திருமந்திரம் ஆறாம் தந்திரம் அனைத்து பாடல்களும் விளக்கங்களுடன் PDF மின் புத்தகமாக கீழே இருக்கும் இணைப்பில் பதிவிறக்கிக் கொள்ளும்படி கொடுத்துள்ளோம். அதற்கு கீழே நேரடியாகவே புத்தகத்தை பார்த்துப் படிக்கும்படி கொடுத்துள்ளோம்.
கோ இல் கொண்ட அன்றே குடி கொண்டது ஐவரும் வா இல் கொண்டு ஆங்கே வழி நின்று அருளுவர் தா இல் கொண்டால் போல் தலைவன் என் உள் புக வா இல் கொண்டு ஈசனும் வாழ வந்தானே.
பதப்பொருள்:
கோ (உயிர்கள் பிறப்பு எடுக்கும் போதே இறைவன் இருக்கின்ற கோயிலுக்கு) இல் (உயிர்களின் உடலை இடமாக) கொண்ட (கொண்ட) அன்றே (அந்த பொழுதே) குடி (உயிர்களின் உடம்புக்குள் குடி) கொண்டது (புகுந்து கொண்டது) ஐவரும் (ஐந்து தெய்வங்களும் தத்தமது தொழில்களுடன் ஐந்து பூதங்களாகவும் புலன்களாகவும் நின்று) வா (அந்த புலன்கள் நுழைகின்ற) இல் (இடமாக) கொண்டு (கொண்டு) ஆங்கே (அந்த) வழி (வழியாகவே) நின்று (நின்று) அருளுவர் (அருளுகின்றனர்) தா (எப்போது புலன்களை விட்டு விட்டு குழந்தை தாயை தேடி அழுவது போல இறைவனை தேடுகின்றோமோ அப்போது) இல் (குழந்தை இருக்கும் இடம் தேடி) கொண்டால் (தாய் தானாகவே வருவது) போல் (போலவே) தலைவன் (இறைவனும் தலைவனாகவே) என் (அடியவரின்) உள் (உள்ளே) புக (புகுந்து) வா (தமது அருள் நுழைகின்ற) இல் (இடமாக) கொண்டு (அடியவரை ஆட்கொண்டு) ஈசனும் (இறைனும்) வாழ (அடியவரின் உடலையே தாம் வாழுகின்ற இடமாக கொண்டு) வந்தானே (வந்து வீற்றிருந்து அருளுவான்).
விளக்கம்:
உயிர்கள் பிறப்பு எடுக்கும் போதே அவற்றை தாம் இருக்கும் கோயிலாகவே படைக்கின்றான் இறைவன். அப்படி உயிர்கள் கோயிலாக உடலெடுத்து பிறக்கும் போதே ஐந்து தெய்வங்களும் தத்தமது தொழில்களுடன் ஐந்து பூதங்களாகவும் புலன்களாகவும் நின்று அந்த புலன்கள் நுழைகின்ற இடமாக உயிர்களின் உடலை ஏற்றுக் கொண்டு அதன் வழியாகவே நின்று அருளுகின்றனர். உயிர்கள் எப்போது புலன்களின் வழியே வாழ்வதை விட்டு விட்டு குழந்தை தாயை தேடி அழுவது போல இறைவனை தேடுகின்றார்களோ அப்போது குழந்தை இருக்கும் இடம் தேடி தாய் தானாகவே வருவது போல இறைவனும் தலைவனாகவே அந்த அடியவரின் உடலுக்கு உள்ளே இருந்து அடியவரை ஆட்கொண்டு அடியவரின் உடலையே தாம் வாழுகின்ற இடமாக கொண்டு வீற்றிருந்து அருளுவான்.
