பாடல் #1728

பாடல் #1728: ஏழாம் தந்திரம் – 3. பிண்ட லிங்கம் (உயிர்களின் உடலில் இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

கோயில்கொண் டன்றே குடிகொண்ட தைவரும்
வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர்
தாயில்கொண் டாப்போற் றலைவனென் னுள்புக
வாயில்கொண் டீசனும் வாழவந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கொயிலகொண டனறெ குடிகொணட தைவரும
வாயிலகொண டாஙகெ வழிநின றருளுவர
தாயிலகொண டாபபொற றலைவனென னுளபுக
வாயிலகொண டீசனும வாழவந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கோ இல் கொண்ட அன்றே குடி கொண்டது ஐவரும்
வா இல் கொண்டு ஆங்கே வழி நின்று அருளுவர்
தா இல் கொண்டால் போல் தலைவன் என் உள் புக
வா இல் கொண்டு ஈசனும் வாழ வந்தானே.

பதப்பொருள்:

கோ (உயிர்கள் பிறப்பு எடுக்கும் போதே இறைவன் இருக்கின்ற கோயிலுக்கு) இல் (உயிர்களின் உடலை இடமாக) கொண்ட (கொண்ட) அன்றே (அந்த பொழுதே) குடி (உயிர்களின் உடம்புக்குள் குடி) கொண்டது (புகுந்து கொண்டது) ஐவரும் (ஐந்து தெய்வங்களும் தத்தமது தொழில்களுடன் ஐந்து பூதங்களாகவும் புலன்களாகவும் நின்று)
வா (அந்த புலன்கள் நுழைகின்ற) இல் (இடமாக) கொண்டு (கொண்டு) ஆங்கே (அந்த) வழி (வழியாகவே) நின்று (நின்று) அருளுவர் (அருளுகின்றனர்)
தா (எப்போது புலன்களை விட்டு விட்டு குழந்தை தாயை தேடி அழுவது போல இறைவனை தேடுகின்றோமோ அப்போது) இல் (குழந்தை இருக்கும் இடம் தேடி) கொண்டால் (தாய் தானாகவே வருவது) போல் (போலவே) தலைவன் (இறைவனும் தலைவனாகவே) என் (அடியவரின்) உள் (உள்ளே) புக (புகுந்து)
வா (தமது அருள் நுழைகின்ற) இல் (இடமாக) கொண்டு (அடியவரை ஆட்கொண்டு) ஈசனும் (இறைனும்) வாழ (அடியவரின் உடலையே தாம் வாழுகின்ற இடமாக கொண்டு) வந்தானே (வந்து வீற்றிருந்து அருளுவான்).

விளக்கம்:

உயிர்கள் பிறப்பு எடுக்கும் போதே அவற்றை தாம் இருக்கும் கோயிலாகவே படைக்கின்றான் இறைவன். அப்படி உயிர்கள் கோயிலாக உடலெடுத்து பிறக்கும் போதே ஐந்து தெய்வங்களும் தத்தமது தொழில்களுடன் ஐந்து பூதங்களாகவும் புலன்களாகவும் நின்று அந்த புலன்கள் நுழைகின்ற இடமாக உயிர்களின் உடலை ஏற்றுக் கொண்டு அதன் வழியாகவே நின்று அருளுகின்றனர். உயிர்கள் எப்போது புலன்களின் வழியே வாழ்வதை விட்டு விட்டு குழந்தை தாயை தேடி அழுவது போல இறைவனை தேடுகின்றார்களோ அப்போது குழந்தை இருக்கும் இடம் தேடி தாய் தானாகவே வருவது போல இறைவனும் தலைவனாகவே அந்த அடியவரின் உடலுக்கு உள்ளே இருந்து அடியவரை ஆட்கொண்டு அடியவரின் உடலையே தாம் வாழுகின்ற இடமாக கொண்டு வீற்றிருந்து அருளுவான்.

ஐவர்கள்:

ஐந்து தெய்வங்கள் – ஐந்து தொழில்கள் – பஞ்ச பூதங்கள் – ஐந்து பொறிகள் – ஐந்து புலன்கள்

  1. பிரம்மன் – படைத்தல் – நிலம் – மூக்கு – நுகர்தல்
  2. திருமால் – காத்தல் – நீர் – நாக்கு – சுவைத்தல்
  3. உருத்திரன் – அழித்தல் – நெருப்பு – கண் – பார்த்தல்
  4. மகேஸ்வரன் – மறைத்தல் – காற்று – தோல் – உணர்தல்
  5. சதாசிவன் – அருளல் – ஆகாயம் – காது – கேட்டல்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.