பாடல் #8

பாடல் #8: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.

விளக்கம்:

உயிர்கள் இறைவனை அடைவதற்காக அவர்களின் கர்மாக்களை அழிக்கும் போது இறைவன் தீயைவிடவும் அதிக வெப்பமானவானாக இருக்கின்றான். உயிர்கள் இறைவனை நாடும் போது தண்ணீரைவிடவும் குளிர்ந்தவனாக இருக்கின்றான். விருப்பு வெறுப்பின்றி தன்னலம் இல்லாத குழந்தையைவிட இறைவன் நல்லவன். காதுகளில் குண்டலங்களை அணிந்துகொண்டும் நீண்ட சடையைக் கொண்டவனுமான இறைவன் தன்னை நாடும் அன்பர்களுக்குத் பெற்ற தாயைவிடவும் மிகவும் அன்பு செலுத்துபவனாகத் திகழ்கின்றான். இருந்தும், அவனுடைய திருவருளை அறிந்தவர்கள் யாரும் இல்லை.

பாடல் #9

பாடல் #9: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னால் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.

விளக்கம்:

பொன்னாலே பின்னப்பட்ட சடையை பின்னால் உடைய எம்மால் வணங்கப்படுகின்ற இறைவன் பெயர் நந்தி என்கின்ற சிவபெருமான் அவனால் வணங்கப்படுகின்றவர் இந்த உலகில் இல்லை.

பாடல் #10

பாடல் #10: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறுந் திங்களும்
தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே.

விளக்கம்:

சதாசிவமூர்த்தியாகிய இறைவனே மேலுலகம் கீழுலகம் ஆகிய இரண்டு வகையான உலகங்களையும் அண்ட சராசரங்களில் விரிந்திருக்கும் ஆகாயமாகவும் உயிர்களுக்கு வெப்பத்தை தருகின்ற நெருப்பாகவும் உலகத்திற்கு ஒளியையும் சக்தியையும் தருகின்ற சூரியனாகவும் இரவில் குளிர்ச்சியான ஒளியைத் தருகின்ற நிலவாகவும் மழையைப் பொழிய வைக்கின்ற மேகங்களாகவும் உலகம் முழுவதும் விரிந்து பரந்திருக்கும் மலைகளாகவும், குளிர்ந்த நீரைக் கொண்டிருக்கும் கடல்களாகவும் இருக்கின்றான்.

பாடல் #11

பாடல் #11: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலின் முடிவும்மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.

விளக்கம்:

அனைத்திற்கும் ஆதியாகிய சதாசிவமூர்த்தியை எண்ணினால் அவருக்கு நிகரான பெருந்தெய்வத்தை தூரத்திலும் அருகிலும் பார்க்க முடியவில்லை. நம்முடைய முயற்சியும் அவனே. நம் முயற்சியின் பயனும் அவனே .மழை பொழிகின்ற மேகமும் அவனே. அவன் பெயர் நந்தி ஆகும்.

பாடல் #12

பாடல் #12: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன்என் றறியகி லார்களே.

விளக்கம்:

சிவபெருமான் நெற்றிக் கண்ணால் அருள் கொடுத்து நின்ற போது எண்ணில் அடங்காத தேவர்கள் அழிவில்லாத அமர வாழ்வைப் பெற்றார்கள். மண்ணில் வாழ்பவர்களும் விண்ணில் வாழ்பவர்களும் சிவபெருமானின் அருளைப்பற்றி தெரிந்து கொள்ளாமல் அவருடைய நெற்றிக் கண்ணால் நிறைய பேர் இறந்து விட்டதாக அறியாமையால் எண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள்.

பாடல் #13

பாடல் #13: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தான்தன்னை மேல்அளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.

விளக்கம்:

மூவுலகையும் மூன்று அடிகளால் அளந்த திருமால் தாமரை மலரில் அமர்ந்த பிரம்மன் முதலிய அனைத்துத் தேவர்களும் இன்னமும் தங்களின் எண்ணத்தால் கூட அளக்க முடியாத சதாசிவமூர்த்தியின் பெருமையைப் பற்றி எண்ணாமல் இருக்கின்றார்கள். அடிமுடி காண முடியாத சதாசிவமூர்த்தியை அளந்து பார்த்தவர்கள் ஒருவரும் இல்லை. கண் பார்க்கக்கூடிய எதையும் கடந்து அளவிட முடியாமல் அனைத்தையும் தனக்குள் உள்ளடக்கி நிற்கின்றான்.

