவி பாலைப் போன்ற வெண்மையான நிறம் கொண்டு இருக்கின்றாள். ஆன்மாவிற்கு தலைவியான அவளே சாதகரின் ஆன்மாவோடு அங்கேயே வீற்றிருக்கின்றாள்.

உட் கருத்து:

நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற பீஜ மந்திரங்களை சொல்லும் சாதகரின் வாக்கிற்கு தலைவியான இறைவி நன்மையைக் கொடுக்கும் பிரகாசத்தினால் ஈர்க்கின்ற தேஜஸை கொண்டு விளங்குகின்றாள். மலர் போல மென்மையான சக்கரத்திற்கு தலைவியான இறைவி சாதகருக்கு உள்ளிருந்து பிரகாசமாக தலை முடியிலிருந்து கீழ் வரை சூரியக் கதிர்களைப் போல பிரகாசமாக வெளிப்பட்டு வருவாள். நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற மந்திரத்தின் தலைவியான இறைவி சாதகரின் சாதகத் தன்மைக்கு ஏற்ற விதத்தில் அருளுபவளாக இருக்கின்றாள். ஆன்மாவிற்கு தலைவியான அவளே சாதகரின் ஆன்மாவோடு அங்கேயே வீற்றிருக்கின்றாள்.

பாடல் #1388

பாடல் #1388: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

அன்றிரு கையி லளந்த பொருண்முறை
யின்றிரு கையி லெடுத்த வெண்குண்டிகை
மன்றது காணும் வழியது வாகவே
கண்டங் கிருந்த வக்காரணி காணுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அனறிரு கையி லளநத பொருணமுறை
யினறிரு கையி லெடுதத வெணகுணடிகை
மனறது காணும வழியது வாகவெ
கணடங கிருநத வககாரணி காணுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அன்று இரு கையில் அளந்த பொருள் முறை
இன்று இரு கையில் எடுத்த வெண் குண்டிகை
மன்று அது காணும் வழி அது ஆகவே
கண்டு அங்கு இருந்த அக் காரணி காணுமே.

பதப்பொருள்:

அன்று (ஆதியில் உயிர்களைப் படைக்கும் போதே) இரு (தனது இரண்டு) கையில் (திருக்கரங்களாலும்) அளந்த (அவரவர்களின் அளந்து கொடுத்த) பொருள் (இன்பமும் துன்பமுமாகிய போகங்களை) முறை (வினைகளுக்கு ஏற்ற முறைப்படி கொடுத்து உயிர்கள் அதை அனுபவிக்க அருளினாள்)
இன்று (இப்போது நவாக்கிரி சக்கர சாதகத்தை செய்யும் சாதகர்களுக்கு) இரு (தனது இரண்டு) கையில் (திருக்கரங்களிலும்) எடுத்த (எடுத்துக் கொண்ட) வெண் (மாயை முதலிய மல அழுக்குகளை நீக்கி தூய்மையாக்கி பேரறிவு ஞானத்தைக் கொடுத்து) குண்டிகை (கமண்டலத்திலிருக்கும் நீரினால் பாவங்களை நீக்கி இனிமேல் வரும் பிறவிகளையும் அழித்து)
மன்று (இறைவன் ஆடுகின்ற அம்பலத்தை) அது (தனக்குள்ளே) காணும் (தரிசிக்கும்) வழி (வழியாகவே) அது (இவைகளை இறைவி அருளுகின்றாள்) ஆகவே (என்பதை சாதகர்)
கண்டு (கண்டு கொண்டு) அங்கு (அதையே எண்ணிக்கொண்டு) இருந்த (தியானத்தில் இருந்து) அக் (இறைவனை அடைவதற்கு) காரணி (காரணமாக) காணுமே (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற இறைவியே இருக்கின்றாள் என்பதை தமக்குள் கண்டு அறிந்து கொள்வார்).

விளக்கம்:

ஆதியில் உயிர்களைப் படைக்கும் போதே தனது இரண்டு திருக்கரங்களாலும் அவரவர்களின் வினைகளுக்கு ஏற்ற முறைப்படி இன்பமும் துன்பமுமாகிய போகங்களை அளந்து கொடுத்து உயிர்கள் அதை அனுபவிக்க அருளினாள். இப்போது நவாக்கிரி சக்கர சாதகத்தை செய்யும் சாதகர்களுக்கு தனது இரண்டு திருக்கரங்களாலும் சாதகரிடமிருந்து மாயை முதலிய மல அழுக்குகளை நீக்கி தூய்மையாக்கி பேரறிவு ஞானத்தைக் கொடுத்து கமண்டலத்திலிருக்கும் நீரினால் பாவங்களை நீக்கி இனிமேல் வரும் பிறவிகளையும் அழித்து அருளுகின்றாள். இறைவன் ஆடுகின்ற அம்பலத்தை தனக்குள்ளே தரிசிக்கும் வழியாகவே இவைகளை இறைவி அருளுகின்றாள் என்பதை சாதகர் கண்டு கொண்டு அதையே எண்ணிக்கொண்டு தியானத்தில் இருந்து தாம் இறைவனை அடைவதற்கு நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற இறைவியே காரணமாக இருக்கின்றாள் என்பதை தமக்குள் கண்டு அறிந்து கொள்வார்.