பாடல் #1297

பாடல் #1297: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

சாம்பவி மண்டலச் சக்கரஞ் சொல்லிடில்
ஆம்பத மெட்டாக விட்டிடின் மேலதாங்
காண்பதந் தத்துவ நாலுள் நயனமும்
நாம்பதங் கண்டபின் நாடறிந் தோமே.

விளக்கம்:

சாம்பவி என்கிற சிவமும் சக்தியும் ஒன்றாக வீற்றிருக்கின்ற சிவலிங்க அமைப்பில் அமைகின்ற சக்கரத்தைப் பற்றி சொல்லப் போனால் சக்கர அமைப்பாக இருக்கின்ற அறைகள் ஒரு வரிசைக்கு எட்டாக எட்டு வரிசையில் மொத்தம் அறுபத்து நான்கு அறைகள் கொண்ட சக்கரம் அமைக்க வேண்டும். அதன் பிறகு அதற்கு நடுவில் இருக்கின்ற மேன்மையான நான்கு அறைகளுக்குள் சிவம், சக்தி, விந்து, நாதம் ஆகிய நான்கு தத்துவங்களையும் அமைக்க வேண்டும். இப்படி அறுபத்து நான்கு அறைகள் கொண்ட இந்த சக்கர அமைப்பை மானசீகமாக தமக்குள்ளேயே வரைந்து அதை உணர்ந்து தரிசித்த சாதகர்கள் சிவலிங்க அமைப்பில் இருக்கின்ற சாம்பவி மண்டலச் சக்கரத்தை அறிந்து கொள்ளலாம்.

கருத்து:

சாதகர்கள் மானசீகமாக பாடலில் குறிப்பிட்டு உள்ளபடி அறுபத்து நான்கு அறைகள் கொண்ட சக்கரத்தை அமைத்து அதன் நான்கு மூலைகளிலும் நான்கு சிவலிங்கங்களாக அமைத்து அதற்கு நடுவில் சிவம் சக்தி தத்துவங்களை ஒரே ஒரு சிவலிங்கமாகவும் விந்து தத்துவமாக ஓம் மந்திரத்தை அமைத்து நாத தத்துவமாக அந்த ஓம் மந்திரத்தை அசபையாக சொல்லி தியானித்தால் சாம்பவி மண்டலச் சக்கரத்தை அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1298

பாடல் #1298: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

நாடறி மண்டலம் நல்லவிக் குண்டத்துக்
கோடற வீதியுங் கொணர்ந்துள் ளிரண்டழி
பாடறி பத்துட னாறு நடுவீதி
ஏடற நாலைந்து இடவகை யாமே.

விளக்கம்:

பாடல் #1297 இல் உள்ளபடி சிவலிங்க அமைப்பில் இருக்கின்ற சக்கரமாக அறிந்து கொண்ட சாம்பவி மண்டலத்தை நன்மையான இந்த நவகுண்டமாகிய உடம்பிற்குள் சக்கரத்தில் வரைந்த கோடுகளை நீக்கி விட்டு அவற்றை சக்தி பாயும் வீதிகளாக கொண்டு வந்து உள் வாங்கிக் கொண்டு சக்கரத்தை இரண்டு பாகமாக பிரித்து வைக்க வேண்டும். இப்படி இரண்டு பாகமாக உண்டாகும் பக்கங்களை அறிந்து கொண்டு பத்து அறைகளுடன் ஆறு அறைகளும் சேர்த்து மொத்தம் பதினாறு அறைகளில் இரண்டு சிவலிங்கங்களையும் நடுவில் இருக்கின்ற நான்கு அறைகளில் உள்ள சிவலிங்கமும் ஓம் மந்திரமும் சேர்த்து வைக்க வேண்டும். அதன் பிறகு மனதில் இறைவனைத் தவிர வேறு எந்த சிந்தனைகளும் இல்லாமல் இருபது அறைகளாக இருக்கின்ற இடது பக்கமும் வலது பக்கமும் ஆகிய பகுதிகளை அமைத்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு: கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் அனைவருக்கும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இருபது எண்களும் இருபது அறைகள் இருக்கின்ற இடம் வலது ஆகிய பக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நீலம் மற்றும் பச்சை கலர்களில் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பாடல் #1299

பாடல் #1299: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

நாலஞ் சிடவகை யுள்ளதோர் மண்டலம்
நாலுநல் வீதியுள் நல்ல விலிங்கமாய்
நாலுநற் கோணமும் நன்னா லிலிங்கமாய்
நாலுநற் பூநடு வண்ணலவ் வாறே.

