பாடல் #1017

பாடல் #1017: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

மேலறிந் துள்ளே வெளிசெய்த வப்பொருள்
காலறிந் துள்ளே கருத்துற்ற செஞ்சுடர்
பாரறிந் தண்டஞ் சிறகற நின்றது
நானறிந்து உள்ளெழ நாடிக்கொண் டேனே.

விளக்கம்:

ஆகாயத்திலுள்ள காற்றை அறிந்து அதை தமக்குள் தலை உச்சி வழியாக உள்வாங்கி மூச்சுப் பயிற்சிகளின் வழியாக மூலாதாரத்திற்கு கொண்டு சென்று அங்கிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பினால் அது அக்னிச் சுடராக மேலெழும்பும். உலகத்தைத் தாண்டி அண்டசராசரங்களையும் தாண்டி எல்லைகளற்று பரந்து விரிந்து இருக்கும் பேரொளியான இறைவனை எமக்குளிருந்து எழும்பிய குண்டலினியின் அக்னிச் சுடராக யான் அறிந்து கொண்டு அதை தேடி அடைந்தேன்.

கருத்து: உலகத்தைத் தாண்டி அண்டசராசரங்களையும் தாண்டி எல்லைகளற்று பரந்து விரிந்து இருக்கும் பேரொளியான இறைவனே உயிர்களுக்குள் இருக்கும் குண்டலினியின் அக்னிச் சுடராகவும் இருக்கின்றான்.

குறிப்பு: வெளியில் நவகுண்டத்தில் அக்னி வளர்த்து செய்யும் யாகத்தைப் போலவே தமக்குள்ளும் மானசீகமாக அக்னியை வளர்த்து யாகம் செய்து அண்டங்களைத் தாண்டி நின்ற இறைவனின் பேரொளியாக அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1018

பாடல் #1018: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

கொண்டஇக் குண்டத்தின் உள்ளெழு சோதியால்
அண்டங்கள் ஈரேழு மாக்கி அழிக்கலாம்
பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம்
இன்றுசொல் நூலாய் எடுத்துஉரைத் தேனே.

விளக்கம்:

பாடல் #1017 இல் உள்ளபடி யாம் அறிந்து அடைந்த குண்டமாகிய எமது உடலுக்குள் இருந்து எழுந்த ஜோதியின் மூலமாக ஈரேழு அண்டங்களையும் உருவாக்கவும் செய்யலாம் அழிக்கவும் செய்யலாம். ஆதிகாலத்திலிருந்தே அருளப்பட்ட வேதங்களாகவும் பரந்து விரிந்து இருக்கும் உலகங்களாகவும் இருக்கும் அந்த ஜோதியை யாம் இன்று நூலாக கோர்த்து எடுத்துரைத்தோம்.

குறிப்பு: உயிர்கள் தமக்குள் மானசீகமாக அக்னியை வளர்த்து யாகம் செய்தால் உள்ளிருந்து எழுந்த ஜோதியின் தன்மைகளை அறிந்து கொள்ளாலாம்.

பாடல் #1019

பாடல் #1019: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

எடுத்தவிக் குண்டத் திடம்பதி னாறிற்
பதித்த கலைகளும் பாலித்து நிற்குங்
கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே
கொதித்தெழும் வல்வினை கூடகி லாவே.

விளக்கம்:

வினையினால் எடுத்து வந்த குண்டமாக இருக்கும் இந்த உடலை இயக்கும் 16 கலைகள் உள்ளது. இந்த கலைகளுக்கு சக்தியூட்டும் கனலை குண்டலினியிலிருந்து எழுந்து வரும் அக்னியில் கண்டு அறிந்து கொள்பவர்களின் பிறவியோடு தொடர்ந்து வருகின்ற கொடிய வினைகள் எல்லாம் விலகிச் சென்றுவிடும்.

