பாடல் #358

பாடல் #358: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)

அரிபிர மன்தக்கன் அருக்க னுடன்
வருமதி வாலை வன்னிநல் இந்திரன்
சிரமுக நாசி சிறந்தகை தோள்தான்
அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.

விளக்கம்:

திருமால், பிரம்மன், தக்கன், சூரியன் அவனுடன் வரும் சந்திரன், சரஸ்வதி, அக்கினி, தேவர் தலைவனாகிய இந்திரன் ஆகிய தேவர்களின் தலை, முகம், மூக்கு, சிறப்பான கைகள் அவற்றைத் தாங்கும் தோள்கள் இறைவனின் அருள் இன்றி அறியாமையில் தக்கன் செய்த யாகத்தில் கலந்து கொண்டதனால் இறைவனின் சினத்தினால் அழிந்தது. பிறகு தமது பிழை உணர்ந்து இறைவனை வேண்டி அவற்றினைத் திரும்ப நலமுடன் பெற்றார்கள்.

உட்கருத்து: பாடல் #357ல் உள்ள உட்கருத்தின் படி அறியாமையால் செய்யும் தவறுகளை உணர்ந்து தன்னை திருத்திக்கொண்டு இறைவன் அருள் பெற்ற உயிர்கள் இறைவனை அடையும் வழிகளான பக்தி, யோக, கர்ம, யோகம் போன்ற மார்கங்களை மீண்டும் இறையருளால் செய்து இறைவனை அடையலாம்.

Related image

பாடல் #359

பாடல் #359: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)

செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
செவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்
குவிமந் திரம்கொல் கொடியது வாமே.

விளக்கம்:

இறைவனுக்காக மந்திரங்களை செபித்து இறையருள் பெற்ற தேவர்கள் தக்கனின் யாகத்தில் இறையருள் இல்லாத மந்திரங்களை சொல்லி தங்களுக்குப் பெரும் பொருள் கிடைக்கும் நோக்கத்திலேயே குறியாக இருந்து செய்து குவித்த மந்திரங்கள் இறைவனது அருள் பெறாமல் செய்யப்பட்டமையால் அவர்களையே கொல்லும் கொடிய மந்திரங்களாக மாறிவிட்டன.

உட்கருத்து: உயிர்கள் வேள்வி போல் செய்யும் செயல்கள் யாவும் இறையருளுடன் செய்தால் அவர்களை நல்வழிக்கு அழைத்துச் செல்லும் உலக ஆசைக்காக இறையருள் இல்லாமல் செய்யும் செயல்கள் யாவும் அவர்களுக்கு தீமைகளையே செய்யும்.

பாடல் #360

பாடல் #360: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)

நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
வில்லாற் புரத்தை விளங்கெரி கோத்தவன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.

விளக்கம்:

இறைவனின் அருள் வேண்டி வேள்விகள் அமைத்து தம்மை வணங்கும் நல்லவர்கள் அனைவரும் அனைத்துவித நலன்களும் பெற்று வாழ தயைகூர்ந்து அருள் புரியுமாறு பலகோடி தேவர்கள் அனைவரும் இறைவனை வேண்டிக்கொள்ள யாராலும் அழிக்க முடியாத அசுரர்களையும் அவர்களின் முப்புரங்களையும் வில்லேந்தி அம்புகொண்டு எரித்த எம்பெருமானும் கருணைகொண்டு உயிர்களை வாட்டும் பல கொடிய அசுரர்களையும் அழிக்கும் வலிமையை அவர்களுக்கு வழங்கி அருளினான்.

உட்கருத்து: உயிர்கள் எந்த செயலைச் செய்தாலும், மனம், வாக்கு, உடம்பு ஆகிய மூன்றும் ஒன்றாக வைத்து இறைவனை மட்டுமே நினைத்து அவனது திருவருளை கொடுக்குமாறு வேண்டிக்கொண்டு இறை அருள் பெற்று செய்தால் எத்தகைய வேலையையும் செய்யத்தடையாக இருப்பவற்றை அழிக்கும் சக்தியை இறைவன் உயிர்களுக்கு அருளுவான்.

Related image

பாடல் #351

பாடல் #351: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)

உறுவ தறிதண்டி ஒண்மணற் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலை பெற்றானே.

விளக்கம்:

இந்த உலகத்தில் நடக்கும் செயல்கள் அனைத்துக்கும் காரணமாணவன் ஈசன் என்பதை அறிந்த தண்டி மணல்களைச் சேர்த்து ஒரு லிங்கம் செய்து அந்த மணல் லிங்கத்தை பசும்பாலால் வழிபட்டான். பசும்பால் வீணாவதைப் பார்த்துக் கோபப்பட்ட தண்டியின் தந்தை அந்த மணல் லிங்கத்தைக் காலால் எட்டி உதைத்தார். தந்தையின் இந்த செயலால் கோபம் கொண்ட தண்டி பசுவை மேய்க்க வைத்திருந்த கம்பை கையில் எடுக்க அந்தக் கம்பு மழு என்னும் ஆயுதமாக மாறியது. அந்த மழுவால் தன் தந்தையின் இரண்டு கால்களையும் வெட்டினான். தண்டீசனின் பக்தியைப் பார்த்த சிவபெருமான் தான் சூடியிருக்கும் கொன்றை மாலையை எடுத்து மகிழ்வுடன் சண்டேசுரருக்கு அணிவித்தான்.