விளக்கம்:

பாடல் #1298 இல் உள்ளபடி இருபது அறைகளாக இருக்கின்ற இடது பக்கமும் வலது பக்கமும் ஆகிய பகுதிகளை சேர்த்து இருக்கும் சாம்பவி மண்டலச் சக்கரத்தில் நன்மையைத் தருகின்ற சக்தி பாயும் வீதிகளாக அறைகளை அமைக்க வேண்டும். அதில் நான்கு திசைகளாக இருக்கின்ற மூலைகளிலும் நான்கு நான்கு இலிங்கங்களாக மொத்தம் பதினாறு இலிங்கங்களை அமைக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு மூலையிலும் அமைந்திருக்கும் நான்கு இலிங்கங்களுக்கு நடுவிலும் சாதகர்கள் தங்களின் மனதை வைத்து இறைவனைத் தவிர வேறு எந்த சிந்தனைகளும் இல்லாமல் தியானித்தால் இறைவனும் அவர்களின் எண்ணங்களுக்கேற்ப வந்து சக்கரத்தின் நடுவில் வீற்றிருப்பான்.

பாடல் #1300

பாடல் #1300: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

ஆறிரு பத்துநா லஞ்செழுத் தஞ்சையும்
வேறுரு வாக விளைந்து கிடந்தது
தேறிநீ ரும்மிற் சிவாய நமவென்று
கூறுமின் கூறிற் குறைகளு மில்லையே.

விளக்கம்:

ஆதிகாலத் தமிழில் இருக்கும் 51 எழுத்துக்களும் உண்மை ஞானத்தைக் கொடுப்பவை ஆகும். இவை வெவ்வேறு உருவங்களில் (எழுத்து வடிவங்களில்) சூட்சுமமாக சாம்பவி மண்டலச் சக்கரத்தில் வளர்ச்சி பெற்று பரவிக் கிடக்கின்றது. இவற்றின் உண்மைப் பொருளை ஆராய்ந்து உணர்ந்து சாதகர்கள் தமக்குள் ‘சிவாய நம’ எனும் மந்திரத்தை அசபையாகச் செபித்துக் கொண்டே இருந்தால் அவர்களுக்கு எந்தவிதமான குறைகளும் இருக்காது.

பாடல் #1301

பாடல் #1301: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

குறைவது மில்லை குரைகழற் கூடு
மறைவது மாரண மவ்வெழுத் தாகித்
திறமது வாகத் தெளியவல் லார்கட்
கிறவில்லை யென்றென் றியம்பினர் காணே.

விளக்கம்:

பாடல் #1300 இல் உள்ளபடி எந்த விதமான குறைகளும் இல்லாத நிலையை அடைந்த சாதகர்கள் மேன்மையான சாம்பவி மண்டலச் சக்கரத்திற்கு ஏற்ப ஞானமும் அருளும் எப்போதும் குறைவில்லாமல் இருப்பார்கள். ஒலிக்கின்ற சிலம்புகளை அணிந்திருக்கும் இறைவனின் திருவடிகளும் சாதகர்களை விட்டு எப்போதும் பிரியாமல் அவர்களுடனே சேர்ந்து இருக்கும். வேதங்கள் சிறப்பித்து சொல்லுகின்ற உண்மை ஞானமாகவே இருக்கின்ற 51 எழுத்துக்களையும் அதனதன் இயல்புக்கு ஏற்ப முழுவதுமாக அறிந்து உணர்ந்து கொள்ள முடிந்தவர்களுக்கு இறப்பு என்பதே இல்லை என்று இந்த நிலையை அடைந்தவர்கள் உறுதியாக சொல்வார்கள். இதை சாதகர்களும் முழுவதுமாக உணர்ந்து கண்டு கொள்ள வேண்டும்.

