பாடல் #1029

பாடல் #1029: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

நின்றஇக் குண்ட நிலையாறு கோணமாய்ப்
பண்டையில் வட்டம் பதைத்தெழு மாறாறுங்
கொண்டஇத் தத்துவ முள்ளே கலந்தெழ
விண்ணுளு மென்ன எடுக்கலு மாமே.

விளக்கம்:

இங்கு சொல்லப்படுகின்ற நவகுண்டம் அறுகோண வடிவுடையதாகும். இது உடலுக்குள்ளிருக்கும் ஆறு சக்கரங்களை குறிப்பதாகும். நவகுண்ட யோகத்தில் சக்கரங்களை வட்டமாக சுற்றி பிரணவமானது முப்பத்தாறு தத்துவங்களுடன் கலந்து எழுகின்றது. இந்த முப்பத்தாறு தத்துவங்களே அண்டத்திலும் உள்ளது என்பதை தமக்குள் கண்டு உணரலாம்.

குறிப்பு: அண்டத்திலுள்ள முப்பத்தாறு தத்துவங்களையும் மானசீகமாக நவகுண்ட யாகம் செய்வதன் மூலம் நமது உடலுக்குள்ளும் கண்டு உணரலாம் என்பதை இந்தப் பாடலின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1030

பாடல் #1030: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

எடுக்கின்ற பாதங்கண் மூன்றெழு கையுங்
கடுத்த முகமிரண் டாறுகண் ணாகப்
படித்தெண்ணு நாவேழு கொம்பொரு நாலும்
அடுத்தெழு கண்ணான தந்தமி லாற்கே.

விளக்கம்:

நவகுண்டத்திலிருந்து எழுகின்ற அக்னியில் வெளிச்சம் சத்தம் காற்று ஆகிய மூன்றும் கைகளாக எழுகின்றது. இடகலை பிங்கலை ஆகிய நாடிகள் கூர்மையான முகங்களாக இருக்கின்றது. ஆறு சக்கரங்கள் கண்களாக இருக்கின்றது. இதன் மூலம் உடலை குண்டமாக வைத்து நான்கு வேதங்களில் உள்ள மந்திரங்களை விடாமல் ஓதி உச்சரித்து மூலாதாரத்திலுள்ள குண்டலினியை ஆறு சக்கரங்களுக்கும் மேலெழுப்பிச் செல்லும் போது அந்த சக்கரங்களில் வீற்றிருக்கும் முடிவில்லாத இறை சக்தியை அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1031

பாடல் #1031: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

அந்தமில் லானுக் ககலிடந் தானில்லை
அந்தமில் லானை அளப்பவர் தாமில்லை
அந்தமில் லானுக் கடுத்தசொற் றானில்லை
அந்தமில் லானை அறிந்துகொள் பத்தே.

விளக்கம்:

பாடல் #1030 இல் உள்ளபடி நவகுண்டத்திலிருந்து எழுந்த முடிவில்லாத இறை சக்தியானது அண்டத்திலுள்ள அனைத்திலும் இருக்கின்றது. அந்த சக்தியின் அளவை அளக்கக் கூடியவர்கள் யாருமே இல்லை. அந்த இறைசக்தியைக் குறிக்கும் மந்திரத்திற்கு மேலான மந்திரம் வேறு எதுவும் இல்லை. முடிவில்லாத இந்த இறைசக்தியை நவகுண்டத்தின் மூலம் யாகம் செய்து தமக்குள் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1032

பாடல் #1032: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

பத்திட்டங் கெட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு
மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை
கட்டிட்டு நின்று கலந்தமெய் யாகமும்
பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.

விளக்கம்:

பாடல் #1031 இல் உள்ளபடி தமக்குள் அறிந்து கொண்ட இறை சக்தியானது உடலினுள் ஆறு சக்கரங்களில் மேன்மை கொண்ட சக்தி மயங்களாக இருக்கின்றது. நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரத்தில் அடங்கியிருக்கும் குண்டலினியை நவகுண்ட யாகத்தின் மூலம் எழுப்பி ஆறு இதழ்கள் கொண்ட சுவாதிட்டானம் வழியே மேலேற்றி அதற்கு மேலிருக்கும் நான்கு சக்கரத்திலும் ஒவ்வொன்றாக நிலை நிறுத்திக் கொண்டு சென்று தலை உச்சியில் இருக்கும் எழாவது சக்கரமான சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறை சக்தியோடு கலந்துவிட்டால் சாதகம் செய்பவர்கள் இறைவனாகவே மாறிவிடுவதை உலகத்தின் தலைவனாகிய இறைவனின் அருளால் உணர்ந்து கொள்வார்கள்.

