பாடல் #1089

பாடல் #1089: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

அந்த நடுவிர லாதி சிறுவிரல்
வந்த வழிமுறை மாறி யுரைசெயுஞ்
செந்தமி ழாதி தெளிந்து வழிபடு
நந்தி யிதனை நவமுரைத் தானே.

விளக்கம்:

சுண்டு விரலில் உள்ள மூன்று கோடுகளில் ஆரம்பித்து நடு விரலில் உள்ள மூன்று கோடுகளில் முடிக்கும்படி மொத்தம் ஆறு எழுத்துக்கள் கொண்ட தூய தமிழ் மந்திரத்தை குருவின் அருளால் பெற்று அதை முதலில் நேர் மறையாகவும் பின்பு எதிர்மறையாக மாற்றியும் ஓதி வழிபடுங்கள் என்று குருவாக இருக்கும் இறைவன் ஒன்பது சக்திகளை வழிபடும் முறையாக அருளினான்.

பாடல் #1090

பாடல் #1090: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

உரைத்த நவசத்தி யொன்று முடிய
நிரைத்த விராசி நெறிமுறை எண்ணிப்
பிரைச்சத மெட்டுமுன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமஞ்செய் தானே.

விளக்கம்:

பாடல் #1089 இல் உள்ளபடி இறைவன் அருளிய ஒன்பது சக்திகளை வழிபடும் முறையை இப்பாடலில் அறிந்து கொள்ளலாம். வயிரவியின் ஒன்பது சக்திகளில் முதன்மையாக இருக்கும் மனோன்மணியைச் சுற்றி வயிரவி செய்யும் 12 கலைகளை (பாடல் #1075 இல் உள்ளபடி) எண்ணத்தில் வைத்து தியானித்து வயிரவி இருக்கும் திருக்கோலத்தை தமக்குள் தரிசிக்கும் முன்பே அதை எவ்வாறு செய்ய வேண்டும் அதற்கான வழி முறைகள் என்னென்ன என்பதை குருவாக இருந்து இறைவனே கொடுத்து அருளினார்.

கருத்து: வயிரவி செய்யும் பன்னிரண்டு செயல்களை எண்ணி தியானித்தால் வயிரவியின் திருக்கோலத்தை தரிசிக்கும் வழியை இறைவனே குருவாக வந்து அருளுவார்.

பாடல் #1091

பாடல் #1091: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

தாமக் குழலி தயைக்கண்ணி யுண்ணின்ற
வேமத் திருளற வீசு மிளங்கொடி
யோமப் பெருஞ்சுட ருள்ளெழு நுண்புகை
மேவித்து அமுதொடு மீண்டது காணே.

விளக்கம்:

பாடல் #1090 இல் உள்ளபடி குருவாகிய இறைவன் அருளிய வழிமுறையில் சாதகம் செய்தால் நறுமணம் வீசுகின்ற மலர்களை சூடியிருக்கும் கூந்தலுடன் கருணை பொழியும் கண்களை உடைய வயிரவியானவள் சாதகர்களின் உள்ளுக்குள்ளே வீற்றிருந்து அவர்களின் ஆணவம் மலத்தை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கி அருளுவாள். வெளியில் செய்யும் யாகத்தீயில் வரும் நுண்மையான புகையைப் போலவே உள்ளுக்குள் இருக்கும் மூலாதார அக்னியிலிருந்து குண்டலினி சக்தியை ஒவ்வொரு சக்கரங்களாக மேலே ஏற்றிச் சென்று தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் சேர்த்து அங்கே அமிழ்தத்தை சுரக்க வைத்து அதைப் பருகிய ஆன்மா ஆணவத்திலிருந்து முழுவதும் மீண்டு தூய்மையானதாக திரும்பி வருவதைக் காணுங்கள்.

பாடல் #1092

பாடல் #1092: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

காணு மிருதய மந்திர முங்கண்டு
பேணு நமவென்று பேசும் தலைமேலே
வேணு நடுவு மிகநின்ற வாகுதி
பூணு நடுவென்ற வந்தஞ் சிகையே.

விளக்கம்:

பாடல் #1091 இல் உள்ளபடி தூய்மையான ஆன்மாவை சாதகர் கண்டு உணர்ந்த பிறகு இருதயத்தில் கேட்கும் இருதய மந்திரத்துடன் ‘நம’ சேர்த்து இறைவனை போற்றி வணங்கினால் மூலாதாரத்திலிருந்து கிளம்பிய அக்னி தலைக்கு மேலே சுழுமுனை நாடியின் உச்சி வரை மிகவும் நீண்டு மாபெரும் அக்னியாக இருக்கும். இதன் பிறகு தலை உச்சிக்கும் அதிலிருந்து சிறிது தூரத்திலிருக்கும் துவாதசாந்த வெளிக்கும் நடுவில் கேட்கும் சிதாகாய மந்திரத்தை அறிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: பாடல் #1086 இல் உள்ளபடி மானசீக பூஜையில் இதயத்துடிப்பை மிருதங்கமாக பாவிக்கும் போது கேட்கும் ஒலியே இருதய மந்திரமாகும். மூச்சுக்காற்றை நாதஸ்வரமாகவும் பாவிக்கும் போது தலை உச்சியில் கேட்கும் ஒலியே சிதாகாய மந்திரமாகும்.

