பாடல் #1006

பாடல் #1006: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

எய்தி வழிப்படில் எய்தா தனவில்லை
எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமும்
எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும்
எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே.

விளக்கம்:

பாடல் #1003, #1004 மற்றும் #1005 இல் உள்ள முறைப்படி இறைவனை அன்போடு மனம் ஒன்றி வழிபட்டால் கிடைக்காத பேறுகளே இல்லை. இந்திரனிடம் உள்ள செல்வமும் எட்டு வகை சித்திகளும் பிறவியில்லா முக்தியும் கிடைக்கும்.

பாடல் #1005

பாடல் #1005: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

அன்புட னேநின் றமுதமும் ஏற்றியே
பொன்செய் விளக்கும் புகைதீபந் திசைதொறுந்
துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால்
இன்புட னேவந்து எய்திடும் முத்தியே.

விளக்கம்:

இறைவனுக்கு அன்போடு சமைத்த அமுதத்தை (உணவு) படையல் செய்து பொன்னொளி விட்டுப் பிரகாசிக்கும் அளவிற்கு தூய்மையான விளக்குகளில் தீபத்தை ஏற்றி வைத்து அனைத்து திசைகளுக்கும் தூபம் (சாம்பிராணிப் புகை) காட்டித் தாம் அனுபவிக்கின்ற துன்பங்கள் அனைத்தும் இறைவன் அளிக்கும் அருளாகக் கருதி இன்பமுடனே வழிபட்டு வருபவர்கள் நினைத்த நேரத்தில் இறைவனின் இன்னருளால் முக்தியை எய்துவார்கள்.

பாடல் #1004

பாடல் #1004: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

சாங்கம தாகவே சந்தொடு சந்தனந்
தேங்கமழ் குங்குமங் கர்ப்பூரங் காரகிற்
பாங்கு படப்பனி நீராற் குழைத்துவைத்
தாங்கே அணிந்துநீர் அர்ச்சியும் அன்பொடே.

விளக்கம்:

புனுகு கஸ்தூரி ஆகிய கலவைகளுடன் சேர்த்து அரைத்த சந்தனம் வாசம் மிகுந்த குங்குமம் பச்சைக் கற்பூரம் கருமையான அகில் கட்டையை அரைத்த சாந்து ஆகியவற்றை சரியான அளவு எடுத்து முறைப்படி அவற்றை பன்னீரால் குழைத்து அந்தக் கலவையை இறைவனின் திருமேனியின் மேல் அழகுடன் காப்புப் போல பூசிவிட்டு அன்போடு அருச்சனை செய்தல் வேண்டும்.

பாடல் #1003

பாடல் #1003: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

அம்புய நீலங் கழுநீ ரணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளஞ் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.

விளக்கம்:

  1. தாமரை மலர் (அம்புயம்) 2. கருங்குவளை மலர் (நீலம்) 3. செழுங்கழுநீர் மலர் (கழுநீர்) 4. அழகாக கட்டிய நெய்தல் மலர் 5. மாலை மணம் விரிக்கும் பாக்கு மலர் (பூகம்) 6. மாதவி மலர் 7. மந்தாரை மலர் 8. தும்பை மலர் 9. மகிழம்பூ மலர் (வகுளம்) 10. சுரபுன்னை மலர் 11. மல்லிகை மலர் 12. செண்பகம் மலர் 13. பாதிரி மலர் 14. செவ்வந்தி மலர் ஆகிய பதினான்கு வகைப் பூக்களும் இறைவனுக்கு அருச்சினை செய்ய ஏற்ற மலர்கள் ஆகும்.

பாடல் #1002

பாடல் #1002: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

எண்ணாக் கருடனை ஏட்டில் யகாரமிட்
டெண்ணாப் பொன்னாளில் எழுவெள்ளி பூசிடா
வெண்ணாவற் பலகை யிட்டுமேற் கேநோக்கி
எண்ணா வெழுத்தொடெண் ணாயிரம் வேண்டிலே.

விளக்கம்:

தகுந்த வியாழக் கிழமை அன்று ஓலைச்சுவடியில் ‘யநமசிவா’ என்று எழுதி அதன் மேல் புடம் போட்ட வெள்ளிப் பற்பத்தைப் பூசி பட்டுப்போகாத ஒரு வெள்ளை நிற நாவல் மரப் பலகையின் மேல் வைத்து அந்தப் பலகையை மேற்குத் திசை நோக்கி வைத்து எழுதிய ‘யநமசிவா’ மந்திரத்தை எட்டாயிரம் முறை உச்சரித்தால் ஆகருடணம் (ஆகர்ஷணம்) எனும் வித்தை கைகூடும்.

குறிப்பு: ஆகருடணம் என்பது எண்ணத்தால் கவர்தல் அல்லது வசீகரித்தல் ஆகும்.

