பாடல் #1051

பாடல் #1051: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றலில் மோகினி மாதிருக் குஞ்சிகை
நன்றறி கண்டிகை நாற்காற் கரீடணி
துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே.

விளக்கம்:

பாடல் #1050 இல் உள்ளபடி நான்கு திசைகளையும் தாங்கி நிற்கின்ற திரிபுரை சக்தி ஆதியிலிருந்தே தொடர்ந்து இருக்கின்ற பராசக்தியாகும். இவள் குறையில்லாத அழகுடன் அண்டசராசரங்கள் அனைத்தையும் வசப்படுத்தி வைத்திருப்பவள். மிகவும் அழகாக அசைந்தாடும் தலை முடியைக் கொண்டவள். நன்மையை வழங்கும் உருத்திராட்சத்தை அணிந்தவள். நான்கு கால்களுடன் கரிய உருவத்தைக் கொண்ட யானையை வாகனமாகக் கொண்ட கஜலட்சுமியானவள். இவள் சுத்தமாக மலராமல் நெருங்கி இருக்கும் தாமரை இதழ்களைப் போலத் தூய்மையானவள்.

கருத்து:

திரிபுரை சக்தியானது கஜலெட்சுமி எனும் பெயருடன் அனைத்தையும் தன் வசப்படுத்தி இருப்பதை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். புராதனி என்பது ஆதிகாலத்திலிருந்தே அண்டசராசரங்கள் இருக்கும் வரை எப்போதும் இருப்பதைக் குறிக்கின்றது. குறைவில்லாத மோகினி என்பது அண்டசராசரங்கள் அனைத்தையும் தன் செயலுக்கு ஏற்ப வசப்படுத்தி வைத்திருப்பதைக் குறிக்கின்றது. அழகாக அசைந்தாடும் தலை முடி என்பது அண்டசராசரங்கள் அனைத்தையும் தனது அசைவுக்கு ஏற்ப ஆட்டி வைப்பதைக் குறிக்கின்றது. உருத்திராட்ச மாலை என்பது பாடல் #1050 இல் குறிப்பிட்ட நவகிரகங்கள் உலகங்களுக்கு நன்மை தருவதை குறிக்கின்றது. நான்கு கால்களுடன் கரிய உருவத்தைக் கொண்ட யானை என்பது அனைத்தையும் அருளும் அஷ்ட லட்சுமிகளில் நடுநாயகமாக இருக்கும் கஜலட்சுமியைக் குறிக்கின்றது. சுத்தமான தாமரை என்பது தண்ணீரில் இருந்தாலும் தாமரையின் இதழ்களானது தண்ணீருடன் ஒட்டாமல் இருப்பதைப் போல திரிபுரையான கஜலட்சுமி அனைத்து செயல்களையும் செய்பவளாக இருந்தாலும் அதனுடன் ஒட்டாமல் விலகி இருப்பதைக் குறிக்கின்றது.

பாடல் #1052

பாடல் #1052: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

சுத்தவம் பாரத் தளித்த சுகோதயள்
வத்துவ மாயா ளுமாசத்தி மாபரை
அத்தகை யான மனோரணி தானுமாய்
வைத்தவக் கோல மதியவ ளாகுமே.

விளக்கம்:

பாடல் #1051 இல் உள்ளபடி தூய்மையும் அனைத்து ஞானத்தின் மொத்த உருவமாகவும் இருக்கும் திரிபுரை சக்தி கருணையோடு பேரின்பத்தை அளிப்பவள். அவள் அனைத்தையும் ஆட்டுவிக்கும் மெய்ப்பொருளான உமா சக்தி எனும் பெயருடைய மாபெரும் சக்தியாக இருக்கின்றாள். அத்தகைய மாபெரும் சக்தி அணுவுக்குள் அணுவைப் போல நுண்ணியமாகவும் இருக்கின்றாள். இப்படி இருக்கும் இவளது திருக்கோலமே மொத்த ஞானத்தின் உருவமாகும்.

கருத்து: திரிபுரை சக்தி உமா சக்தி என்ற பெயரில் ஞானத்தின் முழு உருவமாக இருந்து அதைத் தேடுபவர்களுக்கு கருணையோடு அருளுபவளாக இருக்கின்றாள்.

பாடல் #1053

பாடல் #1053: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.

