பாடல் #424

பாடல் #424: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தெண் திசையாதி
ஒன்றின் பதஞ்செய்த ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேல்அங்கியும் கோலிக்கொண் டானே.

விளக்கம்:

மழை நீரைக் கொண்டிருப்பதால் கருத்த மேகங்கள் காற்றினால் தள்ளப்பட்டு மலைகளின் மழையாகப் பொழிந்து மழை அருவியாகி அருவி ஆறாகி ஆறு எட்டுத்திசையிலும் உள்ள நிலங்களிலெல்லாம் பரவி ஆற்றின் தண்ணீர் நிலத்தில் ஊறி உயிர்களை காக்கும் அனைத்துவிதமான உணவு பொருட்களையும் விளைவித்து பின் ஆற்றின் தண்ணீர் கடலில் கலந்து அதுவே பெருங்கடலாக உருவெடுத்து நிலங்களையெல்லாம் சூழ்ந்து கடல் இருக்கும். வினையின் படி நன்மைக்காக இறைவன் தனது சக்தியை ஓம் எனும் மந்திரத்தை பதம் செய்து யாகக் குண்டத்தின் மேலெழும்பி வரும் சிறிய நெருப்பினால் அழித்து தன்னுள் அடக்கிக் கொள்கிறான் இறைவன்.

உள்விளக்கம்: நல்வினையின் காரணமாக கருத்த மேகங்கள் அழிந்து மழையாகப்பொழிகிறது. மழைநீர் நிலங்களுக்கு பரவி உணவு பொருட்களை உற்பத்தி செய்ய அழிந்து போகின்றது. மீதம் இருக்கும் நல்ல மழை நீர் கடலினில் கலந்து அழிந்து உப்பு நீராகிறது. அந்த நீர் மீண்டும் அழிந்து கருத்த நீர் இருக்கும் மேகமாகின்றது. இது போல் உலகத்தில் நடக்கும் பல அழிவுகளும் உலக நன்மைக்காக இறைவன் ஓம் என்னும் மந்திரத்தை பதம் செய்து உலகம் என்னும் குண்டத்தில் அக்னியை உருவாக்கி செய்கின்றான்.

பாடல் #423

பாடல் #423: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாம்
குதஞ்செய்யும் அங்கி கொளுவியா காச
விதஞ்செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே.

விளக்கம்:

உயிர்களுக்கு இயற்கையை வழங்கி அவர்களை வாழ வைக்கும் உலகமும் பனிபடர்ந்து ஓங்கி நிற்கும் எட்டு விதமான மலைகளும் ஓசை எழுப்பும் அலைகளைக் கொண்ட ஏழு விதமான கடல்களின் வெள்ளப் பெருக்கும் ஆகிய இவை அனைத்தும் இறைவனின் சிறிதளவு நெருப்பினால் அழிந்து ஆகாயம் போல வெற்றிடமாகும் விதத்தைக் கண்ட உண்மை ஞானிகளுக்கு வியப்பாக இருக்காது.

பாடல் #422

பாடல் #422: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

இலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாந்த
நிலையன் றிழிந்தமை நின்றுணர்ந் தேனால்
உலைதந்த மெல்லரி போலும் உலகம்
மலைதந்த மாநிலம் தான்வெந் ததுவே.

விளக்கம்:

இறைவன் வினையின்படி அனைத்தையும் அழிக்கும் மூன்று விதமான பிரளய வகைகளில் கற்பாந்தப் பிரளயத்தில் நிலையில்லாத இந்த உலகம் இழிவு நிலை பெற்று அழிந்து போனதை யானும் இறைவனின் திருவருளால் அவனோடு நின்று கண்டு உணர்ந்தேன். உலையில் இடப்பட்ட அரிசி நெருப்பினால் சூடு பெற்று கொதித்து வெந்து சாதமாகிறதோ அதுபோல மலைகளால் சூழப்பட்ட மாபெரும் நிலப்பரப்பான இந்த உலகமும் இறைவன் தந்த நெருப்பினால் வெந்து அழிந்தது.