உட்கருத்து: லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தையும் உணர்ந்து இந்த உலகத்தில் நடக்கும் செயல்கள் அனைத்துக்கும் காரணமாணவன் ஈசன் என்பதை அறிந்த உயிர் உடலில் இருந்து உயிரை பிரிக்கவும் மீண்டும் பிறவாமல் பிறவியை அறுக்கவும் தான் உணர்ந்த இறைவனை பூஜை செய்யும் பொழுது உடல் தனது ஐம்புலன்களால் அதை தடுக்கிறது. குண்டலினி சக்தி என்னும் கம்பால் ஐம்புலன்களை அடிக்க குண்டலினி என்னும் கம்பு மழுவாக மாறி உடலில் இருக்கும் இடகலை பிங்கலை முச்சுக்காற்றை வெட்டி உடலில் இருந்து உயிரை பிரிக்கிறது. உயிரின் பக்தியைப் பார்த்த சிவபெருமான் தான் சூடியிருக்கும் கொன்றை மாலையை எடுத்து மகிழ்வுடன் அந்த உயிருக்கு அணிவித்து தனது அடியவர்களின் தலைவன் என்னும் பதவி அளிப்பார்.

பாடல் #352

பாடல் #352: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)

ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி இறைவா நமஎன்று கும்பிட
ஈடுஇல் புகழோன் எழுகவென் றானே.

விளக்கம்:

தேவர்கள் எல்லாம் தமக்குத் துன்பம் நேரும் போதெல்லாம் வாடிய முகத்துடன் மனம் வருந்தி இறைவனை விரும்பிச்சென்று இறைவா நமசிவாய என்று திருவடி பணிந்து கும்பிட ஈடு இணையில்லாத புகழை உடைய இறைவன் அவர்கள் மேல் கருணை கொண்டு எழுக என்று கூறி அவர்களின் துயரங்களைத் தீர்த்தான்.

உட்கருத்து: தனக்குள் லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தை உணர்ந்த உயிர்களுக்கு படைக்கும் பிரம்மாவின் தொழிலையும் காக்கும் திருமாலின் தொழிலையும் அளித்து அந்த உயிருக்கு தேவர்கள் என்னும் தகுதியை அளிக்கும் இறைவன் (இதனை திருமந்திர பாடல் எண் #349 மூலம் அறியலாம்) அவர்கள் உணர்ந்த லிங்க தத்துவத்தை இறைவா நமசிவாய என்று வழிபட ஈடு இணையில்லாத புகழை உடைய இறைவன் அவர்கள் மேல் கருணை கொண்டு எழுக என்று கூறி அவர்களின் உடலில் இருந்து உயிரை பிரித்து பிறவா நிலையை அந்த உயிருக்கு அளிப்பார். லிங்க வடிவின் தத்துவமும் இறைவனும் ஒன்றே என்பதை இப்பாடலின் மூலம் உணரலாம்.

Image result for lingam

பாடல் #361

பாடல் #361: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)

தெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே
அளிந்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை
விளிந்தா னதுதக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யானே.

விளக்கம்:

இறையருள் இல்லாத தக்கன் செய்த வேள்வியில் கலந்து கொண்டு பின்பு இறைவனின் கோபத்திற்குள்ளாகி இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டு அனைத்தும் இறைவனே என்று புரிந்துகொண்ட தேவர்கள் இப்படி ஒரு பிழை செய்துவிட்டோமே என்று கலங்கி இருக்கும் போது தேவர்களே நீங்கள் கலங்க வேண்டாம். இறைவன் மேல் உண்மையான அன்பு வைத்தவர்கள் அனைவருமே சென்று சேருமிடம் அவரது திருவடிகளே. தக்கனது வேள்வியை அழித்தது அவனது அறியாமையை நீக்கி அவனை ஆட்கொள்ள வேண்டும் என்ற கருணையினால்தான். தூய்மையான வாக்கை உடைய இறைவன் எது செய்தாலும் அது உயிர்களின் நன்மைக்கே ஆகும்.

உட்கருத்து: உயிர்கள் மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றையும் ஒன்றாக வைத்து இறைவனை வேண்டி இறையருளோடு பல செயல்களைச் செய்தாலும் சில சமயங்களில் அவை தோல்வியடைவதைக் கண்டு மனம் கலங்க வேண்டாம். அவை தோல்வியடைவதும் உயிர்கள் மீது இருக்கும் இறைவனது மாபெரும் கருணையினால்தான். அதற்கும் பின்னால் இறைவன் அடியவருக்கு வழங்கும் அருள் இருக்கும்.

Image result for சதாசிவ மூர்த்தி