பதினாறு கலைகள் (நாடிகள்):

  1. மேதைக்கலை
  2. அருக்கீசக்கலை
  3. விடக்கலை
  4. விந்துக்கலை
  5. அர்த்தசந்திரன் கலை
  6. நிரோதினிக்கலை
  7. நாதக்கலை
  8. நாதாந்தக்கலை
  9. சக்திக்கலை
  10. வியாபினிக்கலை
  11. சமனைக்கலை
  12. உன்மனைக்கலை
  13. வியோமரூபினிக்கலை
  14. அனந்தைக்கலை
  15. அனாதைக்கலை
  16. அனாசிருதைக்கலை

பாடல் #1020

பாடல் #1020: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

கூடமுக் கூடத்தி னுள்ளெழு குண்டத்துள்
ஆடிய ஐந்தும் அகம்புற மாய்நிற்கும்
பாடிய பன்னீ ரிராசியும் அங்கெழ
நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே.

விளக்கம்:

உடலுக்குள் மானசீகமாக உருவகப்படுத்திய முக்கோண குண்டத்திலிருந்து எழுகின்ற அக்னியில் ஆடுகின்ற பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன் எனும் ஐந்து வாயுக்களும் உடலுக்குள்ளும் வெளியிலும் இருக்கின்றது. அந்தக் குண்டத்திலிருந்து எழும் அக்னியிலிருந்து 12 விதமான ஒலிகள் வெளிவரும். அந்த ஒலிகளைத் தேடி அறிந்து கொள்ளும் சாதகர்கள் தமக்குள் நல்ல சுடரொளியை அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1021

பாடல் #1021: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

நற்சுட ராகுஞ் சிரமுக வட்டமாங்
கைச்சுட ராகுங் கருத்துற்ற கைகளிற்
பைச்சுடர் மேனி பதைப்புற் றிலிங்கமும்
நற்சுட ராயெழு நல்லதென் றாளே.

விளக்கம்:

பாடல் #1020 இல் உள்ளபடி அறிந்து கொண்ட சுடரின் உச்சிக் கொழுந்தின் தலைப் பகுதி வட்ட வடிவ முகமாகவும் சுடரைச் சுற்றிலும் பரவுகின்ற நெருப்புக் கதிர்கள் கைகளாகவும் சுடரின் நடுவில் இருக்கும் அழகிய பகுதி உடலாகவும் இருந்து அசைகின்ற சுடரே சிவலிங்க வடிவமாக இருக்கின்றது. இந்த சிவலிங்க வடிவத்தில் எழும் நல்ல சுடர் நன்மையைத் தரும் என்று சக்தி அருளினாள்.

பாடல் #1022

பாடல் #1022: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

நல்லதென் றாளே நமக்குற்ற நாயகஞ்
சொல்லதென் றாளே சுடர்முடி பாதமா
மெல்லநின் றாளை வினவகில் லாதவர்
கல்லதன் றாளையுங் கற்குறுமின் னாளே.

விளக்கம்:

பாடல் #1021 இல் உள்ளபடி நன்மையைத் தரும் சுடர் இது என்று அருளிய சக்தியே சாதகருக்குள் அனைத்தையும் இயக்குகின்ற மந்திரங்களையும் அந்த மந்திரங்களையே தனக்கு தலை முதல் பாதம் வரை அருளோடு நிற்கின்றாள். அப்படி நிற்கின்ற சக்தியின் அருளைத் தேடி அடையாமல் தான் கற்றுக் கொண்ட மந்திரங்களை மட்டும் ஓதி யாகம் செய்பவர்கள் அவளது சக்தியை உணர மாட்டார்கள்.

கருத்து: குண்டம் அமைத்து யாகம் செய்பவர்கள் வெளியில் செய்தாலும் உள்ளுக்குள் மானசீகமாக செய்தாலும் மந்திரங்களை மட்டும் ஓதிக்கொண்டு இருக்காமல் அதற்குள் இருக்கும் இறைசக்தியையும் அறிந்து கொள்ள வேண்டும்.

பாடல் #1023

பாடல் #1023: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

மின்னா இளம்பிறை மேவிய குண்டத்துச்
சொன்னால் இரண்டுஞ் சுடர்நாகந் திக்கெங்கும்
பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்
என்ஆகத் துள்ளே இடங்கொண்ட வாறே.

