பாடல் #1354

பாடல் #1354: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

மெய்ப்பொருள் வௌமுதல் ஹௌவது வீறாகக்
கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரந்
தற்பொரு ளாகச் சமைந்தமு தேவரி
நற்பொரு ளாக நடுவிருந் தாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மெயபபொருள வெளமுதல ஹெளவது வீறாகக
கைபபொரு ளாகக கலநதெழு சககரந
தறபொரு ளாகச சமைநதமு தெவரி
நறபொரு ளாக நடுவிருந தாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மெய்ப் பொருள் ஒளம் முதல் ஹௌம் அது ஈறு ஆக
கைப் பொருள் ஆகக் கலந்து எழு சக்கரம்
தற் பொருள் ஆகச் சமைந்த அமுதேஸ்வரி
நற் பொருள் ஆக நடுவு இருந்தாளே.

பதப்பொருள்:

மெய்ப் (நவாக்கிரி சக்கரத்தின் உண்மைப்) பொருள் (பொருளாகவே அமைந்தது) ஒளம் (‘ஔம்’ எனும் பீஜம்) முதல் (முதலில் ஆரம்பித்து) ஹௌம் (‘ஹௌம்’ எனும்) அது (பீஜம்) ஈறு (கடைசியாக) ஆக (வைத்து முறைப்படி அமைந்து இருக்கும்)
கைப் (அதுவே சாதகரோடு எப்போதும்) பொருள் (சேர்ந்தே இருக்கின்ற பொருள்) ஆகக் (ஆகவும்) கலந்து (அவருடன் கலந்து இருக்கும்) எழு (அவருக்குள்ளிருந்து எழுந்து வருகின்ற) சக்கரம் (இந்த அமைப்பிலிருக்கும் நவாக்கிரி சக்கரமானது)
தற் (உலகத்தில் தானாகவே நிற்கின்ற) பொருள் (பொருளாக) ஆகச் (ஆகி) சமைந்த (அதுவே நன்மைகள் கொடுப்பதற்காக மாறுகின்ற) அமுதேஸ்வரி (அமிழ்தத்தின் தன்மைக்குத் தலைவியாக இருக்கின்ற இறைவியே)
நற் (நன்மைகள் அனைத்தும் தருகின்ற) பொருள் (பொருளாகவே) ஆக (இருக்கின்ற அந்த சக்கரத்தின்) நடுவு (நடுவிலும்) இருந்தாளே (வீற்றிருக்கின்றாள்).

விளக்கம்:

பாடல் #1353 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற உண்மையை உணர்த்துகின்ற உண்மைப் பொருளாகவே ஆகிவிட்ட சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரமானது ‘ஔம்’ எனும் பீஜம் முதலில் ஆரம்பித்து ‘ஹௌம்’ எனும் பீஜம் கடைசியாக வைத்து முறைப்படி அமைந்து இருக்கும். சாதகருடன் எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற இந்த சக்கரத்தின் பொருளானது அவருடன் கலந்து இருந்து அவருக்குள்ளிருந்து எழுந்து வரும். அப்படி சாதகருக்குள்ளிருந்து எழுந்து வருகின்ற இந்த சக்கரமானது உலகத்தில் தானாகவே நிற்கின்ற பொருளாக ஆகி அதுவே நன்மைகள் கொடுப்பதற்காக மாறுகின்ற அமிழ்தத்தின் தன்மைக்குத் தலைவியாக இருக்கின்ற இறைவியே நன்மைகள் அனைத்தும் தருகின்ற இந்த சக்கரத்தின் நடுவிலும் வீற்றிருக்கின்றாள்.

பாடல் #1353

பாடல் #1353: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நின்றிட மேழு புவனமு மொன்றாகக்
கண்டிடு முள்ளங் கலந்தெங்குந் தானாகக்
கொண்டிடும் வையங் குணம்பல தன்னையும்
விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நினறிட மெழு புவனமு மொனறாகக
கணடிடு முளளங கலநதெஙகுந தானாகக
கொணடிடும வையங குணமபல தனனையும
விணடிடும வலவினை மெயபபொரு ளாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நின்று இடும் ஏழு புவனமும் ஒன்றாகக்
கண்டு இடும் உள்ளம் கலந்து எங்கும் தான் ஆக
கொண்டு இடும் வையம் குணம் பல தன்னையும்
விண்டு இடும் வல் வினை மெய்ப் பொருள் ஆகுமே.