பாடல் #1093

பாடல் #1093: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

சிகைநின்ற வந்தக் கவசங்கொண் டாதிப்
பகைநின்ற வங்கத்தைப் பாரென்று மாறித்
தொகைநின்ற நேத்திர முத்திரை சூலம்
வகைநின்ற யோனி வருத்தலு மாமே.

விளக்கம்:

பாடல் #1092 இல் உள்ளபடி தலை உச்சியில் கேட்ட சிதாகாய மந்திரத்தின் மூலம் உயிர்கள் ஆதியிலிருந்தே தங்களின் ஆன்மாவோடு தொடர்ந்து வந்து இறைவனை அடைய விடாமல் அவர்களின் உடலைச் சுற்றி கவசம் போல தடுத்துக் கொண்டு இருக்கும் உயிர் பயத்தையும் உலகப் பற்றையும் மாற்றி அமைக்க அந்த மந்திரத்துடன் நேத்திர முத்திரையை சேர்த்து தியானித்து வந்தால் அந்தப் பயத்தையும் பற்றையும் சூலம் அழித்து இனி பிறவி இல்லாத நிலைக்கு கொண்டு செல்லும்.

கருத்து: இறைவனை அடைய விடாமல் உயிர்களைச் சுற்றி கவசமாக இருக்கும் உயிர் பயம் உலகப் பற்று ஆகிய எதிர்மறை எண்ணங்களை வயிரவியின் சிதாகாய மந்திரத்துடன் நேத்திர முத்திரையை சேர்த்து தியானிப்பதின் மூலம் இறைவனை அடையும் நேர்மறை எண்ணங்களாக மாற்றி அமைத்து பிறவி இல்லாத நிலையை அடையலாம்.

பாடல் #1094

பாடல் #1094: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

வருத்த மிரண்டுஞ் சிறுவிரன் மாறிப்
பொருந்தி யணிவிரல் சுட்டிப் பிடித்து
நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே
பெருத்த விரலிரண் டுள்புகப் பேசே.

விளக்கம்:

பாடல் #1093 இல் உள்ள நேத்திர முத்திரையை எப்படி செய்வது என்பதை இப்பாடலில் அறிந்து கொள்ளலாம். பாடல் #1093 இல் உள்ளபடி உயிர் பயம் மற்றும் உலகப்பற்று என்ற இரண்டு விதமான பிறவித் துன்பங்களையும் போக்கக்கூடிய நேத்திர முத்திரையை செய்ய முதலில் சுண்டு விரலையும் மோதிர விரலையும் சேர்த்துப் பிடித்து அதன் பிறகு சுட்டு விரலையும் நடுவிரலையும் நீட்டிப் பிடித்து இரண்டு விரல் சேர்க்கைக்கும் நடுவில் கட்டை விரலை நுழைத்து மற்ற நான்கு விரல்களையும் மடக்கிப் பிடித்து சிதாகாய மந்திரத்தை செபியுங்கள்.

பாடல் #1095

பாடல் #1095: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

பேசிய மந்திர மிகாரம் பிரித்துரை
கூச மிலாத சகாரத்தை முன்கொண்டு
வாசிப் பிராண னுபதேச மாகைக்குக்
கூசிய விந்து வுடன்கொண்டு கூவே.

விளக்கம்:

பாடல் #1092 இல் உள்ள சிதாகாய மந்திரத்தை எப்படி செபிப்பது என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். பாடல் #1094 இல் உள்ளபடி செபித்த சிதாகாய மந்திரத்தில் ‘இ’ என்ற எழுத்தை நீக்கிவிட்டு ‘ச’ எழுத்தை முன்னே வைத்து ‘சம்’ எனும் மந்திரத்தை இறைவனைத் தவிர வேறு எந்த எண்ணங்களும் இல்லாமல் உச்சரித்து மூச்சுக்காற்று உபதேசித்த (பாடல் #1092 இல் உள்ளபடி) வயிரவி மந்திரத்தை பிரகாசமான ஒளிக்கீற்றுக்களை உடைய குண்டலினி (பாடல் #860 இல் காண்க) அக்னியோடு சேர்த்து உரக்க (சத்தமாக) செபியுங்கள்.