மூன்று வகை பிரளயங்கள்:

  1. தினப் பிரளயம் – ஒவ்வொரு உயிரும் தினமும் தூங்கி எழும் இடைவெளியில் நிகழும் அழிவுகள்
  2. கற்பாந்தப் பிரளயம் – வினை முடிந்தபின் வரும் அழிவுகள் (உயிர்களோடு உலகமும் அழிவது)
  3. மகாப் பிரளயம் – ஊழிக்காலத்தில் வரும் பேரழிவு (அண்டங்களையே அழிக்கக் கூடியது)

பாடல் #421

பாடல் #421: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டது
அங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டது
அங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டது
அங்கியவ் வீசருக்கு கைஅம்பு தானே.

விளக்கம்:

இறைவன் பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பின் மூலம் பிரளய காலத்தில் பரந்து விரிந்த உலகத்தையும் அலைகள் நிறைந்த கடல்களையும் அறியாமையாகிய அசுரர்களையும் அழித்து அருளினான். இறைவனால் உருவாக்கப்பட்ட அனைத்தும் அதனதன் வினையின்படி அழிந்து நன்மை பெறுவதற்காக இறைவன் அழித்தல் தொழிலை செய்யும் போது நெருப்பு அவனது திருக்கரத்தில் அம்பாக இருக்கின்றது.

பாடல் #420

பாடல் #420: இரண்டாம் தந்திரம் – 10. திதி (வினைப் பயனாக அனைத்தையும் காக்கும் முறை)

அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணியினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணியினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே.

விளக்கம்:

அனைத்து உயிர்களின் உள்ளுக்குள்ளும் இறைவன் இருந்தாலும் அவனை அறிந்து கொள்ள முடியாதபடி மாயையால் மறைக்கப்பட்டு இருக்கின்றான். அவனை மூச்சுக்காற்றின் மூலம் குண்டலினியை மேலெழுப்பி சகஸ்ரர தளத்தில் கொண்டு சேர்த்துவிட்டால் பேரறிவு ஞானத்தைத் தந்து அருளுவான். அதன் மூலம் பிறவிச் சுழற்சியை அறுத்து முக்தி பெறலாம். இறைவனை எவ்வளவு தான் பணிந்து தொழுதாலும் ஞானத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் உலக ஆசைகளோடு இருந்தால் உலகத்தில் பல்வேறு விதமான உயிர்களாக உடலெடுத்துப் பிறந்து அழிந்தாலும் மீண்டும் மீண்டும் மண்ணுலகத்தில் உடல் பெறவே செய்வான் உலகத்தின் தலைவனாகிய இறைவன்.

பாடல் #419

பாடல் #419: இரண்டாம் தந்திரம் – 10. திதி (வினைப் பயனாக அனைத்தையும் காக்கும் முறை)

தாங்கருந் ..தன்மையுந் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழி
தாங்கிநின் றானும்அத் தாரணியன் தானே.

விளக்கம்:

பல்வேறு விதமான உயிர்களுக்கும் அவற்றின் உடலுக்குள் இருந்து உயிரைத் தாங்கும் தன்மையாக இருக்கும் இறைவனே அவை அழியும் காலத்தில் உள்ளிருந்து வெளியே வரும் உயிரை வாங்குகின்றவனாகவும் இருக்கின்றான். அவனைத் தவிர உயிர்களைத் தாங்கவும் வாங்கவும் அருள் செய்யும் தெய்வம் வேறு ஒன்று இல்லை. இப்படி ஏழு உலகங்களையும் அதிலிருக்கும் அனைத்து உயிர்களையும் தாங்கி நிற்கின்ற இறைவனே அதைத் தாண்டிய விண்ணுலகத்தையும் தாங்கி நிற்கின்றான். அவனே உயிர்கள் தமது பிறவிச் சூழலிலிருந்து விடுபட்டு விண்ணுலகம் அடைய வழியாக யோக முறைகளையும் அருளி அந்த முறைகளைப் பின்பற்றி வரும் உயிர்களின் வழிமுழுவதும் அவற்றைக் காத்தும் அருளுகின்றான்.