பாடல் #1070: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)
மேதாதி யீரெட்டு மாகிய மெல்லியல்
வேதாதி நூலின் விளங்கும் பராபரை
ஆதார மாகியே ஆய்ந்த பரப்பினள்
நாதாதி நாதத்து நல்லரு ளாளே.
விளக்கம்:
உடலை இயக்குகின்ற மேதை முதலான பதினாறு கலைகளாக இருந்து அனைத்தையும் இயக்குகின்ற மென்மையான இயல்பைக் கொண்ட வேதங்கள் கூறும் பராபரை என்பவள் திரிபுரை சக்தியாகும். அவளே அனைத்திற்கும் ஆதாரமாக இருந்து எங்கும் பரந்து வியாபித்து இருப்பவள். அவளே நாதத்தின் முதலாகிய இறைவனுடன் சேர்ந்து நல்லருளைத் தருகிறாள்.
குறிப்பு: பதினாறு கலைகள் என்பது உயிர்களின் உடலின் இயக்கத்திற்கு காரணமாக இருக்கின்றது. அவை கீழ்வருமாறு:
- மேதைக்கலை
- அருக்கீசக்கலை
- விடக்கலை
- விந்துக்கலை
- அர்த்தசந்திரன் கலை
- நிரோதினிக்கலை
- நாதக்கலை
- நாதாந்தக்கலை
- சக்திக்கலை
- வியாபினிக்கலை
- சமனைக்கலை
- உன்மனைக்கலை
- வியோமரூபினிக்கலை
- அனந்தைக்கலை
- அனாதைக்கலை
- அனாசிருதைக்கலை