பாடல் #1001

பாடல் #1001: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஏய்ந்த வரிதார மேட்டின்மே லேபூசி
ஏய்ந்த வகாரம் உகாரம் எழுத்திட்டு
வாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்
கேய்ந்தவைத் தெண்பதி னாயிரம் வேண்டிலே.

விளக்கம்:

பொருத்தமான அரிதாரக் கலவையை ஒரு ஓலையின் மேல் பூசி அதன் மேல் பொருத்தமாக ‘அ’ மற்றும் ‘உ’ எழுத்துக்களை எழுதி சொல்லும் மந்திரத்தை கிரகிக்கக்கூடிய உத்தமமான வில்வ மரப் பலகையின் மேல் வைத்து மந்திரத்தை எண்பதினாயிரம் (80,000) முறை உச்சரித்தால் வசியம் எனும் வித்தை கைகூடும்.

குறிப்பு: வசியம் எனும் வித்தை பகைவர்களாக இருப்பவர்களை நண்பர்களாக மாற்றி எப்போதும் அன்போடு இருக்கச் செய்வது.

பாடல் #1000

பாடல் #1000: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையிற்
பச்சோலை யிற்பஞ்ச காயத்தைப் பாரித்து
முச்சது ரத்தின் முதுகாட்டில் வைத்திட
அச்சமற மேலோர் மாரணம் வேண்டிலே.

விளக்கம்:

நண்பகல் நேரத்தில் சிவன் உருத்திரனாக தாண்டவம் ஆடும் முதுகாட்டில் பச்சை ஓலையில் ஐந்துவித காயங்களான சுக்கு, மிளகு, கடுகு, பூண்டு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை அரைத்துப் பூசி அதை எடுத்துச் சென்று அக்கினி மூலையில் (தென்கிழக்கு மூலையில்) மூன்று சதுரங்களின் மத்தியில் (முக்கோணத்திற்கு நடுவில்) புதைத்து வைத்துவிட்டால் நமது உள்ளத்தில் அச்சமூட்டும்படி இருக்கும் தீய சக்திகளை எல்லாம் மேலுலகில் இருக்கும் தேவர்களின் துணையோடு அழிக்கும் மாரணம் எனும் சக்தியைப் பெறலாம்.

பாடல் #999

பாடல் #999: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்திற்
பாங்கு படவே பலாசப் பலகையிற்
காங்கரு மேட்டிற் கடுப்பூசி விந்துவிட்
டோங்காரம் வைத்திடு உச்சாட னத்துக்கே.

விளக்கம்:

வடமேற்கில் சிவபெருமானின் அழிக்கும் முகத்தில் ஒன்றாகிய ஐயனார் கோயிலில் அழகாகத் தெரியும்படி பட்டுப்போகாத பூவரசம் பலகையின் மேல் ஓலையை வைத்து அதை நெருப்பிலிருந்து வரும் புகை மேல் காட்டி முழுவதும் கரி படரும் வரை வைத்து அதன்மேல் விஷத்தினைப் பூச வேண்டும். அதன் பிறகு ஓலை மேல் ஓங்காரம் எழுதி வைத்து மந்திரம் செபித்து வந்தால் உச்சாடனம் எனும் வாக்கு பலிதம் உண்டாகும்.

குறிப்பு: ஐயனார் கோயில் என்பது ஊரின் வட மேற்கு எல்லையைக் குறிக்கும். வாக்கு பலிதம் என்றால் சாதகர் சொல்லும் வார்த்தைகள் அப்படியே நடப்பதாகும்.

பாடல் #998

பாடல் #998: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

கரண விரளிப் பலகை யமன்றிசை
மரணமிட் டெட்டின் மகார வெழுத்திட்டு
வரணமி லைங்காயம் பூசி யடுப்பிடை
முரணிற் புதைத்திட மோகன மாகுமே.

விளக்கம்:

பட்டுப்போகாத கொன்றை மரத்தின் பலகையை எடுத்து அதை யமனுடய திசையாகிய தெற்குத் திசையை நோக்கி வைத்து அதில் பாடல் #997 இல் உள்ளபடி ‘மசிவாயந’ என்று எழுதி அதன்பின் அந்தப் பலகையின் மேல் மறைப்பில்லாமல் நன்றாகத் தெரியும்படி ஐந்துவித காயங்களாகிய சுக்கு மிளகு கடுகு பூண்டு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைப் பூசிவிட்டு அந்தப் பலைகையைத் தலைகீழாக மண்ணில் புதைத்துவிட்டு அதன் மேலே அமர்ந்து அதில் எழுதி மந்திரத்தை தியானித்து செபித்து வந்தால் மோகனம் எனும் வித்தை கைகூடும்.

குறிப்பு: மோகனம் வித்தை என்பது வேண்டியவற்றை வசியம் செய்வதாகும். உணவுப் பொருளை சுட்டு பக்குவப்படுத்தும் அடுப்பு போல பலகையைப் பக்குவப்படுத்த வேண்டும் என்பதே இங்கு அடுப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.