பதப்பொருள்:

நின்று (சாதகர் சாதகம்) இடும் (செய்கின்ற இடத்திலிருந்தே) ஏழு (ஏழு விதமான) புவனமும் (உலகங்களையும்) ஒன்றாகக் (ஒரு உலகம் போலவே ஒன்றாகக்)
கண்டு (தமக்குள் பார்ப்பதை) இடும் (செய்கின்ற சாதகரின்) உள்ளம் (உள்ளம்) கலந்து (அனைத்தோடும் கலந்து) எங்கும் (அனைத்தும்) தான் (தாமாகவே) ஆக (ஆகி இருப்பதை)
கொண்டு (ஒன்றாகப் பார்க்கின்றதை) இடும் (செய்கின்ற சாதகர்) வையம் (உலகத்தில் இருக்கின்ற) குணம் (தன்மைகள்) பல (பலவாறாக இருக்கின்ற) தன்னையும் (குணங்களையும் ஒன்றாகவே எடுத்துக் கொள்வார்கள்)
விண்டு (உயிர்களிடமிருந்து பிரிப்பதை) இடும் (செய்கின்ற) வல் (கொடிய) வினை (வினைகளை எல்லாம் பிரித்து விடுகின்ற) மெய்ப் (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற உண்மைப்) பொருள் (பொருளாகவே) ஆகுமே (சாதகரும் ஆகிவிடுவார்கள்).

விளக்கம்:

பாடல் #1352 இல் உள்ளபடி தமது எண்ணங்களில் எப்போதும் இறைவியை வைத்து தியானித்து இருக்கின்ற சாதகர்கள் தாம் சாதகம் செய்கின்ற இடத்திலிருந்தே ஏழு விதமான உலகங்களையும் ஒரு உலகம் போலவே ஒன்றாகப் பார்க்கின்ற உள்ளத்தைப் பெறுகிறார்கள். அப்படி அனைத்து உலகங்களையும் ஒன்றாகவே பார்க்கின்ற சாதகர்கள் அனைத்தோடும் கலந்து அனைத்தும் தாமாகவே ஆகி விடுவது மட்டுமின்றி உலகத்தில் பலவாறாக இருக்கின்ற தன்மைகள் அனைத்தையும் ஒன்றாகவே எடுத்துக் கொள்வார்கள். அதனால் உயிர்களிடமிருந்து கொடுமையான வினைகளைப் பிரித்து நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற உண்மையை உணர்த்துகின்ற உண்மைப் பொருளாகவே சாதகரும் ஆகிவிடுவார்கள்.

பாடல் #1352

பாடல் #1352: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

காணலு மாகுங் கலந்துயிர் செய்வன
காணலு மாகுங் கருத்து ளிருந்திடிற்
காணலு மாகுங் கலந்து வழிசெய்யக்
காணலு மாகுங் கருத்துற நில்லே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காணலு மாகுங கலநதுயிர செயவன
காணலு மாகுங கருதது ளிருநதிடிற
காணலு மாகுங கலநது வழிசெயயக
காணலு மாகுங கருததுற நிலலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

காணலும் ஆகும் கலந்து உயிர் செய்வன
காணலும் ஆகும் கருத்து உள் இருந்திடில்
காணலும் ஆகும் கலந்து வழி செய்யக்
காணலும் ஆகும் கருத்து உற நில்லே.

பதப்பொருள்:

காணலும் (தரிசிக்கவும்) ஆகும் (முடியும்) கலந்து (இறைவி ஒன்றாகக் கலந்து) உயிர் (உயிர்களோடு நின்று) செய்வன (செய்கின்ற அனைத்து செயல்களையும்)
காணலும் (தரிசிக்கவும்) ஆகும் (முடியும்) கருத்து (உயிர்களின் எண்ணங்களுக்கு) உள் (உள்ளே) இருந்திடில் (இறைவி இருக்கின்ற தன்மையையும்)
காணலும் (தரிசிக்கவும்) ஆகும் (முடியும்) கலந்து (உயிர்களோடு ஒன்றாகக் கலந்து நின்று) வழி (அவற்றுக்கு ஏற்ற நல் வழியில்) செய்யக் (செல்ல வைப்பதையும்)
காணலும் (தரிசிக்கவும்) ஆகும் (முடியும்) கருத்து (ஆகவே உங்களது எண்ணங்களில்) உற (எப்போதும் இறைவியை வைத்து) நில்லே (தியானித்து இருங்கள்).

