பாடல் #1022

பாடல் #1022: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

நல்லதென் றாளே நமக்குற்ற நாயகஞ்
சொல்லதென் றாளே சுடர்முடி பாதமா
மெல்லநின் றாளை வினவகில் லாதவர்
கல்லதன் றாளையுங் கற்குறுமின் னாளே.

விளக்கம்:

பாடல் #1021 இல் உள்ளபடி நன்மையைத் தரும் சுடர் இது என்று அருளிய சக்தியே சாதகருக்குள் அனைத்தையும் இயக்குகின்ற மந்திரங்களையும் அந்த மந்திரங்களையே தனக்கு தலை முதல் பாதம் வரை அருளோடு நிற்கின்றாள். அப்படி நிற்கின்ற சக்தியின் அருளைத் தேடி அடையாமல் தான் கற்றுக் கொண்ட மந்திரங்களை மட்டும் ஓதி யாகம் செய்பவர்கள் அவளது சக்தியை உணர மாட்டார்கள்.

கருத்து: குண்டம் அமைத்து யாகம் செய்பவர்கள் வெளியில் செய்தாலும் உள்ளுக்குள் மானசீகமாக செய்தாலும் மந்திரங்களை மட்டும் ஓதிக்கொண்டு இருக்காமல் அதற்குள் இருக்கும் இறைசக்தியையும் அறிந்து கொள்ள வேண்டும்.

பாடல் #1023

பாடல் #1023: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

மின்னா இளம்பிறை மேவிய குண்டத்துச்
சொன்னால் இரண்டுஞ் சுடர்நாகந் திக்கெங்கும்
பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்
என்ஆகத் துள்ளே இடங்கொண்ட வாறே.

விளக்கம்:

வில்லின் இரு பக்க நுனிகளும் வளைந்து இளம்பிறை விடிவில் இருக்கும் பிறை (அரை நிலா) குண்டத்தில் இரு நுனிகளிலும் பாம்பு போல் வளைந்து எழுகின்ற அக்னி எல்லாத் திசைகளிலும் சுடர்விட்டு விளங்கும். அப்படி எல்லாத் திசைகளிலும் பரவியிருக்கும் சுடரொளி எமது உடலுக்குள் மேருவாக இருக்கும் முதுகுத் தண்டின் உச்சியில் வீற்றிருக்கிறது.

குறிப்பு: வெளியில் செய்யும் பிறை (அரை நிலா) குண்டத்தில் எழும் அக்னியைப் போலவே மானசீகமாக உடலை பிறை குண்டமாக பாவித்து செய்யும் யாகத்திலும் குண்டலினி சக்தி அக்னியாக எழுந்து முதுகுத் தண்டின் உச்சியில் வீற்றிருக்கும்.

பாடல் #1024

பாடல் #1024: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

இடங்கொண்ட பாதம் எழிற்சுட ரேக
நடங்கொண்ட பாதங்கள் நன்னீ ரதற்குச்
சகங்கொண்ட கையிரண் டாறுந் தழைப்ப
முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே.

விளக்கம்:

பாடல் #1023 இல் உள்ளபடி உடலில் இருக்கும் முதுகுத்தண்டின் உச்சியை அடிப்பாகமாகக் கொண்டு எழும் சுடர் ஒரே ஜோதியாக அழகாக அசைந்தாடும். அப்போது அங்கிருந்து அமிர்தம் சுரந்து சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் தாமரை மலர்ந்து விரிவடையும். இந்த செழுமையான சுடர் முக்கண்களையுடைய இறைவனின் திருமுகமாக இருக்கிறது.

கருத்து: மானசீகமாக உடலைக் குண்டமாக பாவித்து இந்த யாகத்தை செய்தால் இறைவனின் மூன்றாவது கண்ணைக் குறிக்கும் பேரறிவு ஞானத்தை அடையலாம்.

பாடல் #1025

பாடல் #1025: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

முக்கணன் றானே முழுச்சுட ராயவன்
அக்கணன் றானே அகிலமும் உண்டவன்
திக்கண னாகி திசையெட்டுங் கண்டவன்
எக்கணன் றானுக்கும் எந்தை பிரானே.

விளக்கம்:

பாடல் #1024 இல் உள்ளபடி மூன்று கண்களையுடைய இறைவனே உடலாகிய குண்டத்தில் எழும் முழுமையான சுடராகவும் இருக்கின்றான். அந்த மூன்று கண்களை உடைய இறைவனே எட்டுத் திசைகளுக்கும் கண்களை உடையவனாய் இருந்து எட்டுத் திசைளையும் கண்டு எல்லா உலகங்களையும் அதிலிருக்கும் உயிர்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு எல்லா தேவர்களுக்கும் தேவகணங்களுக்கும் தலைவனாகவும் இருப்பவனே எம்மையும் சேர்த்து அண்டசராசரங்களுக்கும் தந்தையாகவும் இருக்கின்றான்.

பாடல் #1026

பாடல் #1026: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

எந்தை பிரானுக் கிருமூன்று வட்டமாய்த்
தந்தை தன்முன்னமே சண்முகந் தோன்றலாற்
கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலான்
மைந்த னிவனென்று மாட்டிக்கொள் ளீரே.

