பாடல் #1725

பாடல் #1725: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாய்த்
திரைபொரு நீரது மஞ்சன மாலை
வரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலை
கரையற்ற நந்தி கலையுந்திக் காமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தரையுறற சததி தனிலிஙகம விணணாயத
திரைபொரு நீரது மஞசன மாலை
வரைதவழ மஞசுநீர வானுடு மாலை
கரையறற நநதி கலையுநதிக காமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தரை உற்ற சத்தி தனி இலிங்கம் விண் ஆய்
திரை பொரு நீர் அது மஞ்சன மாலை
வரை தவழ் மஞ்சு நீர் வான் உடு மாலை
கரை அற்ற நந்தி கலையும் திக்கு ஆமே.

பதப்பொருள்:

தரை (நிலத்தில்) உற்ற (வீற்றிருக்கும்) சத்தி (இறைவியானவள்) தனி (இறைவனுக்கு சரிசமமாக இருக்கின்ற) இலிங்கம் (இலிங்க வடிவத்தின் அடிப் பாகத்தில்) விண் (ஆகாயம்) ஆய் (ஆக இருக்கின்றாள்)
திரை (அலை மிகுந்த) பொரு (கடல்களில்) நீர் (இருக்கின்ற நீர்கள்) அது (அதுவே) மஞ்சன (இறைவனுக்கு அபிஷேகமாக) மாலை (சாற்றிக் கொண்டே இருக்கின்றது)
வரை (மலை உச்சியில்) தவழ் (தவழ்கின்ற) மஞ்சு (மேகங்களிலுள்ள) நீர் (தூய்மையான நீர் இறைவனினுக்கு நித்ய தீர்த்தமாக அபிஷேகம் செய்து கொண்டே இருக்கின்றது) வான் (வானத்தில் உள்ள) உடு (நட்சத்திரங்கள் எல்லாம்) மாலை (இறைவனின் திருமார்பில் அணிகின்ற மாலையாக இருக்கின்றது)
கரை (எல்லை) அற்ற (இல்லாத) நந்தி (குருநாதராகிய இறைவனின்) கலையும் (ஆடையாக) திக்கு (அனைத்து திசைகளும்) ஆமே (இருக்கின்றது).

விளக்கம்:

நிலத்தில் வீற்றிருக்கும் இறைவியானவள் இறைவனுக்கு சரிசமமாக இருக்கின்ற இலிங்க வடிவத்தின் அடிப் பாகத்தில் ஆகாயமாக இருக்கின்றாள். அலை மிகுந்த கடல்களில் இருக்கின்ற நீர்கள் எல்லாம் இறைவனுக்கு அபிஷேகமாக சாற்றிக் கொண்டே இருக்கின்றது. மலை உச்சியில் தவழ்கின்ற மேகங்களிலுள்ள தூய்மையான நீர் இறைவனினுக்கு நித்ய தீர்த்தமாக அபிஷேகம் செய்து கொண்டே இருக்கின்றது. வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் இறைவனின் திருமார்பில் அணிகின்ற மாலையாக இருக்கின்றது. எல்லை இல்லாத குருநாதராகிய இறைவனின் ஆடையாக அனைத்து திசைகளும் இருக்கின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.