ஐவர்கள்:
ஐந்து தெய்வங்கள் – ஐந்து தொழில்கள் – பஞ்ச பூதங்கள் – ஐந்து பொறிகள் – ஐந்து புலன்கள்
பிரம்மன் – படைத்தல் – நிலம் – மூக்கு – நுகர்தல்
திருமால் – காத்தல் – நீர் – நாக்கு – சுவைத்தல்
உருத்திரன் – அழித்தல் – நெருப்பு – கண் – பார்த்தல்
உலந்தனர் பின்னும் உளர் என நிற்பர் நிலம் தரும் நீர் தெளி ஊன் அவை செய்ய புலம் தரும் பூதங்கள் ஐந்தும் ஒன்று ஆக வலம் தரும் தேவரை வந்தி செயீரே.
பதப்பொருள்:
உலந்தனர் (இந்த பிறவிக்கான வினைகள் தீர்ந்து இறந்து போன) பின்னும் (பிறகும்) உளர் (இனியும் பிறவி வேண்டும்) என (என்று) நிற்பர் (இன்னமும் தீர்க்க வேண்டிய வினைகளை அனுபவிக்க நிற்பார்கள்) நிலம் (அவர்களுக்கு தேவையான உடலை நிலத்தை) தரும் (தருகின்ற) நீர் (நீரினால்) தெளி (தெளிந்து உருவாகிய உணவினால்) ஊன் (வளர்கின்ற தசையும்) அவை (அவர்களுக்கு ஏற்ற வடிவத்தை) செய்ய (செய்ய) புலம் (அவர்களின் உயிர் இருக்கின்ற இடமாகிய உடம்பை) தரும் (தருகின்ற) பூதங்கள் (பூதங்கள்) ஐந்தும் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து) ஒன்று (ஒன்று) ஆக (சேர்ந்து கொடுக்க) வலம் (அந்த உடம்பிற்குள் நிகழ்கின்ற அனைத்து இயக்கங்களையும்) தரும் (தருகின்ற) தேவரை (தேவர்களை) வந்தி (வணங்கி வழிபடுவதை) செயீரே (செய்யுங்கள்).
விளக்கம்:
இந்த பிறவிக்கான வினைகள் தீர்ந்து இறந்து போன பிறகும் இனியும் பிறவி வேண்டும் என்று இன்னமும் தீர்க்க வேண்டிய வினைகளை அனுபவிக்க நிற்பார்கள். அவர்களுக்கு தேவையான உடலை நிலத்தை தருகின்ற நீரினால் தெளிந்து உருவாகிய உணவினால் வளர்கின்ற தசையும் அவர்களுக்கு ஏற்ற வடிவத்தை செய்து கொடுக்கும். அவர்களின் உயிர் இருக்கின்ற இடமாகிய உடம்பை தருகின்ற பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் ஒன்று சேர்ந்து கொடுக்கும். அந்த உடம்பிற்குள் நிகழ்கின்ற அனைத்து இயக்கங்களையும் தருகின்ற தேவர்களை வணங்கி வழிபடுவதை செய்யுங்கள்.
கருத்து:
உயிர்களின் உடம்பாக இருப்பதே இறைவனின் சிவ இலிங்கமாகும். அதற்குள் இறைவனாகவே இருக்கின்ற அனைத்து தேவர்களும் இருக்கின்றார்கள். ஆகவே உயிர்களின் உடம்பையே கோயிலாக வணங்கி வந்தால் இனி பிறவி இல்லாத நிலையை அடையலாம். பாடல் #1823 இல் வருகின்ற “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்கிற வாசகம் இந்த பொருளையே குறிக்கின்றது.
இறைவனின் அடையாளமாகிய சிவ இலிங்கமே உயிர்களின் உடம்பின் வடிவமாகவும், சித் (சித்தமாகிய) + அம் (ஆகாயத்தில்) + பரம் (வீற்றிருக்கின்ற பரம்பொருள்) = சிதம்பரமே உயிர்களின் உடலுக்குள் இருக்கின்ற எண்ணங்களாகவும், அசையா சக்தியாகிய பரம்பொருளே உயிர்களின் உடம்பிற்குள் இருக்கின்ற ஆன்மாவாகவும், இறைவன் ஆடுகின்ற திருக்கூத்தே உயிர்களின் உடலில் இருக்கின்ற அசைவுகளாகவும் இருக்கின்றது.