விளக்கம்:

வில்லின் இரு பக்க நுனிகளும் வளைந்து இளம்பிறை விடிவில் இருக்கும் பிறை (அரை நிலா) குண்டத்தில் இரு நுனிகளிலும் பாம்பு போல் வளைந்து எழுகின்ற அக்னி எல்லாத் திசைகளிலும் சுடர்விட்டு விளங்கும். அப்படி எல்லாத் திசைகளிலும் பரவியிருக்கும் சுடரொளி எமது உடலுக்குள் மேருவாக இருக்கும் முதுகுத் தண்டின் உச்சியில் வீற்றிருக்கிறது.

குறிப்பு: வெளியில் செய்யும் பிறை (அரை நிலா) குண்டத்தில் எழும் அக்னியைப் போலவே மானசீகமாக உடலை பிறை குண்டமாக பாவித்து செய்யும் யாகத்திலும் குண்டலினி சக்தி அக்னியாக எழுந்து முதுகுத் தண்டின் உச்சியில் வீற்றிருக்கும்.

பாடல் #1024

பாடல் #1024: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

இடங்கொண்ட பாதம் எழிற்சுட ரேக
நடங்கொண்ட பாதங்கள் நன்னீ ரதற்குச்
சகங்கொண்ட கையிரண் டாறுந் தழைப்ப
முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே.

விளக்கம்:

பாடல் #1023 இல் உள்ளபடி உடலில் இருக்கும் முதுகுத்தண்டின் உச்சியை அடிப்பாகமாகக் கொண்டு எழும் சுடர் ஒரே ஜோதியாக அழகாக அசைந்தாடும். அப்போது அங்கிருந்து அமிர்தம் சுரந்து சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் தாமரை மலர்ந்து விரிவடையும். இந்த செழுமையான சுடர் முக்கண்களையுடைய இறைவனின் திருமுகமாக இருக்கிறது.

கருத்து: மானசீகமாக உடலைக் குண்டமாக பாவித்து இந்த யாகத்தை செய்தால் இறைவனின் மூன்றாவது கண்ணைக் குறிக்கும் பேரறிவு ஞானத்தை அடையலாம்.

பாடல் #1025

பாடல் #1025: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

முக்கணன் றானே முழுச்சுட ராயவன்
அக்கணன் றானே அகிலமும் உண்டவன்
திக்கண னாகி திசையெட்டுங் கண்டவன்
எக்கணன் றானுக்கும் எந்தை பிரானே.

விளக்கம்:

பாடல் #1024 இல் உள்ளபடி மூன்று கண்களையுடைய இறைவனே உடலாகிய குண்டத்தில் எழும் முழுமையான சுடராகவும் இருக்கின்றான். அந்த மூன்று கண்களை உடைய இறைவனே எட்டுத் திசைகளுக்கும் கண்களை உடையவனாய் இருந்து எட்டுத் திசைளையும் கண்டு எல்லா உலகங்களையும் அதிலிருக்கும் உயிர்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு எல்லா தேவர்களுக்கும் தேவகணங்களுக்கும் தலைவனாகவும் இருப்பவனே எம்மையும் சேர்த்து அண்டசராசரங்களுக்கும் தந்தையாகவும் இருக்கின்றான்.

பாடல் #1026

பாடல் #1026: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

எந்தை பிரானுக் கிருமூன்று வட்டமாய்த்
தந்தை தன்முன்னமே சண்முகந் தோன்றலாற்
கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலான்
மைந்த னிவனென்று மாட்டிக்கொள் ளீரே.

விளக்கம்:

பாடல் #1025 இல் உள்ளபடி அண்டசராசரங்களுக்கும் தந்தையாகிய இறைவனோடு இறைவனின் மகனாக ஆன்மாவும் இருக்கின்றது. சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் பேரொளியான இறைவனை அறிவதற்கு முன்பு உடலுக்குள் சக்தி மயங்களாக இருக்கும் ஆறு சக்கரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். உடலை நவகுண்டமாக வைத்து அதிலிருக்கும் ஆறு சக்கரங்களிலும் அக்னியை ஏற்றி யாகம் செய்து ஆன்மா இறைவனின் மகனாக இருப்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.