பாடல் #1723

பாடல் #1723: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

அகலிட மாயறி யாம லடங்கு
முகலிட மாய்நின்ற ஊனதி னுள்ளே
பகலிட மாமுன்னம் பாவ வினாசன்
புகலிட மாய்நின்ற புண்ணியன் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அகலிட மாயறி யாம லடஙகு
முகலிட மாயநினற ஊனதி னுளளெ
பகலிட மாமுனனம பாவ வினாசன
புகலிட மாயநினற புணணியன றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அகல் இடம் ஆய் அறியாமல் அடங்கும்
உகல் இடம் ஆய் நின்ற ஊன் அதின் உள்ளே
பகல் இடம் ஆம் முன்னம் பாவ விநாசன்
புகல் இடம் ஆய் நின்ற புண்ணியன் தானே.

பதப்பொருள்:

அகல் (அகன்று விரிந்து இருக்கின்ற) இடம் (அண்ட சராசரங்கள்) ஆய் (ஆக) அறியாமல் (யாரும் அறியாத வண்ணம்) அடங்கும் (அனைத்திலும் அடங்கி இருக்கின்ற பரம்பொருள்)
உகல் (அழியக்கூடிய) இடம் (இடம்) ஆய் (ஆக) நின்ற (நிற்கின்ற) ஊன் (எமது உடம்பு) அதின் (அதற்கு) உள்ளே (உள்ளே எழுந்தருளினான்)
பகல் (அப்போது இருளே இல்லாத வெளிச்சமான) இடம் (இடம்) ஆம் (ஆக எமது உடலை மாற்றி) முன்னம் (இது வரை எமக்கு இருந்த) பாவ (அனைத்து விதமான பாவங்களையும்) விநாசன் (அழித்து அருள் புரிந்து)
புகல் (யாம் சரணாகதியாக எப்போதும் இருக்கின்ற) இடம் (இடம்) ஆய் (ஆகவே) நின்ற (நிற்கின்றான்) புண்ணியன் (புண்ணியமே உருவான) தானே (இலிங்க வடிவான இறைவன்).

விளக்கம்:

அகன்று விரிந்து இருக்கின்ற அண்ட சராசரங்களாக யாரும் அறியாத வண்ணம் அனைத்திலும் அடங்கி இருக்கின்ற பரம்பொருள் அழியக்கூடிய இடமாக நிற்கின்ற எமது உடம்பிற்கு உள்ளே எழுந்தருளினான். அப்போது இருளே இல்லாத வெளிச்சமான இடமாக எமது உடலை மாற்றி, இது வரை எமக்கு இருந்த அனைத்து விதமான பாவங்களையும் அழித்து அருள் புரிந்து, யாம் சரணாகதியாக எப்போதும் இருக்கின்ற இடமாகவே நிற்கின்றான் புண்ணியமே உருவான இலிங்க வடிவான இறைவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.