பாடல் #951

பாடல் #951: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அகார உகார சிகார நடுவாய்
வகாரமோ டாறும் வளியுடன் கூடிச்
சிகார முடனே சிவன்சிந்தை செய்ய
ஒகார முதல்வன் உவந்துநின் றானே.

விளக்கம்:

‘அ’ ‘உ’ எழுத்துக்கள் அடங்கியுள்ள ‘ஓம்’ எழுத்தோடு ‘சி’ நடுவாக இருக்கும் ‘நமசிவய’ எழுத்தையும் சேர்த்து ‘ஓம் நமசிவய’ எனும் மந்திரத்தையும், ‘வ’ முதலாக இருக்கும் ‘வசியநம’ சேர்த்து ‘ஓம் வசியநம’ எனும் மந்திரத்தையும், ‘சி’ முதலாக இருக்கும் ‘சிவயநம’ சேர்த்து ‘ஓம் சிவயநம’ எனும் மந்திரத்தையும் மானசீகமாக வெளியில் இருக்கும் காற்றோடு சேர்த்து செபித்துக் கொண்டே இறைவன் மேல் சிந்தனையை வைத்திருந்தால் ஓங்காரத்தின் முதல்வனாகிய இறைவன் சாதகருக்குள் அன்போடு எழுந்தருளுவான்.

பாடல் #952

பாடல் #952: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அற்ற விடத்தே அகாரம தாவது
உற்ற விடத்தே யுறுபொருள் கண்டிடச்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள்
குற்றம் அறுத்த பொன்போலுங் குளிகையே.

விளக்கம்:

பாடல் #951 இல் உள்ளபடி சாதகருக்குள் அன்போடு எழுந்தருளிய இறைவனை ‘அ’ வடிவில் உணரலாம். ‘அ’ வடிவிற்குள் இருக்கும் மும்மலங்களும் நீங்கிய செழுமையான சுடர் போன்ற உண்மை பொருளை கண்டால் அது மாசில்லாத தூய்மையான தங்கத்தை போல் இருக்கும்.

பாடல் #953

பாடல் #953: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால்
உவ்வென்ற முத்தி யுருகிக் கலந்திடும்
மவ்வென் றென்னுள்ளே வழிபட்ட நந்தியை
எவ்வணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே.

விளக்கம்:

பாடல் #952 இல் உள்ளபடி ‘அ’ வடிவில் மாசில்லாத தூய்மையான தங்கத்தை போல் இருக்கும் இறைவனை ‘உ’ எழுத்தால் ஆராதித்தால் ‘உ’ எழுத்தின் உச்சகட்ட பரிபூரண நிலையில் ‘அ’ எழுத்தோடு ஒன்றாகக் கலந்து ‘ம’ எழுத்தாக மாறி நிற்பான். ‘ம’ வடிவில் இருக்கும் இறைவன் குருவாக நின்று வழிகாட்டும் முறைப்படி செயல்பட்டால் ஓங்காரத்தின் உச்சகட்ட பரிபூரண நிலையை அடைந்து அதனால் கிடைக்கும் பேரின்பமானது வார்த்தைகளால் விவரிக்க இயலாத அளவு இருக்கும்.

குறிப்பு: பாடல் #950, #951, #952, #953 இல் ஓங்காரத்தில் அடங்கியிருக்கும் ‘அ’ ‘உ’ ‘ம’ எழுத்துக்களின் தன்மைகளை அருளுகின்றார்.

பாடல் #954

பாடல் #954: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

நீரில் எழுத்திவ் வுலக ரறிவது
வானில் எழுத்தொன்று கண்டறி வாரில்லை
யாரிவ் வெழுத்தை அறிவா ரவர்கள்
ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே.