விளக்கம்:

பாடல் #1025 இல் உள்ளபடி அண்டசராசரங்களுக்கும் தந்தையாகிய இறைவனோடு இறைவனின் மகனாக ஆன்மாவும் இருக்கின்றது. சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் பேரொளியான இறைவனை அறிவதற்கு முன்பு உடலுக்குள் சக்தி மயங்களாக இருக்கும் ஆறு சக்கரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். உடலை நவகுண்டமாக வைத்து அதிலிருக்கும் ஆறு சக்கரங்களிலும் அக்னியை ஏற்றி யாகம் செய்து ஆன்மா இறைவனின் மகனாக இருப்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

பாடல் #1003

பாடல் #1003: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

அம்புய நீலங் கழுநீ ரணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளஞ் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.

விளக்கம்:

  1. தாமரை மலர் (அம்புயம்) 2. கருங்குவளை மலர் (நீலம்) 3. செழுங்கழுநீர் மலர் (கழுநீர்) 4. அழகாக கட்டிய நெய்தல் மலர் 5. மாலை மணம் விரிக்கும் பாக்கு மலர் (பூகம்) 6. மாதவி மலர் 7. மந்தாரை மலர் 8. தும்பை மலர் 9. மகிழம்பூ மலர் (வகுளம்) 10. சுரபுன்னை மலர் 11. மல்லிகை மலர் 12. செண்பகம் மலர் 13. பாதிரி மலர் 14. செவ்வந்தி மலர் ஆகிய பதினான்கு வகைப் பூக்களும் இறைவனுக்கு அருச்சினை செய்ய ஏற்ற மலர்கள் ஆகும்.

பாடல் #1004

பாடல் #1004: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

சாங்கம தாகவே சந்தொடு சந்தனந்
தேங்கமழ் குங்குமங் கர்ப்பூரங் காரகிற்
பாங்கு படப்பனி நீராற் குழைத்துவைத்
தாங்கே அணிந்துநீர் அர்ச்சியும் அன்பொடே.

விளக்கம்:

புனுகு கஸ்தூரி ஆகிய கலவைகளுடன் சேர்த்து அரைத்த சந்தனம் வாசம் மிகுந்த குங்குமம் பச்சைக் கற்பூரம் கருமையான அகில் கட்டையை அரைத்த சாந்து ஆகியவற்றை சரியான அளவு எடுத்து முறைப்படி அவற்றை பன்னீரால் குழைத்து அந்தக் கலவையை இறைவனின் திருமேனியின் மேல் அழகுடன் காப்புப் போல பூசிவிட்டு அன்போடு அருச்சனை செய்தல் வேண்டும்.

பாடல் #1005

பாடல் #1005: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

அன்புட னேநின் றமுதமும் ஏற்றியே
பொன்செய் விளக்கும் புகைதீபந் திசைதொறுந்
துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால்
இன்புட னேவந்து எய்திடும் முத்தியே.

விளக்கம்:

இறைவனுக்கு அன்போடு சமைத்த அமுதத்தை (உணவு) படையல் செய்து பொன்னொளி விட்டுப் பிரகாசிக்கும் அளவிற்கு தூய்மையான விளக்குகளில் தீபத்தை ஏற்றி வைத்து அனைத்து திசைகளுக்கும் தூபம் (சாம்பிராணிப் புகை) காட்டித் தாம் அனுபவிக்கின்ற துன்பங்கள் அனைத்தும் இறைவன் அளிக்கும் அருளாகக் கருதி இன்பமுடனே வழிபட்டு வருபவர்கள் நினைத்த நேரத்தில் இறைவனின் இன்னருளால் முக்தியை எய்துவார்கள்.

பாடல் #1006

பாடல் #1006: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

எய்தி வழிப்படில் எய்தா தனவில்லை
எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமும்
எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும்
எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே.

விளக்கம்:

பாடல் #1003, #1004 மற்றும் #1005 இல் உள்ள முறைப்படி இறைவனை அன்போடு மனம் ஒன்றி வழிபட்டால் கிடைக்காத பேறுகளே இல்லை. இந்திரனிடம் உள்ள செல்வமும் எட்டு வகை சித்திகளும் பிறவியில்லா முக்தியும் கிடைக்கும்.

பாடல் #1007

பாடல் #1007: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார்
மண்ணிய நைவேத் தியமனு சந்தான
நண்ணிய பஞ்சாங்க நண்ணுஞ் செபமென்னு
மன்னு மனபவ னத்தொடு வைகுமே.

விளக்கம்:

தன்னை விரும்பி வரும் பிறர் மனைவியை விரும்பாதவர்களாகவும், ஐந்து புலன்களையும் அடக்கியவர்களாகவும், பாடல் #1003 #1004 மற்றும் #1005 உள்ள முறைகளின்படி தினந்தோறும் வழிபடுபவர்களாகவும், உடலிலுள்ள நெற்றி இரண்டு முழங்கைகள் மற்றும் இரண்டு முழந்தாள்கள் ஆகிய ஐந்து அங்கங்களும் தரையில் படும்படி இறைவன் முன்பு விழுந்து வணங்குபவர்களாகவும், குருவின் மூலமாக பெற்ற மந்திரத்தை செபிப்பவர்களாகவும், உடலும் மனமும் பிராணனோடு (மூச்சுக்காற்றோடு) சேர்ந்து இருக்கும்படி வழிபடுபவர்களாகவும் இறைவனை அருச்சிப்பவர்கள் இருக்க வேண்டும்.

குறிப்பு: இறைவனை பூஜிப்பதில் ஒழுக்கமும் மனமும் எண்ணங்களும் முக்கியம் என்பதை இப்பாடல் விளக்குகின்றது. அவ்வாறு செய்யாத பூஜை பாடல் #1005 மற்றும் #1006 இல் உள்ள பலன்கள் எதையும் தராது.