பாடல் #1557

பாடல் #1557: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

இமையவர் தம்மையு மெம்மையு முன்னம்
அமைய வகுத்தவ னாதி புராணன்
சமையங்க ளாறுந்தன் றாளிணை நாட
வமையங் கழல்நின்ற வாதிப் பிரானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இமையவர தமமையு மெமமையு முனனம
அமைய வகுததவ னாதி புராணன
சமையஙக ளாறுநதன றாளிணை நாட
வமையங கழலநினற வாதிப பிரானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்தவன் ஆதி புராணன்
சமையங்கள் ஆறும் தன் தாள் இணை நாட
அமைய அங்கு அழல் நின்ற ஆதி பிரானே.

பதப்பொருள்:

இமையவர் (விண்ணுலக தேவர்கள்) தம்மையும் (அனைவரையும்) எம்மையும் (மண்ணுலக மனிதர்கள் அனைவரையும்) முன்னம் (ஆதி காலத்திலேயே)
அமைய (அவரவர் வினைகளுக்கு ஏற்ப) வகுத்தவன் (வகுத்து படைத்தவன்) ஆதி (ஆதியாகவும் / முதல்வனாகவும்) புராணன் (பழமையானவனாகவும் இருக்கின்ற இறைவன்)
சமையங்கள் (அவனை அடைவதற்கான வழி முறைகள்) ஆறும் (ஆறையும்) தன் (தனது) தாள் (திருவடிக்கு) இணை (இணையான முக்தியை) நாட (தமக்குள்ளேயே தேடி அடைவதற்காக)
அமைய (அவரவர் தகுதிகளுக்கு ஏற்றபடி அமைத்துக் கொடுத்து) அங்கு (அதை முறையாக கடைபிடிப்பவர்கள் பக்குவ நிலையை அடையும் போது அவர்களுக்குள்) அழல் (நெருப்பு வடிவமாக வந்து) நின்ற (நிற்கின்றான்) ஆதி (ஆதியிலிருந்தே) பிரானே (அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்ற இறைவன்).

விளக்கம்:

விண்ணுலக தேவர்கள் அனைவரையும் மண்ணுலக மனிதர்கள் அனைவரையும் ஆதி காலத்திலேயே அவரவர் வினைகளுக்கு ஏற்ப வகுத்து படைத்தவன் ஆதியாகவும் பழமையானவனாகவும் இருக்கின்ற இறைவன். அவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளையும் தனது திருவடிக்கு இணையான முக்தியை தமக்குள்ளேயே தேடி அடைவதற்காக அவரவர் தகுதிகளுக்கு ஏற்றபடி அமைத்துக் கொடுத்து அதை முறையாக கடைபிடிப்பவர்கள் பக்குவ நிலையை அடையும் போது அவர்களுக்குள் நெருப்பு வடிவமாக வந்து நிற்கின்றான் ஆதியிலிருந்தே அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்ற இறைவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.