பாடல் #1291

பாடல் #1291: நான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)

அறிந்த பிரதமை யோடாறு மறிஞ்சு
அறிந்தவச் சத்தமி மேலிவை குற்றம்
அறிந்தவை யொன்றுவிட் டொன்றுபத் தாக
அறிந்த வலமது வாக நடவே.

விளக்கம்:

உலக நடப்பில் அறிந்து கொண்ட சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை குறிக்கும் திதிகளில் முதல் திதியாகிய பிரதமையோடு துவிதியை திருதியை சதுர்த்தி பஞ்சமி சஷ்டி ஆகிய ஐந்து திதிகளையும் சேர்த்து மொத்தம் ஆறு திதிகளையும் அவை வருகின்ற கால அளவுகளையும் அறிந்து கொண்டு அந்த திதிகளில் ஏழாவதான சப்தமி திதியிலிருந்து அதற்கு மேல் இருக்கும் ஒன்பது திதிகளில் சிறப்பில்லாத சப்தமி நவமி ஏகாதசி திரயோதசி ஆகிய திதிகளை விட்டு விட்டு சிறப்பான அஷ்டமி தசமி துவாதசி சதுர்த்தசி ஆகிய நான்கு திதிகளுடன் முதல் ஆறு திதிகளையும் சேர்த்து மொத்தம் பத்து திதிகளிலும் மூச்சுக் காற்றை வலது நாடியின் வழியாக உள்ளிழுத்து வெளிவிட்டு பைரவரை நினைத்து வழிபடலாம்.

வளர்பிறை திதிகள்:

  1. பிரதமை
  2. துவிதியை
  3. திருதியை
  4. சதுர்த்தி
  5. பஞ்சமி
  6. சஷ்டி
  7. சப்தமி
  8. அஷ்டமி
  9. நவமி
  10. தசமி
  11. ஏகாதசி
  12. துவாதசி
  13. திரயோதசி
  14. சதுர்த்தசி
  15. பெளர்ணமி

தேய் பிறை திதிகள்: மேலுள்ள முதல் 14 திதிகளுடன் சேர்ந்து அமாவாசையில் முடிவது.

பாடல் #1292

பாடல் #1292: நான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)

நடந்து வயிரவன் சூல கபாலி
கடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த வுயிரது வுண்ணும் பொழுது
படர்ந்த வுடல்கொடு பந்தாட லாமே.

விளக்கம்:

பாடல் #1291 இல் உள்ளபடி குறிப்பிட்ட திதிகளில் முறைப்படி தியானம் செய்து பைரவரை மானசீகமாக வழிபடும் போது திரிசூலத்தையும் கபாலத்தையும் தமது திருக்கைகளில் ஏந்திக் கொண்டு சாதகருக்குள்ளிருந்து பைரவர் வெளிப்பட்டு இதுவரை சாதகர் கடந்து வந்த அனைத்து தீய கர்மங்களையும் தமது திருக்கண்களால் சுட்டெரித்து அழித்து அருள்வார். அதன் பிறகு இனி வரும் தீய சக்திகளும் சாதகரை பாதிக்காதவாறு தடுத்துக் காப்பாற்றும் சக்கர அமைப்பை சாதகரைச் சுற்றி படர்ந்து இருக்கும் படி செய்து அருள்வார். இனி சாதகர் தமது வழிபாட்டைத் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது அவரைச் சுற்றி படர்ந்து இருக்கும் சக்கர அமைப்பின் மூலம் இனி வரும் தீய கர்மங்களையும் நெருங்க விடாமல் பந்தாடி சாதகரால் விரட்ட முடியும்.

பாடல் #1293

பாடல் #1293: நான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)

ஆமேவப் பூண்டரு ளாதி வயிரவ
னாமே கபாலமுஞ் சூலமுங் கைக்கொண்டங்
காமே தமருக பாசமுங் கையது
வாமே சிரத்தொடு வாளது கையே.