விளக்கம்:

உலகத்து உயிர்கள் தம்மால் எழுதப்படும் எழுத்துக்களை மட்டுமே அறிந்து கொண்டுள்ளார்கள். ஆனால் எழுதப்படாத எழுத்து ஒன்று வானத்தில் இருக்கின்றது அதைத் தேடிக் கண்டு அறிந்தவர்கள் யாரும் இல்லை. வானத்தில் இருக்கும் எழுதப்படாத ‘ஓம்’ எனும் எழுத்தைத் தேடி அறிந்தவர்கள் கூட அந்த எழுத்துத்தான் தமது உடலுக்குள்ளும் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள்.

பாடல் #955

பாடல் #955: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்
மாலை நடுவுற ஐம்பது மாவன
மேலை நடுவுற வேதம் விளம்பிய
மூலன் நடுவுற முத்தியும்தந் தானே.

விளக்கம்:

பாடல் #954 இல் உள்ளபடி தமது உடலுக்கு நடுவில் இருக்கும் ஓங்கார எழுத்தை உணர்ந்த சாதகர்கள் தினமும் காலையிலும் மாலையிலும் அதைத் தியானித்தால் அதிலிருந்து ஐம்பது அட்சரங்களும் (பாடல் #924 இல் உள்ளபடி) வெளிப்படுவதை உணரலாம். இந்த ஐம்பது அட்சரங்களுடன் ஓங்கார எழுத்தைச் சேர்த்து மொத்தம் ஐம்பத்தோரு அட்சரங்களின் பரிபூரண உச்ச நிலையை சாதகர்கள் தியானத்தின் மூலம் அடைந்தால் வேதம் சொல்லுகின்ற மூலப் பொருளாகிய இறைவன் அவர்களுக்கு முக்தியை அருளுவான்.

பாடல் #956

பாடல் #956: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று
பாவிக ளத்தின் பயனறி வாரில்லை
ஓவிய ராலும் அறியவொண் ணாதது
தேவியுந் தானுந் திகழ்ந்துஇருந் தானே.

விளக்கம்:

தொப்புளுக்கு கீழே இருக்கும் மூலாதாரத்தில் ஓம் என்னும் நன்மை தரும் பிரணவ எழுத்து ஒன்று உள்ளது. தீவினையாளர்கள் அந்த பிரணவ எழுத்தின் பயன்களை அறியாமல் இருக்கின்றார்கள். ஓம் பிரணவ எழுத்தின் பொருளை பிரம்மன் முதலான தேவர்களும் கூட அறிந்து கொள்ள முடியாது. ஓம் என்னும் அந்த எழுத்தில் இறைவியோடு தானும் சேர்ந்து இறைவனும் இருக்கின்றான்.

பாடல் #957

பாடல் #957: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அவ்வொடு சவ்வென் றரனுற்ற மந்திரம்
அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிகிலர்
அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிந்தபின்
அவ்வொடு சவ்வும் அனாதியு மாமே.

விளக்கம்:

‘ஔ’ ‘சௌ’ என்ற எழுத்துக்கள் இறைவன் இருக்கின்ற மந்திரமாகும். இவை இரண்டையும் சேர்த்து உச்சரித்தால் ‘ஹௌ’ எழுத்தாகி அதன் உச்சரிப்பால் ‘ஹ’ என்றும் அதனோடு ‘ம்’ என்ற எழுத்தை சேர்த்து உச்சரித்தால் ‘ஹம்’ என்ற மந்திரமாக மாறிவிடும். அதன்படியே ‘செள’ எழுத்தோடு ‘ம்’ என்ற எழுத்தை சேர்த்து உச்சரித்தால் ‘செளம்’ என்ற மந்திரமாக மாறிவிடும். இந்த இரண்டு மந்திரங்களையும் சேர்த்தால் ‘அம்சம்’ எனும் மந்திரமாக இருக்கும். இந்த மந்திரத்தின் அருமையை யாரும் அறியவில்லை. இந்த மந்திரத்தின் அருமையை அறிந்தவர்கள் அந்த மந்திரத்தில் மூலப் பரம்பொருளாகிய சதாசிவமூர்த்தி இருப்பதை அறியலாம்.