விளக்கம்:

திரிபுரை சக்தியைத் தவிர பிறப்பு இறப்பு இல்லாத அமரர்கள் யாரும் இல்லை. திரிபுரை சக்தியை நோக்கி செய்யப்படும் தவத்தை விட சிறந்த தவம் வேறு இல்லை. திரிபுரை சக்தியின் அருள் இல்லாமல் படைத்தல், மறைத்தல், காத்தல், அருளல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்யும் தெய்வங்களால் எதுவும் செய்ய இயலாது. திரிபுரை சக்தியில்லாமல் முக்தி அடையும் வேறு எந்த வழியையும் நான் அறியவில்லை.

கருத்து:

பாடல் #6 இல் இதே கருத்தை சிவனுக்கு அருளியிருக்கும் திருமூலர் இப்பாடலில் சக்திக்கும் அருளியிருக்கின்றார். இதன் மூலம் அசையா சக்தியாகிய இறைவனும் அசையும் சக்தியாகிய இறைவியும் ஒன்றே என்பதை உணர்ந்து கொள்ளலாம். இதற்கு உதாரணம் (பாடல் #383 இல் உள்ளது.) நவரத்தினத்தில் உள்ள வைரமும் அந்த வைரத்தில் இருந்து வரும் ஒளியும் வேறு வேறாய் அறியப்பட்டாலும் இரண்டும் ஒன்றே ஆகும். அது போல் சிவமும் சக்தியும் ஒன்றே ஆகும்.

பாடல் #1054

பாடல் #1054: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவா ரருவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே.

விளக்கம்:

ஞானத்தின் மொத்த உருவமாக இருக்கும் திரிபுரை சக்தியானவள் தமக்கு உண்மை ஞானத்தை வழங்க முடியும் என்பதை அறிந்து கொண்டவர்கள் பராசக்தி எனும் பெயருடைய அவளே பேரானந்தத்தின் உருவமாக இருப்பதையும். உருவம் அருவம் அருவுருவம் ஆகிய அனைத்துமாக இருப்பதையும். அனைத்தையும் தன் இச்சைப் படி ஆட்டி வைப்பதையும். இறைவனின் சரிபாதியாக இருப்பதையும் அறிவார்கள்.

கருத்து: திரிபுரை சக்தி ஞானத்தின் மொத்த உருவமாக பராசக்தி எனும் பெயருடன் இருப்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: உருவம் என்பது பார்க்கக்கூடிய ரூபம் (உதாரணம் சிவபெருமான்), அருவம் என்பது உணரக்கூடிய சூட்சுமம் (உதாரணம் சக்தி), அருவுருவம் என்பது சூட்சுமத்தின் ரூப வடிவம் (உதாரணம் சிவலிங்கம்).

பாடல் #1055

பாடல் #1055: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

தானெங் குளனங் குளதையன் மாதேவி
ஊனெங் குளவங் குளவுயிர்க் காவலன்
வானெங் குளவங் குளமந்த மாருதங்
கோனெங்கு நின்ற குறிபல பாரே.

விளக்கம்:

இறைவன் எங்கெங்கெல்லாம் இருக்கின்றானோ அங்கெங்கெல்லாம் மாபெரும் தேவியாகிய இறைவியும் இறைவனோடு பின்னிப் பிணைந்து இருக்கின்றாள். உலகத்தில் உடலாக இருக்கும் அசையும் மற்றும் அசையாத பொருள்கள் அனைத்திற்குள்ளும் உயிராக நின்று இறைவனும் இறைவியும் பாதுகாக்கின்றார்கள். உலகத்தில் வெற்றிடமாக இருக்கும் அனைத்து இடங்களிலும் மென்மையான தென்றல் காற்றாக இறைவனும் இறைவியும் இருக்கின்றார்கள். அனைத்தையும் ஆளுகின்ற இறைவனும் இறைவியும் எங்கெங்கெல்லாம் எப்படியெல்லாம் இருக்கின்றார்கள் என்பதை பலவிதமான குறிப்புகள் வைத்து பார்த்துக் கொள்ளுங்கள்.

கருத்து: உலகத்திலுள்ள அனைத்து அசையும் மற்றும் அசையா பொருள்களும் ஏதோவொரு வகையில் உருமாறுகிறது. இந்த குறிப்பே இறை சக்தி அங்கே இருக்கின்றது என்பதற்கு சான்றாகும்.