பாடல் #14

பாடல் #14: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

கடந்துநின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணன்எம் மாயன்
கடந்துநின் றான்அவர்க் கப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.

விளக்கம்:

தாமரை மீது அமர்ந்து கொண்டு முதலாவதாகிய படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனையும் கடந்து நிற்கின்றவன் சதாசிவமூர்த்தி. உயிர்களைக் காப்பாற்றும் தொழிலைச் செய்யும் நீல வண்ணனாகிய திருமாலையும் கடந்து நிற்கின்றவன் சதாசிவமூர்த்தி. இவர்கள் இருவருக்கும் அப்புறம் உயிர்களின் மாயையை அழிக்கும் ஈசுவரனையும் கடந்து நிற்கின்றவன் சதாசிவமூர்த்தி. இவ்வாறு மூவரையும் கடந்து அனைத்திற்கும் இறைவனாக இருக்கின்ற சதாசிவமூர்த்தியை யாம் காணும் இடமெல்லாம் கண்டு நின்றோம்.

பாடல் #15

பாடல் #15: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந் தார்ந்திருந் தான்அருட்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே.

விளக்கம்:

உயிரின் ஆரம்பத்திலிருந்து உயிர்களுக்குப் பாதுகாப்பாக உடலுக்குள்ளே நின்று உலகின் அனைத்து வினை மாற்றங்களுக்கு காரணமாகவும்  எங்கும் பரவி விரிந்து இருப்பவனும் உயிர்களுக்குள்ளேயே உணரப்படுபவனுமாய் இருந்து என்றும் அருள் வழங்கும் குறையாத தன்மையுடைய மாபெரும் ஜோதியாகவும் அனைத்திற்கும் நீதியுமாகவும் என்றும் அழியாத சக்தியுமாகவும் இறைவன் நிலைத்து நிற்கின்றான்.

பாடல் #16

பாடல் #16: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரருந் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே

விளக்கம்:

நரம்போடு இருக்கும் கொன்றைப் பூவைச் சூடிக்கொண்டு சுருள் சுருளான சடையை உடையவரும், அழகு நிறைந்து பிரகாசிக்கும் நெற்றியைக் கொண்டிருக்கும் உமாதேவியை தமது இடபாகத்தில் உடையவரும், ஒரு மாசில்லாத தூய்மையானவருமான இறைவனை, மும்மல பற்றுக்கள் இன்னும் நீங்காமல் இருக்கும் அமரர்களும் தேவர்களும் எப்படிக் கூடிக் குலாவுவார்கள்? ஆதலால், இறைவனின் இயல்பை அவர்கள் அறியாமலேயே இருக்கின்றனர்.

பாடல் #17

பாடல் #17: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்
ஆயம் கத்தூரி அதுமிகும் அவ்வழி
தேசம் கலந்தொரு தேவனென் றெண்ணினும்
ஈசன் உறவுக் கெதிரில்லை தானே.

விளக்கம்:

வெங்காயம் பெருங்காயம் ஆகிய இரண்டையும் ஒன்றாக கொதிக்க வைத்தாலும் அதிலிருந்து வரும் வாசனையை விட கருமையான கத்தூரியிலிருந்து வரும் வாசம் அதிகமாகும். அதுபோலவே உலகெங்கும் எத்தனை தெய்வங்களைத் தேடி அடைந்து அவர்களே இறைவன் என்று எண்ணிக்கொண்டு அவர்களோடு கலந்து முயன்றாலும் அனைத்திற்கும் இறைவனான ஈசுவரனை (சதாசிவமூர்த்தியை) கலந்து பெறும் உறவுக்கு (பேரின்பத்திற்கு) அது கொஞ்சம் கூட ஈடாகாது.

உள் விளக்கம்:

வெங்காயம் என்பது பருமையான தேகத்தையும் (அன்னமயகோஷம்) பெருங்காயம் என்பது நுண்மையான தேகம் (மனோமய கோஷத்தையும்) குறிக்கும். இவ்விரண்டு தேகங்களும் உயிர்களின் உடலுக்குள்ளே கலந்து இருந்தாலும் அது இறைவனோடு கலந்து பெறும் சூக்கும தேகத்திற்கு ஈடாகாது. ஆகவே உலகப் பற்றுக்கள் எவ்வளவுதான் இன்பத்தைத் தருவதாக இருந்தாலும் அவை அனைத்தும் இறைவனோடு இரண்டறக் கலந்து பெறும் பேரின்பத்திற்கு ஈடாகாது.