பாடல் #1096

பாடல் #1096: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

கூவிய சீவன் பிராணன் முதலாகப்
பாவிய சவ்வுடன் பண்ணு மகாரத்தை
மேவிய மாயை விரிசங்கு முத்திரை
தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1095 இல் உள்ளபடி உரக்க (சத்தமாக) செபித்த சாதகர் தமது மூச்சுக்காற்றுடன் சேர்ந்து ‘சம்’ எனும் மந்திரத்தை உயிருடன் மாயை சேர்ந்து இருக்கும் பாவனையில் தாமாகவே விரிந்து அமைந்த சங்கு முத்திரையுடன் சமர்ப்பணம் செய்தால் வயிரவியானவள் பிரகாசமாக சாதகரின் உடலுக்குள் வந்து வீற்றிருப்பாள்.

குறிப்பு: மூச்சுக்காற்றுடன் ‘சம்’ மந்திரத்தை சத்தமாக சாதகர் செபிக்கும் போது அதன் உச்ச நிலையில் அவரது உடலோடு இருக்கும் மாயையால் தானாகவே அவரது விரல்கள் விரிந்த சங்கு முத்திரையை பிடிக்கும். இந்த மந்திரத்தை சங்கு முத்திரையுடன் இறைவிக்கு சமர்ப்பணம் செய்தால் இறைவியே சாதகருக்குள் வந்து வீற்றிருப்பாள்.

பாடல் #1097

பாடல் #1097: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

நின்ற வயிரவி நீலி நிசாசரி
ஒன்று மிரண்டு மொருங்கிய வுள்ளத்துச்
சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்றருள் ஞாலத்து நாடிடுஞ் சாற்றியே.

விளக்கம்:

பாடல் #1096 இல் உள்ளபடி பிரகாசமாக சாதகரின் உடலுக்குள் வந்து வீற்றிருக்கும் வயிரவியானவள் நீல நிற திருமேனியுடன் அடியவர்களின் உள்ளத்தில் இருக்கும் இருளுக்குள் இருளாகவே வீற்றிருக்கின்றாள். எவரொருவரின் மனமும் வாக்கும் உடலும் ஒன்றாக இருக்கிறதோ அவரின் உள்ளத்திற்குள் இறைவனுடன் இறைவியும் சேர்ந்து புகுந்து அங்கேயே வீற்றிருந்து அருள் புரிகின்றாள். அவளுடைய நன்மை தரும் அருளை அடைய விரும்பும் உயர்ந்தோர் அவளை தேடி அடைந்து வயிரவியின் மந்திர செபத்தை சமர்ப்பணம் செய்வார்கள்.

கருத்து: மனம் வாக்கு உடல் ஒன்றாக இருப்பது என்பது மனதை ஒருநிலைப் படுத்தி சிதாகாய மந்திரத்தை செபித்து நேத்திர முத்திரையை செய்யும் போது பாடல் #1096 இல் உள்ளபடி தானாகவே விரிந்து அமைந்த சங்கு முத்திரையுடன் சமர்ப்பணம் செய்தால் இறைவனும் இறைவியும் அவர்களின் உள்ளத்திற்குள் ஒன்றாக வீற்றிருந்து மழை போல அருளை வழங்குவார்கள்.

குறிப்பு: நீல நிறத்தைக் கொண்ட திருமேனி என்பது மழை போல வரங்களை அள்ளித் தருகின்ற தன்மையைக் குறிக்கும். இருளுக்குள் இருளாகவே வீற்றிருக்கிறாள் என்பது அடியவர்களின் உள்ளத்தில் இருக்கும் இருளிலும் தன்னுடைய நீல நிறத் திருமேனியுடன் வீற்றிருந்து மழை போல அருளைத் தருகிறாள் என்பதைக் குறிக்கும். உயர்ந்தோர் என்பது இறையருளைப் பெற வேண்டும் என்று சாதகம் செய்து தம்மைப் பக்குவப் படுத்திக் கொண்டவர்கள் ஆகும்.

பாடல் #1098

பாடல் #1098: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

சாற்றிய வேதஞ் சராசர மைம்பூதம்
நாற்றிசை முக்கண்ணி நாடு மிருள்வெளி
தோற்று முயிர்ப்பன்மை சோதி பராபரை
ஆற்றலொ டாய்நிற்கு மாதி முதல்வியே.

விளக்கம்:

பாடல் #1097 இல் உள்ளபடி சாதகர்கள் சமர்ப்பணம் செய்த சிதாகாய மந்திரம் வேதமாகவும், அண்ட சராசரங்களாகவும், ஐந்து பூதங்களாகவும், நான்கு திசைகளிலும் தேடிப் பார்க்கும் மூன்று கண்களை உடைய இறைவியாகவும், இருண்ட அண்டமாகவும், ஒளி பொருந்திய பரவெளியாகவும், பலவிதமான உடல்களில் பிறவி எடுத்து வரும் உயிர்களாகவும், சோதி வடிவாகவும், அசையும் சக்தியான பராசக்தியாகவும், அனைத்தையும் உருவாக்குகின்ற ஆற்றலுடன் அனைத்துமாகவும் இருக்கின்ற ஆதி தலைவியாகவும் இருக்கின்றது.

கருத்து: சிதாகாய மந்திரத்தின் தன்மைகளை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.