20-5-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
இறையருள் பெரிதாக இருந்தால் மட்டுமே லெளகீக (உலகம் சார்ந்த) எண்ணங்கள் நீங்கும் என்றிருக்க, லெளகீக எண்ணங்கள் நீங்க வேண்டுமென்றால் இறையருள் வேண்டும் என்றும் கூற, இது முரண்பாடாக உள்ளதே ஏன்?
எங்கு சுற்றிய போதிலும் கடைசியில் சரணாகதி என்னும் நிலையை நாம் நாட வேண்டி உள்ளது. உறுதியாக இறையருள் வேண்டுமென்றால் படிப்படியாக லெளகீகம்தனிலிருந்து விலகுதல் வேண்டும் என்பதுதான் விதி. ஏனெனில் தூய்மையான ஓர் பொருளுடன் சேர வேண்டும் என எண்ணம் கொண்டால் அத்தூய்மையான நிலையை நாமும் அடைதல் வேண்டும் என்பது விதியாகும். படிப்படியாக இந்த லெளகீக நிலையை விட வேண்டுமானால் இறையருள் வேண்டும் என்பது உறுதி. இதற்காக நாம் நித்யம் (எப்பொழுதும்) இறை சக்தியை நோக்கி வேண்டுதல் வேண்டும். அவன் பாதம் பணிய அவனருள் வேண்டும் என்பதை உணர்ந்தும் நாம் சிக்கிக் கொண்டோமே என சிறிது வருத்தம் கண்டு வேண்டிட அவன் கருணையில் படிப்படியாக தூய்மை அடைவோம். இதில் சிறு குழப்பமும் இல்லை. ஏனெனில் பல மகான்களும் ஞானிகளும் குடும்பத்திலிருந்து வந்தவர்களே ஆவார்கள். மனதில் உறுதி வேண்டும் உறுதியற்ற மனநிலையில் இறைவனை நாடினால் இறைவன் உறுதியாகத் தென்பட மாட்டான். முக்கியமாக வைராக்யம் பெரிதாக இருத்தல் வேண்டும். இறைவனின்றி வேறு யாரும் எனக்கு வேண்டாம் என்கின்ற பெரும் மனநிலை வர வேண்டும். இது ஒரு நாளில் வரக்கூடியது அல்ல படிப்படியாக வரக்கூடியது. மனதில் உறுதியுடன் நாடுங்கள் சொர்க்கம் அடையாவிட்டாலும் இறைவனை உறுதியாக அடையலாம்.