பாடல் #1011

பாடல் #1011: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

தானவ னாக அவனேதா னாயிட
ஆன இரண்டில் அறிவன் சிவமாகப்
போனவ னன்பிது நாலாம் மரபுறத்
தானவ னாகுமோ ராதித்த தேவரே.

விளக்கம்:

உயிர்கள் அருச்சனை செய்து தனது பக்தியினால் தம்மை சிவமாகவும் சிவமே தானாகவும் ஆகிய இரு வழிகளிலும் சிவத்தை அறிந்து உணர்ந்தவர்களின் பேரன்பினால் இறைவனை அடையும் வழிகளில் நான்காம் நிலையாகிய சாயுச்சிய நிலையை அடைவார்கள். அப்படி சாயுச்சிய நிலையை அடைந்தவர்கள் பேரொளியாகிய ஆதித்ய (சூரிய) தேவராவார்கள்.

குறிப்பு: இறைவன் பேரொளி வடிவில் உயிர்களின் கர்மங்களை பொசுக்கும் நிலையே ஆதித்ய தேவர் ஆகும்.

இறைவனை அடையும் நான்கு முறைகள்:

சாலோகம் – இறைவன் இருக்கும் இடத்தில் அவனோடு சேர்ந்து வாழ்வது.
சாமீபம் – இறைவனுக்கு பக்கத்தில் அமர்ந்து நெருக்கமாக வாழ்வது.
சாரூபம் – இறைவனுக்கு பிரதிநிதியாக அவருக்கு செய்வதை ஏற்றுக்கொள்வது.
சாயுச்சியம் – இறைவனோடு எப்போதும் சேர்ந்து இருப்பது.

பாடல் #1012

பாடல் #1012: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

ஓங்கார முந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகராமும் நீள்கண்டத் தாயிடும்
பாங்கார் நகாரம் பயில்நெற்றி யுற்றிடும்
வீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே.

விளக்கம்:

அடி வயிற்றுக்குக் கீழே எப்போதும் மூலாதாரத்துடன் ஒளியாக உடனிருக்கும் சக்தியை தினந்தோறும் மனதை ஒரு நிலைப்படுத்தி தியானித்து வந்தால் அந்த ஒளியான சக்தி கீழிருந்து எழுந்து வந்து கழுத்தில் நிற்கும். இந்தப் பயிற்சியை முறைப்படி விடாமல் செய்து வந்தால் நெற்றியின் நடுவில் ஒலியாக இருக்கும் இறைவன் வெளிப்படுவான். அதனைத் தொடர்ந்து நெற்றிக்கு நடுவில் இருக்கும் ஒலியையும் கீழிருந்து மேலே வந்த ஒளியையும் ஒன்றாகச் சேர்த்து மனதை ஒரு நிலைப்படுத்தி தியானித்தால் அந்த ஒளியும் ஒலியும் உடல் முழுவதும் பரவி உடலுக்கு மேலே செல்லும்.

குறிப்பு: இப்பாடலில் மானசீக பூஜையின் மூலம் இறைவனை உணரலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1013

பாடல் #1013: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

நமவது வாசன மான பசுவே
சிவமது சித்திச் சிவமாம் பதியே
நமவற வாதி நாடுவது அன்றாஞ்
சிவமாகு மாமோனஞ் சேர்தல்மெய் வீடே.

விளக்கம்:

உயிர்களின் ஆன்மா தன் ஆசைகளினால் நான் எனும் அகங்கார மாயையோடு பல பிறவி எடுக்கிறது. ஆன்மாவின் தலைவனாகிய இறைவன் சிவமாக உயிர்களுக்குள் தாமாகவே மறைந்து இருக்கின்றான். சாதகர்கள் பாடல் #1003, #1004 மற்றும் #1005 இல் உள்ளபடி அருச்சினை செய்து நான் எனும் அகங்காரம் இல்லாமல் இறைவனை நாடும் போது அன்றே எண்ணங்களே அற்ற நிலையை பெற்று இறைவனோடு சேர்வதே உண்மையான வீடுபேறாகும்.