பாடல் #1725: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)
தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாய்த் திரைபொரு நீரது மஞ்சன மாலை வரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலை கரையற்ற நந்தி கலையுந்திக் காமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
தரையுறற சததி தனிலிஙகம விணணாயத திரைபொரு நீரது மஞசன மாலை வரைதவழ மஞசுநீர வானுடு மாலை கரையறற நநதி கலையுநதிக காமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
தரை உற்ற சத்தி தனி இலிங்கம் விண் ஆய் திரை பொரு நீர் அது மஞ்சன மாலை வரை தவழ் மஞ்சு நீர் வான் உடு மாலை கரை அற்ற நந்தி கலையும் திக்கு ஆமே.
பதப்பொருள்:
தரை (நிலத்தில்) உற்ற (வீற்றிருக்கும்) சத்தி (இறைவியானவள்) தனி (இறைவனுக்கு சரிசமமாக இருக்கின்ற) இலிங்கம் (இலிங்க வடிவத்தின் அடிப் பாகத்தில்) விண் (ஆகாயம்) ஆய் (ஆக இருக்கின்றாள்) திரை (அலை மிகுந்த) பொரு (கடல்களில்) நீர் (இருக்கின்ற நீர்கள்) அது (அதுவே) மஞ்சன (இறைவனுக்கு அபிஷேகமாக) மாலை (சாற்றிக் கொண்டே இருக்கின்றது) வரை (மலை உச்சியில்) தவழ் (தவழ்கின்ற) மஞ்சு (மேகங்களிலுள்ள) நீர் (தூய்மையான நீர் இறைவனினுக்கு நித்ய தீர்த்தமாக அபிஷேகம் செய்து கொண்டே இருக்கின்றது) வான் (வானத்தில் உள்ள) உடு (நட்சத்திரங்கள் எல்லாம்) மாலை (இறைவனின் திருமார்பில் அணிகின்ற மாலையாக இருக்கின்றது) கரை (எல்லை) அற்ற (இல்லாத) நந்தி (குருநாதராகிய இறைவனின்) கலையும் (ஆடையாக) திக்கு (அனைத்து திசைகளும்) ஆமே (இருக்கின்றது).
விளக்கம்:
நிலத்தில் வீற்றிருக்கும் இறைவியானவள் இறைவனுக்கு சரிசமமாக இருக்கின்ற இலிங்க வடிவத்தின் அடிப் பாகத்தில் ஆகாயமாக இருக்கின்றாள். அலை மிகுந்த கடல்களில் இருக்கின்ற நீர்கள் எல்லாம் இறைவனுக்கு அபிஷேகமாக சாற்றிக் கொண்டே இருக்கின்றது. மலை உச்சியில் தவழ்கின்ற மேகங்களிலுள்ள தூய்மையான நீர் இறைவனினுக்கு நித்ய தீர்த்தமாக அபிஷேகம் செய்து கொண்டே இருக்கின்றது. வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் இறைவனின் திருமார்பில் அணிகின்ற மாலையாக இருக்கின்றது. எல்லை இல்லாத குருநாதராகிய இறைவனின் ஆடையாக அனைத்து திசைகளும் இருக்கின்றது.
போது புனை கழல் பூமி அது ஆவது மாது புனை முடி வானகம் ஆவது நீதி உள் ஈசன் உடல் விசும்பு ஆய் நிற்கும் ஆதி உற நின்றது அப் பரிசு ஆமே.
பதப்பொருள்:
போது (மலர்கள்) புனை (சூடிய) கழல் (இறைவனின் திருவடிகள்) பூமி (உலகம்) அது (அது) ஆவது (ஆக இருக்கின்றது) மாது (இறைவனின் சரிபாதியாக இருக்கின்ற இறைவியானவள்) புனை (கங்கை நீராக அமர்ந்து இருக்கின்ற) முடி (இறைவனின் திருமுடி) வானகம் (ஆகாயம்) ஆவது (ஆக இருக்கின்றது) நீதி (தர்மத்தின்) உள் (வடிவமாக உள்ள) ஈசன் (இறைவனின்) உடல் (திருமேனியானது) விசும்பு (அண்ட சராசரங்கள்) ஆய் (ஆக) நிற்கும் (நிற்கின்றது) ஆதி (ஆதி மூலமாகிய இறைவனுக்கு) உற (ஏற்ற வகையில்) நின்றது (நின்றது) அப் (அவன் அருளிய) பரிசு (பரிசாகிய) ஆமே (இலிங்கமே ஆகும்).
