பாடல் #1564: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)
ஈரு மனத்தை யிரண்டற வீசுமி
னூருஞ் சகாரத்தை யோதுமி னோதியை
வாரு மரனெறி மன்னிய முன்னியத்
தூருஞ் சுடரொளி தோன்றலு மாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஈறு மனததை யிரணடற வீசுமி
னூருஞ சகாரததை யொதுமி னொதியை
வாரு மரனெறி மனனிய முனனியத
தூருஞ சுடரொளி தொனறலு மாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஈரு மனத்தை இரண்டு அற வீசுமின்
ஊரும் சகாரத்தை ஓதுமின் ஓதியை
வாரும் அரன் நெறி மன்னிய முன்னியத்து
ஊரும் சுடர் ஒளி தோன்றலும் ஆமே.
பதப்பொருள்:
ஈரு (பொருளும் போகமும் வேண்டும் அருளும் ஞானமும் வேண்டும் என்று இரண்டு விதமாக அலைகின்ற) மனத்தை (மனதை) இரண்டு (அந்த இரண்டு ஆசைகளும்) அற (இல்லாமல் போகும் படி) வீசுமின் (வெளியே எடுத்து வீசிவிடுங்கள்)
ஊரும் (அப்போது கிடைக்கின்ற பேரமைதியான நிலையில் சாதகருக்குள் ஊருகின்ற) சகாரத்தை (சக்தியின் ஒலி வடிவமாகிய ஒரு மந்திர எழுத்தை) ஓதுமின் (அசபையாக ஓதிக் கொண்டே இருங்கள்) ஓதியை (அவ்வாறு ஓதிக் கொண்டு இருப்பவரை)
வாரும் (அணைத்துக்) அரன் (காப்பாற்றுகின்ற) நெறி (வழி முறையில்) மன்னிய (மனதை நிலை பெற வைத்திருந்தால்) முன்னியத்து (தமக்குள்ளே)
ஊரும் (உருவாகும்) சுடர் (சுடரானது) ஒளி (பேரொளியாக) தோன்றலும் (தோன்றுவதை) ஆமே (நீங்கள் உணரலாம்).
விளக்கம்:
பொருளும் போகமும் வேண்டும் அருளும் ஞானமும் வேண்டும் என்று இரண்டு விதமாக அலைகின்ற மனதை அந்த இரண்டு ஆசைகளும் இல்லாமல் போகும் படி வெளியே எடுத்து வீசிவிடுங்கள். அப்போது கிடைக்கின்ற பேரமைதியான நிலையில் சாதகருக்குள் சக்தியின் ஒலி வடிவமாகிய ஒரு மந்திர எழுத்து தோன்றும். அப்படி தானாகவே தோன்றுகின்ற மந்திர எழுத்தை அசபையாக ஓதிக் கொண்டே இருங்கள். அவ்வாறு ஓதிக் கொண்டு இருப்பவரை அணைத்துக் காப்பாற்றுகின்ற வழி முறையில் மனதை நிலை பெற வைத்திருந்தால், தமக்குள்ளே உருவாகும் சுடரானது பேரொளியாக தோன்றுவதை நீங்கள் உணரலாம்.