பாடல் #1056

பாடல் #1056: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

பராசத்தி மாசத்தி பல்வகை யாலும்
தராசத்தி யாய்நின்ற தன்மை யுணராய்
உராசத்தி ஊழிகள் தோறும் உடனே
புராசத்தி புண்ணிய மாகிய போகமே.

விளக்கம்:

பாடல் #1054 இல் உள்ளபடி ஞானத்தின் மொத்த வடிவாக இருக்கும் பராசக்தியானவள் மாபெரும் சக்தியாக பலவகைகளிலும் உயிர்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் அந்தந்த செயல்களுக்கு ஏற்ற சக்தியாக நின்று அருளுகின்றாள். பராசக்தியின் இந்த தன்மையை உயிர்கள் உணராமல் இருக்கின்றார்கள். இந்தப் பராசக்தியே யுகம் யுகமாக தொடர்ந்து பிறவி எடுக்கும் ஆன்மாக்களுடன் உடனிருந்து பாதுகாக்கின்றாள். திரிபுரையாகிய இந்த பராசக்தியே உயிர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ற பலனை அருளி இன்பத்தை வழங்குகின்றாள்.

பாடல் #1057

பாடல் #1057: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

போகஞ்செய் சத்தி புரிகுழ லாளொடும்
பாகஞ்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும்
ஆகஞ்செய் தாங்கே அடியவர் நாள்தொறும்
பாகஞ்செய் ஞானம் படர்கின்ற கொம்பே.

விளக்கம்:

பாடல் #1056 இல் உள்ளபடி இன்பத்தை அனுபவிக்கின்ற உயிர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுடன் சேர்ந்து பின்னிப் பிணைந்து இருக்கும் சடை முடியைப் போல நிற்கின்றாள் பராசக்தி. இந்தப் பராசக்தியை தினந்தோறும் தியானித்து சாதகம் செய்யும் அடியவர்களுக்கு அவர்கள் செய்த சாதகத்தின் பலனாக கொடி போல வளர்கின்ற ஞானத்தைக் கொடுத்து அந்த கொடியில் சரிபாதியாக நின்று அதைத் தாங்கி வளர்க்கின்ற கொம்பாகவும் இருக்கின்றாள்.

பாடல் #1058

பாடல் #1058: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

கொம்பனை யாளைக் குவிமுலை மங்கையை
வம்பவிழ் கோதையை வானவிர் நாடியைச்
செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை
நம்பியென் னுள்ளே நயந்துவைத் தேனே.

விளக்கம்:

பாடல் #1057 இல் உள்ளபடி ஞானத்தை தாங்கி வளர்க்கின்ற கொம்பைப் போன்றவளும், முழுமையுடன் அழகாக விளங்கும் கொங்கைகளை கொண்டவளும், மணம் கமழ்கின்ற வாசனை மலர்களை தன் கூந்தலில் சூடிக்கொண்டு இருப்பவளும், தேவர்களும் விரும்பி தேடுகின்றவளாக இருப்பவளும், பவளம் போன்ற சிகப்பான மேனியைக் கொண்ட சிறுமியாக இருப்பவளுமாகிய திரிபுரை சக்தி இராஜராஜேஸ்வரி எனும் திருநாமத்தைக் கொண்டு அருளுகின்றாள். இறைவனோடு இரண்டறக் கலக்கும் ஞானத்தை அளிக்கக் கூடியவள் இந்த சக்தியே என்று நம்பி எனது உள்ளத்திற்குள்ளே பணிவோடு வைத்திருக்கின்றேன்.