விளக்கம்:
மலர்கள் சூடிய இறைவனின் திருவடிகள் உலகமாக இருக்கின்றது. இறைவனின் சரிபாதியாக இருக்கின்ற இறைவியானவள் கங்கை நீராக அமர்ந்து இருக்கின்ற இறைவனின் திருமுடி ஆகாயமாக இருக்கின்றது. தர்மத்தின் வடிவமாக உள்ள இறைவனின் திருமேனியானது அண்ட சராசரங்களாக நிற்கின்றது. ஆதி மூலமாகிய இறைவனுக்கு ஏற்ற வகையில் நின்றது அவன் அருளிய பரிசாகிய இலிங்கமே ஆகும்.
அகல் இடம் ஆய் அறியாமல் அடங்கும் உகல் இடம் ஆய் நின்ற ஊன் அதின் உள்ளே பகல் இடம் ஆம் முன்னம் பாவ விநாசன் புகல் இடம் ஆய் நின்ற புண்ணியன் தானே.
பதப்பொருள்:
அகல் (அகன்று விரிந்து இருக்கின்ற) இடம் (அண்ட சராசரங்கள்) ஆய் (ஆக) அறியாமல் (யாரும் அறியாத வண்ணம்) அடங்கும் (அனைத்திலும் அடங்கி இருக்கின்ற பரம்பொருள்) உகல் (அழியக்கூடிய) இடம் (இடம்) ஆய் (ஆக) நின்ற (நிற்கின்ற) ஊன் (எமது உடம்பு) அதின் (அதற்கு) உள்ளே (உள்ளே எழுந்தருளினான்) பகல் (அப்போது இருளே இல்லாத வெளிச்சமான) இடம் (இடம்) ஆம் (ஆக எமது உடலை மாற்றி) முன்னம் (இது வரை எமக்கு இருந்த) பாவ (அனைத்து விதமான பாவங்களையும்) விநாசன் (அழித்து அருள் புரிந்து) புகல் (யாம் சரணாகதியாக எப்போதும் இருக்கின்ற) இடம் (இடம்) ஆய் (ஆகவே) நின்ற (நிற்கின்றான்) புண்ணியன் (புண்ணியமே உருவான) தானே (இலிங்க வடிவான இறைவன்).
விளக்கம்:
அகன்று விரிந்து இருக்கின்ற அண்ட சராசரங்களாக யாரும் அறியாத வண்ணம் அனைத்திலும் அடங்கி இருக்கின்ற பரம்பொருள் அழியக்கூடிய இடமாக நிற்கின்ற எமது உடம்பிற்கு உள்ளே எழுந்தருளினான். அப்போது இருளே இல்லாத வெளிச்சமான இடமாக எமது உடலை மாற்றி, இது வரை எமக்கு இருந்த அனைத்து விதமான பாவங்களையும் அழித்து அருள் புரிந்து, யாம் சரணாகதியாக எப்போதும் இருக்கின்ற இடமாகவே நிற்கின்றான் புண்ணியமே உருவான இலிங்க வடிவான இறைவன்.
பாடல் #1722: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)
அதுவுணர்ந் தேனொரு தன்மையை நாடி யெதுவுணரா வகை நின்றன னீசன் புதுவுணர் வான புவனங்க ளெட்டு மிதுவுணர்ந் தென்னுடல் கோயில் கொண்டானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
அதுவுணரந தெனொரு தனமையை நாடி யெதுவுணரா வகை நினறன னீசன புதுவுணர வான புவனஙக ளெடடு மிதுவுணரந தெனனுடல கொயில கொணடானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
அது உணர்ந்தேன் ஒரு தன்மையை நாடி எது உணரா வகை நின்றனன் ஈசன் புது உணர்வு ஆன புவனங்கள் எட்டும் இது உணர்ந்த என் உடல் கோயில் கொண்டானே.