விளக்கம்:

பாடல் #1292 இல் உள்ளபடி சாதகரைச் சுற்றிப் படர்ந்து சாதகர் தரித்து இருக்கும் பைரவச் சக்கரமானது ஆதி மூலமாகிய பைரவர் கொடுத்து அருளியது. பைரவரது அருளானது பைரவச் சக்கரத்தை தரித்த சாதகரின் கைகளில் சூட்சுமமாக இறப்பில்லாத தன்மையை அருளும் கபாலமாகவும் தீய சக்திகளை தடுத்து நிற்கும் திரிசூலமாகவும் நன்மை தீமை ஆகிய இரண்டு வினைகளையுமே சேர விடாமால் இரண்டு பக்கமும் வருகின்ற நாதத்தால் காத்து அருளுகின்ற தமருகமாகவும் உலகப் பற்றுக்களை அறுக்கின்ற பாசக் கயிறாகவும் பிறவி எடுப்பதற்கான கர்மங்களை அழிக்கின்ற சிரமாகவும் இனி வரும் பிறவிகளையும் அறுக்கின்ற வாளாகவும் இருக்கின்றது.

கருத்து: பைரவர் அருளால் சாதகர் பெற்ற பைரவச் சக்கரத்தின் மூலம் சாதகர் இறப்பில்லாத தன்மையையும் தீய சக்திகளை அண்ட விடாமல் தடுத்தும் பிறவி எடுப்பதற்கு காரணமாகிய நன்மை தீமை ஆகிய இரண்டு வினைகளுமே இருக்கக்கூடாது என்பதனால் அதை தடுத்தும் உலகப் பற்றுக்களை நீக்கியும் பிறவி எடுப்பதற்கான கர்மங்களை அழித்தும் ஏற்கனவே இருக்கின்ற கர்மங்களினால் இனி எடுக்க வேண்டிய பிறவிகளை அறுத்தும் பயன் பெறுகிறார்.

பாடல் #1294

பாடல் #1294: நான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)

கையவை யாறுங் கருத்துற நோக்கிடு
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்யரு ளத்தில் துளங்குமெய் யுற்றதாய்ப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.

விளக்கம்:

பாடல் #1293 இல் உள்ளபடி சாதகரிடம் சூட்சுமமாக இருக்கின்ற ஆறு கைகளிலும் ஏந்தி இருக்கின்ற பைரவர் கொடுத்து அருளிய ஆறு ஆயுதங்களையும் எண்ணத்தில் வைத்து ஆராய்ந்து பார்த்தால் சாதகரின் உடலுக்குள்ளேயே வந்து செம்மையான அருள் வடிவமாக வீற்றிருக்கும் பைரவரை அறிந்து கொள்ளலாம். அதன்படி சாதகருக்குள் வந்து வீற்றிருக்கின்ற பைரவர் தமது தூய்மையான அருளை சாதகருக்குக் கொடுத்து அவருக்குள் இருக்கின்ற ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களையும் நீக்கி பேருண்மையாக விளங்குகின்ற பரம்பொருளை உணரும்படி அருள்வார். அதன் பிறகு பொய்யான மாயை அகங்காரம் ஆகியவற்றை விட்டுவிட்டு சாதகர்கள் பைரவரை பூஜித்து வழிபாடு செய்வார்கள்.

பாடல் #1295

பாடல் #1295: நான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)

பூசனை செய்யப் பொருந்தியோ ராயிரம்
பூசனை செய்ய மதுவுட னாடுமால்
பூசனை சாந்து சவாது புழுகுநெய்
பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே.

விளக்கம்:

பாடல் #1294 இல் உள்ளபடி பைரவரை பூஜித்து வழிபடுவதற்கு அவருக்கு ஏற்ற மந்திரத்தை ஒரு ஆயிரம் முறை மானசீகமாக உச்சரிக்க வேண்டும். தூய்மையான தேனாலும் நீராலும் அபிஷேகம் செய்ய வேண்டும். சந்தனம் ஜவ்வாது புனுகு ஆகிய நறுமணம் வீசும் பொருட்களை பூச வேண்டும். நெய் தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறெல்லாம் செய்து வழிபட்ட பிறகு திருநீறு எடுத்து பூசிக் கொள்ள வேண்டும்.