விளக்கம்:

பாடல் #1351 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தை சாதகம் செய்யும் சாதகர்களால் இறைவியானவள் உயிர்களோடு ஒன்றாகக் கலந்து நின்று செய்கின்ற அனைத்து செயல்களையும் தரிசிக்க முடியும். அது மட்டுமின்றி உயிர்களின் எண்ணங்களுக்கு உள்ளே இறைவி இருக்கின்ற தன்மையையும் தரிசிக்க முடியும். அது போலவே உயிர்களோடு ஒன்றாகக் கலந்து நின்று அவற்றுக்கு ஏற்ற நல் வழியில் இறைவி செல்ல வைப்பதையும் தரிசிக்க முடியும். ஆகவே உங்களது எண்ணங்களில் எப்போதும் இறைவியை வைத்து தியானித்து இருங்கள்.

பாடல் #1351

பாடல் #1351: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தன்னுளு மாகித் தரணி முழுதுங்கொண்
டென்னுளு மாகி யிடம்பெற நின்றவள்
மன்னுளு நீரனல் காலுளும் வானுளுங்
கண்ணுளு மெய்யுளுங் காணலு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தனனுளு மாகித தரணி முளுதுஙகொண
டெனனுளு மாகி யிடமபெற நினறவள
மனனுளு நீரனல காலுளும வானுளுங
கணணுளு மெயயுளுங காணலு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தன் உளும் ஆகித் தரணி முழுதும் கொண்டு
என் உளும் ஆகி இடம் பெற நின்றவள்
மண் உளும் நீர் அனல் கால் உளும் வான் உளும்
கண் உளும் மெய் உளும் காணலும் ஆமே.

பதப்பொருள்:

தன் (இறைவியானவள் தனக்கு) உளும் (உள்ளேயும்) ஆகித் (அனைத்தும் ஆகி) தரணி (அண்ட சராசரங்களில் இருக்கின்ற உலகங்கள்) முழுதும் (அனைத்தையும்) கொண்டு (தனக்குள் கொண்டு)
என் (எமக்கு) உளும் (உள்ளேயும்) ஆகி (அனைத்தும் ஆகி) இடம் (எமக்குள் முழுவதும்) பெற (நிறைந்து) நின்றவள் (நிற்கின்றாள்)
மண் (அவளே பஞ்ச பூதங்களில் நிலத்தின்) உளும் (உள்ளேயும்) நீர் (நீரின் உள்ளேயும்) அனல் (நெருப்பின் உள்ளேயும்) கால் (காற்றின்) உளும் (உள்ளேயும்) வான் (ஆகாயத்தின்) உளும் (உள்ளேயும்)
கண் (எமது கண்ணின்) உளும் (உள்ளேயும்) மெய் (எமது உடலுக்கு) உளும் (உள்ளேயும் வீற்றிருக்கிறாள் என்பதை) காணலும் (தரிசிக்க) ஆமே (முடியுமே).

விளக்கம்:

பாடல் #1350 இல் உள்ளபடி அனைத்து உயிர்களையும் தனக்குள் தாங்கி அனைத்துமாகவே இருக்கின்ற இறைவியானவள் அண்ட சராசரங்களில் இருக்கின்ற உலகங்கள் அனைத்தையும் தனக்குள் கொண்டும் இருக்கின்றாள். அவளே எமக்கு உள்ளேயும் அனைத்தும் ஆகி எமக்குள் முழுவதும் நிறைந்து நிற்கின்றாள். அவளே பஞ்ச பூதங்களில் நிலத்தின் உள்ளேயும் நீரின் உள்ளேயும் நெருப்பின் உள்ளேயும் காற்றின் உள்ளேயும் ஆகாயத்தின் உள்ளேயும் இருக்கின்றாள். அவளே எமது கண்ணின் உள்ளேயும் எமது உடலுக்கு உள்ளேயும் வீற்றிருக்கிறாள் என்பதை நவாக்கிரி சக்கரத்தை சாதகம் செய்யும் சாதகர்களால் தரிசிக்கவும் முடியும்.