பதப்பொருள்:
அது (அனைத்திலும் இருக்கின்ற பரம்பொருளை) உணர்ந்தேன் (உணர்ந்து கொண்டேன்) ஒரு (ஒரு) தன்மையை (ஜோதியின் தன்மையில் உள்ள இலிங்க வடிவத்தில்) நாடி (தேடுவதன் மூலம்) எது (எந்த முறையினாலும்) உணரா (உணர்ந்து கொள்ள முடியாத) வகை (வகையில்) நின்றனன் (நிற்கின்ற) ஈசன் (இறைவனை) புது (ஒளி பொருந்திய இலிங்கத்தின் மூலம் உணரும் போது இது வரை யாம் உணராத ஒரு புதுவிதமான) உணர்வு (உணர்வு) ஆன (ஆக) புவனங்கள் (அனைத்து உலகங்களையும் சென்று) எட்டும் (அடைகின்ற தன்மையை) இது (எமக்குள்) உணர்ந்த (உணர்ந்த போது) என் (அவன் எமது) உடல் (உடலையே) கோயில் (தமக்கு விருப்பமான கோயிலாக) கொண்டானே (ஆட்கொண்டு வீற்றிருந்தான்).
விளக்கம்:
அனைத்திலும் இருக்கின்ற பரம்பொருளை ஒரு ஜோதியின் தன்மையில் உள்ள இலிங்க வடிவத்தில் தேடுவதன் மூலம் உணர்ந்து கொண்டேன். எந்த முறையினாலும் உணர்ந்து கொள்ள முடியாத வகையில் நிற்கின்ற இறைவனை ஒளி பொருந்திய இலிங்கத்தின் மூலம் உணரும் போது, இது வரை யாம் உணராத ஒரு புதுவிதமான உணர்வாக அனைத்து உலகங்களையும் சென்று அடைகின்ற தன்மையை எமக்குள் உணர்ந்த போது, அவன் எமது உடலையே தமக்கு விருப்பமான கோயிலாக ஆட்கொண்டு வீற்றிருந்தான்.
மறை அவர் அற்சனை வண் படிகம் தான் இறை அவர் அற்சனை ஏய பொன் ஆகும் குறை இல் வசீகரம் கோமளம் ஆகும் துறை உடை சூத்திரர் தொல் வாள் இலிங்கமே.
பதப்பொருள்:
மறை (வேதங்களை உச்சரித்து) அவர் (சாதகர்கள்) அற்சனை (பூசை செய்கின்ற போது) வண் (வடிவாக அமைக்கப் பட்ட) படிகம் (படிக இலிங்கம்) தான் (தான் பெற்ற மந்திரங்களை பிரதிபலித்து நன்மை செய்யக் கூடியது ஆகும்) இறை (இறைவன் மேல் பக்தியோடு) அவர் (சாதகர்கள்) அற்சனை (பூசை செய்கின்ற போது) ஏய (அந்த இலிங்கமே அவர்களின் பக்குவத்திற்கு ஏற்ற) பொன் (பொன் போல ஒளி வீசி) ஆகும் (அமைதியை கொடுக்கக் கூடியது ஆகும்) குறை (அப்போது ஒரு குறையும்) இல் (இல்லாத) வசீகரம் (சாதகரின் மனதை வசீகரிக்கக் கூடிய) கோமளம் (பேரழகு பெற்ற) ஆகும் (இலிங்கமாக ஆகும்) துறை (இவை எல்லாம் இறைவனை அடைவதை மட்டுமே தொழிலாக) உடை (ஏற்றுக் கொண்டு) சூத்திரர் (அதற்கான முறைகளை அறிந்து அதன் படியே செய்கின்றவர்களுக்கு) தொல் (ஆதியிலிருந்தே இருக்கின்ற) வாள் (ஜோதி வடிவான இறைவனின் அம்சமாகவே சாதகரையும் ஜோதியாக மாற்றக் கூடிய) இலிங்கமே (ஒளி வடிவான இலிங்கமாக ஆகி விடும்).