பாடல் #958

பாடல் #958: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியி னுள்ளே உதயம்பண் ணாநிற்குஞ்
சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலர்
அந்தி தொழுதுபோ யார்த்தகன் றார்களே.

விளக்கம்:

பாடல் #957 இல் உள்ள ‘ஹம்சம்’ மந்திரம் பாடல் #925 இல் உள்ளபடி திருவம்பலச் சக்கரத்தின் நடுவில் இருக்கிறது. இந்த மந்திரத்தை சாதகம் செய்து அதன் சக்தியை அறியாமல் இருக்கின்றார்கள். அதன் சக்தியை அறிந்தவர்களும் வெறுமனே காலையிலும் மாலையிலும் உரக்க செபித்துவிட்டு மந்திரத்தின் பரிபூரண நிலையை அறியாமலேயே சென்றுவிடுகிறார்கள்.

பாடல் #959

பாடல் #959: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

சேவிக்கு மந்திரஞ் செல்லுந் திசைபெற
ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன
பூவுக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில்
ஆவிக்குள் மந்திரம் அங்குசமு மாமே.

விளக்கம்:

பாடல் #957 இல் உள்ள ‘ஹம்சம்’ மந்திரத்தை மனதிற்குள் செபித்து அதன் அதிர்வலைகளை மானசீகமாக அனைத்து திசைகளும் பெறும்படி அனுப்ப வேண்டும். அப்படி செய்தால் அந்த மந்திரம் உயிருக்குள் மரத்தின் வேர் போல ஆதாரமாக நிற்கும். இந்த மந்திரத்தை நெஞ்சத் தாமரைக்குள் பதித்து மனதில் சலனங்கள் இன்றி தியானித்தால் உயிருக்குள் இருக்கும் மந்திரம் மதம் பிடித்த யானையைக் கட்டுப்படுத்தும் அங்குசம் போல மனதையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்தி இறைவனை நோக்கி வழிநடத்திச் செல்லும்.

குறிப்பு: ‘ஹம்சம்’ மந்திரத்தை ஆத்மார்த்தமாக மனதிற்குள் பதித்து எந்தவித சலனமும் இன்றி தியானித்து அதன் அதிர்வலைகளை நான்கு திசைகளுக்கும் சென்று பரவும்படி செய்து வந்தால் அந்த மந்திரம் உயிருக்குள் வேர் போல ஊன்றி நின்று நம்மை இறைவனை நோக்கி செல்லும் பாதையை விட்டு விலகாமல் கட்டுப் படுத்தி வைக்கும்.

பாடல் #960

பாடல் #960: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அருவினில் அம்பரம் அங்கெழு நாதம்
பெருகு துடியிடை பேணிய விந்து
மருவி யகார சிகார நடுவாய்
உருவிட லாறு முறுமந் திரமே.

விளக்கம்:

உருவம் இல்லாததும் கண்ணுக்கு தெரியாததுமான பரகாயத்தில் (பரவெளி) எழுகின்ற ஓம் எனும் ஒலியிலிருந்து பெருகி வரும் சக்தியானது மின்னல் ஒளியைப் போல வெளிச்சமாக வெளிவரும். இந்த ஒலியும் ஒளியும் சேர்ந்த சக்தியானது மருவி ‘நமசிவய’ மந்திரத்தில் இருக்கும் ‘ய’ எழுத்துக்கும் ‘சி’ எழுத்துக்கும் நடுவில் இருக்கும் ‘வ’ எழுத்தாக மாறுகிறது. இப்படி இருக்கும் மூன்று எழுத்து ‘சிவய’ மந்திரத்தை செபித்து அதனோடு லயித்து இருந்தால் அது ஆறு எழுத்துக்கள் கொண்ட ‘ஓம் நமசிவாய’ எனும் மந்திரமாக மாறி உயிருக்குள் ஆதாரமாக நிற்கும்.

குறிப்பு: தூய தமிழ் சொற்கள் நடைமுறைத் தமிழில் மருவி மாறுவதைப் போல ஒலியும் ஒளியும் சேர்ந்து மருவி மந்திரமாகிறது.