பாடல் #1033

பாடல் #1033: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

பார்ப்பதி பாகன் பரந்தகை நாலைஞ்சு
காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும்
பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி
நாற்பது சோத்திரம் நல்லிரு பத்தஞ்சே.

விளக்கம்:

பாடல் #1032 இல் உள்ளபடி தம்மை இறைவனாக உணர்ந்த சாதகர்கள் தமக்குள் ஒரு பாகமாக இருக்கும் இறைவன் இருபது கைகள், இருபது கால்கள், பத்து முகங்கள், இருபது கண்கள், மலர் போன்ற இரண்டு திருவடிகள், அடி முடியாக இருக்கும் இரண்டு சுடரொளி ஆகியவற்றைக் கொண்டு இருப்பார். நன்மையாகவே இருக்கும் இந்த இறைவனை தஞ்சம் என்று சரணடைவார்கள்.

விளக்கம்:

பாடல் #1034

பாடல் #1034: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐயைந்தும்
மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங் கிருத்தலால்
பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர்
கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே.

விளக்கம்:

உயிர்களின் ஆன்மா தனக்கு உகந்த இருப்பிடமாக எடுத்த அழியக்கூடிய இந்த உடலில் நவகுண்ட யாகம் செய்து குண்டலினியை எழுப்பி பாடல் #1033 இல் உள்ளபடி சகஸ்ரதளத்தில் சேர்த்த ஜோதியாக இருக்கிறது. அங்கே ஐந்து முகங்கள் கொண்ட சதாசிவமூர்த்தியாகிய இறைவனை அறிய எண்ணினால் அவர் இருபத்தைந்து தத்துவங்கள் கொண்ட ஜோதியாக இருப்பதை அறிந்து கொள்ளலாம். அந்த பரஞ்சுடராகிய இறை சக்தியோடு இந்த ஆன்ம ஜோதியை கலந்தால் கிடைக்கும் பேரின்பமே முக்தியாகும்.

பாடல் #1035

பாடல் #1035: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

முத்திநற் சோதி முழுச்சுட ராயவன்
கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும்
பற்றற நாடிப் பரந்தொளி யூடுபோய்ச்
செற்றற்று இருந்தவர் சேர்ந்திருந் தாரே.

விளக்கம்:

பாடல் #1034 இல் உள்ளபடி சகஸ்ரதள ஜோதியோடு கலந்த பின் அங்கே முழுமையான நல்ல சுடரொளியாக இருக்கும் பரம்பொருள் ஆட்கொள்கிறது. உலக ஞானங்கள் அனைத்தையும் கற்று அறிந்திருந்தாலும் கூட அதைவிட மேலான இந்த இறை ஞானத்தை உணர்ந்தவர்களின் எண்ணத்துள்ளே அவன் இருப்பான். அந்த எண்ணங்களையும் விட்டு விலகி எங்கும் பரவியிருக்கும் இறைவனின் பேரொளியை விரும்பி சென்று அடைந்து அங்கே இறைவனோடு பேரின்பத்தில் சேர்ந்து இருப்பார்கள்.

கருத்து: நவகுண்ட யாகத்தை முறைப்படி செய்த சாதகர்கள் தமது மூலாதாரத்திலுள்ள அக்னியை எழுப்பி சகஸ்ரதளத்தில் இருக்கும் இறை சக்தியோடு சேர்த்து விட்டால் இறையருளால் அனைத்து எண்ணங்களும் அற்ற நிலையை அடைந்து இறைவனோடு ஒன்றாகச் சேர்ந்து இருப்பார்கள்.

பாடல் #1036

பாடல் #1036: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

சேர்ந்த கலையஞ்சுஞ் சேருமின் குண்டமும்
ஆர்ந்த திசைகளு மங்கே யமர்ந்திடும்
பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்
காய்ந்தவ ரென்றுங் கலந்தவர் தாமே.