பாடல் #1014

பாடல் #1014: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

தெளிவரு நாளிற் சிவஅமு தூறும்
ஒளிவரு நாளில் ஓரெட்டில் உகளுங்
ஒளிவரு அப்பதத் தோரிரண் டாகில்
வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே.

விளக்கம்:

பாடல் #1013 இல் உள்ளபடி உண்மையான வீடுபெற்றை பெற்ற சாதகரின் உடலுக்குள் சிவ அமுது ஊறி தலை உச்சிக்குச் சென்றவுடன் பேரொளி தோன்றி உடலை சுற்றியுள்ள எட்டு தத்துவங்களும் விலகும். அப்படி தோன்றிய பேரொளியை ஒலியாகவும் ஒளியாகவும் தரிசித்தால் பரவெளியில் வீற்றிருக்கும் இறைவன் தமக்குள்ளிருந்து வெளிப்படுவான்.

எட்டு தத்துவங்கள்:

பாடல் #460 இல் உள்ளபடி உயிர்கள் உருவாகும் போது அந்தக் கருவின் முற்பிறவிகளிலிருந்து தொடர்ந்து வினைப் பயன்களால் வரும் கன்மத்துடன் (மும்மலங்களில் ஒன்று) மாயேயம் என்கிற அசுத்த மாயையின் ஏழுவித காரியங்களும் (காலம், நியதி, கலை, வித்தை, இராகம், புருடன், மாயை) சேர்ந்து மொத்தம் எட்டுவித மாயைகளை அந்தக் கரு பெற்றுவிடும். இதுவே எட்டு தத்துவங்களாகும்.

பாடல் #998

பாடல் #998: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

கரண விரளிப் பலகை யமன்றிசை
மரணமிட் டெட்டின் மகார வெழுத்திட்டு
வரணமி லைங்காயம் பூசி யடுப்பிடை
முரணிற் புதைத்திட மோகன மாகுமே.

விளக்கம்:

பட்டுப்போகாத கொன்றை மரத்தின் பலகையை எடுத்து அதை யமனுடய திசையாகிய தெற்குத் திசையை நோக்கி வைத்து அதில் பாடல் #997 இல் உள்ளபடி ‘மசிவாயந’ என்று எழுதி அதன்பின் அந்தப் பலகையின் மேல் மறைப்பில்லாமல் நன்றாகத் தெரியும்படி ஐந்துவித காயங்களாகிய சுக்கு மிளகு கடுகு பூண்டு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைப் பூசிவிட்டு அந்தப் பலைகையைத் தலைகீழாக மண்ணில் புதைத்துவிட்டு அதன் மேலே அமர்ந்து அதில் எழுதி மந்திரத்தை தியானித்து செபித்து வந்தால் மோகனம் எனும் வித்தை கைகூடும்.

குறிப்பு: மோகனம் வித்தை என்பது வேண்டியவற்றை வசியம் செய்வதாகும். உணவுப் பொருளை சுட்டு பக்குவப்படுத்தும் அடுப்பு போல பலகையைப் பக்குவப்படுத்த வேண்டும் என்பதே இங்கு அடுப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடல் #999

பாடல் #999: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்திற்
பாங்கு படவே பலாசப் பலகையிற்
காங்கரு மேட்டிற் கடுப்பூசி விந்துவிட்
டோங்காரம் வைத்திடு உச்சாட னத்துக்கே.

விளக்கம்:

வடமேற்கில் சிவபெருமானின் அழிக்கும் முகத்தில் ஒன்றாகிய ஐயனார் கோயிலில் அழகாகத் தெரியும்படி பட்டுப்போகாத பூவரசம் பலகையின் மேல் ஓலையை வைத்து அதை நெருப்பிலிருந்து வரும் புகை மேல் காட்டி முழுவதும் கரி படரும் வரை வைத்து அதன்மேல் விஷத்தினைப் பூச வேண்டும். அதன் பிறகு ஓலை மேல் ஓங்காரம் எழுதி வைத்து மந்திரம் செபித்து வந்தால் உச்சாடனம் எனும் வாக்கு பலிதம் உண்டாகும்.