கருத்து:

திரிபுரை சக்தியானது இராஜராஜேஸ்வரி எனும் பெயருடன் தேவர்களுக்கும் அமிர்தத்தை அருளி ஞானத்தை வளர்ப்பவளாக இருப்பதை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். கொம்பை போன்றவள் என்பது ஞானம் என்கிற கொடியைத் தாங்கி வளர்க்கின்ற கொம்பாக இருப்பதைக் குறிக்கின்றது. முழுமையான அழகுடன் விளங்கும் கொங்கைகள் என்பது தேவர்களுக்கும் அமிர்தமான பாலை தருபவளாக இருப்பதைக் குறிக்கின்றது. மணம் கமழ்கின்ற வாசனை மலர்களை சூடியுள்ளவள் என்பது வண்டு தேனைத் தேடி வாசனையுள்ள மலரை நோக்கிச் செல்வதைப் போல தேவர்கள் இறைவனேடு இரண்டறக் கலக்கும் ஞானத்தை தேடிப் பெறுவதற்கு இராஜராஜேஸ்வரியை நாடிச் செல்வதைக் குறிக்கின்றது. செம்பவளத் திருமேனியைக் கொண்ட சிறுமி என்பது உச்ச நிலை ஞானத்தின் ஆரம்பத்தைக் கொடுத்து அருளும் இராஜராஜேஸ்வரியின் திருவுருவத்தைக் குறிக்கின்றது.

பாடல் #1059

பாடல் #1059: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும்
பத்து முகமும் பரையும் பராபரைச்
சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்
சத்தியும் வித்தைத் தலைவியவ ளாமே.

விளக்கம்:

ஒவ்வொரு உயிர்களும் மாறி மாறி எடுக்கும் பலவிதமான பிறவிகளில் அவர்களுக்குள்ளே மறைத்து வைக்கப்பட்ட பொருளாக இருக்கின்ற இறைவனோடு சேர்ந்து இருக்கின்ற திரிபுரை சக்தி பத்து முகங்களைக் கொண்டு காக்கின்றாள். தானாக செயல்படும் அனைத்து செயல்களுக்கும் காரணமாக அசையா சக்தியான சதாசிவமூர்த்தியும் அதனை செயல்படுத்தும் கருவியாக அசையும் சக்தியான திரிபுரையும் இருக்கிறார்கள். இந்தத் திரிபுரை சக்தியானவள் ஸ்ரீவித்யா எனும் பெயருடன் உலகத்திலுள்ள அனைத்திற்கும் அதனதன் செயல்களைச் செய்யும் ஞானத்தை அருளும் தலைவியாக இருக்கின்றாள்.

கருத்து:

திரிபுரை சக்தியானது ஸ்ரீவித்யா எனும் பெயருடன் உலகத்திலுள்ள அனைத்திற்கும் அதனதன் செயல்களைச் செய்யும் ஞானத்தை அருளும் தலைவியாக இருப்பதை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். உலகத்திலுள்ள உயிர்கள் முதற்கொண்டு அசையும் பொருள் அசையா பொருள் ஆகிய அனைத்துமே தமது ஆயுளில் பலவிதமாக தன்னை மாற்றிக் கொண்டே இருப்பதற்கான அறிவை கொடுக்கும் தலைவியாக ஸ்ரீவித்யா தேவி இருக்கின்றாள்.

பாடல் #1060

பாடல் #1060: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை
கலைபல வென்றிடும் கன்னியென் உள்ளம்
நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1059 இல் உள்ளபடி தலைவியாக இருக்கும் ஸ்ரீவித்யா தேவி அனைத்திற்கும் மேலான ஞானத்தின் உச்சியில் நின்று உலகத்தோடு கலந்து அனைத்து உயிர்களுக்கும் அவரவர்களின் செயல்களுக்கு ஏற்ற சரிசமமான அறிவைக் கொடுக்கும் ஞானப் பாலை அருளுகின்றாள். இந்த சக்தியானவள் என்றும் மாறாதவளாக அனைத்து செயல்களையும் செய்வதற்கு தேவையான ஞானத்தை அருளி அதில் வெற்றியும் பெற்று இருக்கின்றாள். திரிபுரை சக்தியாக இருக்கும் இந்த ஸ்ரீவித்யா தேவியை எனது உள்ளத்துக்குள்ளே வைத்து நிலை நிறுத்தியதால் அவள் எனக்குள் முழுவதும் நிறைந்து நிற்கின்றாள்.

கருத்து: அனைத்து செயல்களையும் செய்யும் ஞானத்தை வழங்குகின்ற திரிபுரை சக்தியானது ஸ்ரீவித்யா தேவி எனும் பெயருடன் உயிர்களுக்குள்ளே என்றும் மாறாமல் நிலைபெற்று நின்று அவரவர்களின் செயல்களுக்கு ஏற்ற அறிவைக் கொடுப்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.