விளக்கம்:

பாடல் #1035 இல் உள்ளபடி இறைவனோடு சேர்ந்து இருக்கும் சாதகர் இறைவனுடைய ஐந்துவித தொழில்களையும் நவகுண்டமாகிய இந்த உடலுக்குள்ளிருந்து இயக்கலாம். அதன் பிறகு அனைத்து திசைகளையும் முழுமையாக சாதகர் அறிந்து கொள்வார். ஐம்பூதங்களும் தங்களின் உச்சத் தன்மையில் சாதகரின் உடலுக்குள் இருந்து தாமாகவே மூலாக்கினியை ஏற்றிக்கொண்டே இருக்கின்றன. இந்த நிலையை அடைந்த சாதகர் இறைவனோடு என்றும் கலந்து இருப்பார்.

குறிப்பு: நவகுண்ட யாகம் செய்யும் சாதகர் அனைத்து திசைகளிலுள்ள எங்கும் செல்லும் தன்மையைப் பெறுவார். இதுவரை சாதகர் தனது சாதகத்தின் மூலம் எழுப்பிய மூலாக்னியை இனி அவரது உடலுக்குள்ளிருக்கும் ஐந்து பஞ்ச பூதங்களும் (நிலம் நீர் காற்று நெருப்பு ஆகாயம்) மூலாக்கினியை தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருக்கும்.

பாடல் #1037

பாடல் #1037: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

மெய்கண்ட மாம்விரி நீருல கேழையும்
உய்கண்டஞ் செய்த வொருவனைச் சேருமின்
செய்கண்ட ஞானந் திருந்திய தேவர்கள்
பொய்கண்ட மில்லாப் பொருள்கலந் தாரே.

விளக்கம்:

இறைவனால் முறையாக வகுக்கப்பட்டு படைக்கப்பட்ட பரந்து விரிந்த கடல்களைக் கொண்ட ஏழு உலகங்கள் இருக்கின்றன. இந்த ஏழு உலகங்களிலுள்ள உயிர்களனைத்தும் முக்திபெற வேண்டும் என்ற கருணையினால் அவை முக்திபெறும் வழிமுறைகளையும் முறையாக இறைவன் வகுத்திருக்கின்றான். அவனை உயிர்கள் சென்று அடைந்தால் முறையாக வகுக்கப்பட்ட நவகுண்ட யாகத்தின் மூலம் கிடைக்கும் ஞானங்கள் அனைத்தும் அறிந்து உயிர்கள் தேவர்களாக உயர்ந்த நிலையை அடைவார்கள். அவ்வாறு உயர்ந்த தேவர்கள் பொய் முறைகளால் வகுக்கப்பட்ட எந்தவித மாயையும் இல்லாத உண்மையான மெய்ப்பொருளான சதாசிவமூர்த்தியோடு கலந்து இருப்பார்கள்.

பாடல் #1038

பாடல் #1038: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

கலந்திரு பாதம் இருகர மாகும்
மலர்ந்திரு குண்ட மகாரத்தோர் மூக்கு
மலர்ந்தெழு செம்முக மற்றைக்கண் நெற்றி
உணர்ந்திரு குஞ்சியங் குத்தம னார்க்கே.

விளக்கம்:

பாடல் #1037 இல் உள்ளபடி சதாசிவமூர்த்தியுடன் கலந்து நிற்கின்ற சாதகரின் உடலாகிய நவகுண்டத்திலுள்ள அக்கினியின் அடியாக இருப்பது இறைவனின் பாதங்களாக இருக்கின்றது. சுடராகப் பரவும் அக்கினியாக இருப்பது இறைவனின் கரங்களாக இருக்கின்றது. குண்டத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற அக்கினியின் ஜூவாலையே இறைவனின் சிவந்த முகமாகவும் மூக்காகவும் இருக்கின்றது. அக்கினியின் கங்கானது இறைவனின் மூன்றாம் கண்ணாக இருக்கின்றது. காற்றின் போக்கில் அலையும் அக்கினியின் உச்சி நுனியாக இருப்பது இறைவனின் சடைபின்னிய முடிக்கற்றைகளாக இருக்கின்றது. இப்படி நவகுண்டத்தின் அக்கினியில் இறைவன் உத்தமமான உருவமாக இருக்கிறார்.

குறிப்பு: நவகுண்ட யாகம் செய்து உணர்ந்த இறைவன் அக்கினி உருவமாக எப்படி இருக்கின்றார் என்பதை இந்த பாடலில் அறிந்து கொள்ளலாம்.