விளக்கம்:
வேதங்களை உச்சரித்து சாதகர்கள் பூசை செய்கின்ற போது வடிவாக அமைக்கப் பட்ட படிக இலிங்கம் தான் பெற்ற மந்திரங்களை பிரதிபலித்து நன்மை செய்யக் கூடியது ஆகும். இறைவன் மேல் பக்தியோடு சாதகர்கள் பூசை செய்கின்ற போது அந்த இலிங்கமே அவர்களின் பக்குவத்திற்கு ஏற்ற பொன் போல ஒளி வீசி அமைதியை கொடுக்கக் கூடியது ஆகும். அப்போது ஒரு குறையும் இல்லாத சாதகரின் மனதை வசீகரிக்கக் கூடிய பேரழகு பெற்ற இலிங்கமாக ஆகும். இவை எல்லாம் இறைவனை அடைவதை மட்டுமே தொழிலாக ஏற்றுக் கொண்டு அதற்கான முறைகளை அறிந்து அதன் படியே செய்கின்றவர்களுக்கு ஆதியிலிருந்தே இருக்கின்ற ஜோதி வடிவான இறைவனின் அம்சமாகவே சாதகரையும் ஜோதியாக மாற்றக் கூடிய ஒளி வடிவான இலிங்கமாக ஆகி விடும்.
துன்றும் தயிர் நெய் பால் தூய மெழுகு உடன் கன்றிய செப்பு கனல் இரதம் சலம் வன் திறல் செங்கல் வடிவு உடை வில்லம் பொன் தென்றி அம் கொன்றை தெளி சிவ இலிங்கமே.
பதப்பொருள்:
துன்றும் (முறைப்படி பசும் பாலில் செய்த தூய்மையான) தயிர் (தயிரும்) நெய் (நெய்யும்) பால் (பாலும்) தூய (கலப்படமில்லாத) மெழுகு (அரக்கும்) உடன் (இவற்றுடன்) கன்றிய (முறைப்படி புடம் போட்ட) செப்பு (செம்பும்) கனல் (நெருப்பும்) இரதம் (பழச்சாறும்) சலம் (தூய்மையான அபிஷேக நீரும்) வன் (வலிமையாக) திறல் (சுடப்பட்டு இறுகிய) செங்கல் (செம்மையான கல்லும்) வடிவு (அழகிய வடிவத்தை) உடை (உடைய) வில்லம் (வில்வ இலையும்) பொன் (தங்கமும்) தென்றி (மென்மையுடன் தேன் நிறைந்த) அம் (அழகிய) கொன்றை (கொன்றை மலர்களும் வைத்து வழிபடுவது) தெளி (மனதை தெளிவு படுத்தி இறைவனை அடைவதற்கு உதவும்) சிவ (சிவபெருமானின்) இலிங்கமே (பரிபூரண இலிங்கம் ஆகும்).
விளக்கம்:
முறைப்படி பசும் பாலில் செய்த தூய்மையான தயிரும், நெய்யும், பாலும், கலப்படமில்லாத அரக்கும், இவற்றுடன் முறைப்படி புடம் போட்ட செம்பும், நெருப்பும் (விளக்கு, யாகம், போன்றவை), பழச்சாறும், தூய்மையான அபிஷேக நீரும், வலிமையாக சுடப்பட்டு இறுகிய செம்மையான கல்லும், அழகிய வடிவத்தை உடைய வில்வ இலையும், தங்கமும், மென்மையுடன் தேன் நிறைந்த அழகிய கொன்றை மலர்களும் வைத்து வழிபடுவது மனதை தெளிவு படுத்தி இறைவனை அடைவதற்கு உதவும் சிவபெருமானின் பரிபூரண இலிங்கம் ஆகும்.