குறிப்பு: ஐயனார் கோயில் என்பது ஊரின் வட மேற்கு எல்லையைக் குறிக்கும். வாக்கு பலிதம் என்றால் சாதகர் சொல்லும் வார்த்தைகள் அப்படியே நடப்பதாகும்.

பாடல் #1000

பாடல் #1000: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையிற்
பச்சோலை யிற்பஞ்ச காயத்தைப் பாரித்து
முச்சது ரத்தின் முதுகாட்டில் வைத்திட
அச்சமற மேலோர் மாரணம் வேண்டிலே.

விளக்கம்:

நண்பகல் நேரத்தில் சிவன் உருத்திரனாக தாண்டவம் ஆடும் முதுகாட்டில் பச்சை ஓலையில் ஐந்துவித காயங்களான சுக்கு, மிளகு, கடுகு, பூண்டு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை அரைத்துப் பூசி அதை எடுத்துச் சென்று அக்கினி மூலையில் (தென்கிழக்கு மூலையில்) மூன்று சதுரங்களின் மத்தியில் (முக்கோணத்திற்கு நடுவில்) புதைத்து வைத்துவிட்டால் நமது உள்ளத்தில் அச்சமூட்டும்படி இருக்கும் தீய சக்திகளை எல்லாம் மேலுலகில் இருக்கும் தேவர்களின் துணையோடு அழிக்கும் மாரணம் எனும் சக்தியைப் பெறலாம்.

பாடல் #1001

பாடல் #1001: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஏய்ந்த வரிதார மேட்டின்மே லேபூசி
ஏய்ந்த வகாரம் உகாரம் எழுத்திட்டு
வாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்
கேய்ந்தவைத் தெண்பதி னாயிரம் வேண்டிலே.

விளக்கம்:

பொருத்தமான அரிதாரக் கலவையை ஒரு ஓலையின் மேல் பூசி அதன் மேல் பொருத்தமாக ‘அ’ மற்றும் ‘உ’ எழுத்துக்களை எழுதி சொல்லும் மந்திரத்தை கிரகிக்கக்கூடிய உத்தமமான வில்வ மரப் பலகையின் மேல் வைத்து மந்திரத்தை எண்பதினாயிரம் (80,000) முறை உச்சரித்தால் வசியம் எனும் வித்தை கைகூடும்.

குறிப்பு: வசியம் எனும் வித்தை பகைவர்களாக இருப்பவர்களை நண்பர்களாக மாற்றி எப்போதும் அன்போடு இருக்கச் செய்வது.

பாடல் #1002

பாடல் #1002: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

எண்ணாக் கருடனை ஏட்டில் யகாரமிட்
டெண்ணாப் பொன்னாளில் எழுவெள்ளி பூசிடா
வெண்ணாவற் பலகை யிட்டுமேற் கேநோக்கி
எண்ணா வெழுத்தொடெண் ணாயிரம் வேண்டிலே.

விளக்கம்:

தகுந்த வியாழக் கிழமை அன்று ஓலைச்சுவடியில் ‘யநமசிவா’ என்று எழுதி அதன் மேல் புடம் போட்ட வெள்ளிப் பற்பத்தைப் பூசி பட்டுப்போகாத ஒரு வெள்ளை நிற நாவல் மரப் பலகையின் மேல் வைத்து அந்தப் பலகையை மேற்குத் திசை நோக்கி வைத்து எழுதிய ‘யநமசிவா’ மந்திரத்தை எட்டாயிரம் முறை உச்சரித்தால் ஆகருடணம் (ஆகர்ஷணம்) எனும் வித்தை கைகூடும்.

குறிப்பு: ஆகருடணம் என்பது எண்ணத்தால் கவர்தல் அல்லது வசீகரித்தல் ஆகும்.