பாடல் #1559

பாடல் #1559: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)

சைவப் பெருமைத் தனிநாயகன் றன்னை
யுய்ய வுயிர்க்கின்ற வொண்சுடர் நந்தியை
மெய்யப் பெருமையர்க் கன்பனை யின்பஞ்செய்
வையத் தலைவனை வந்தடைந்துய் மினே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சைவப பெருமைத தனிநாயகன றனனை
யுயய வுயிரககினற வொணசுடர நநதியை
மெயயப பெருமையரக கனபனை யினபஞசெய
வையத தலைவனை வநதடைநதுய மினெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சைவ பெருமை தனி நாயகன் தன்னை
உய்ய உயிர்க்கின்ற ஒண் சுடர் நந்தியை
மெய்ய பெருமையர்க்கு அன்பனை இன்பம் செய்
வையத்து தலைவனை வந்து அடைந்து உய்மினே.

பதப்பொருள்:

சைவ (சைவம் என்று அறியப்படுகின்ற இறைவனை அடைவதற்கான நெறிமுறைக்கு) பெருமை (மிகப்பெரும் பெருமையாக இருக்கின்றவனும்) தனி (தனக்கு சரிசமமாக வேறு யாரும் இல்லாத) நாயகன் (தலைவனாக) தன்னை (இருக்கின்றவனும்)
உய்ய (உயிர்கள் அனைத்தும் தம்மை அடைவதற்காக) உயிர்க்கின்ற (அவற்றுக்குள் உணர்வாக கலந்து நின்று இயக்குகின்றவனும்) ஒண் (அதற்கான ஞானத்தை தரும்) சுடர் (ஜோதியாக இருந்து மாயையாகிய இருளை அகற்றுகின்ற) நந்தியை (குருநாதனாக இருக்கின்றவனும்)
மெய்ய (தம்மை உண்மையாக அறிந்து கொண்ட) பெருமையர்க்கு (பெருமை மிக்க அடியவர்களிடம்) அன்பனை (அன்பு செய்கின்ற அடியவனாக இருந்து) இன்பம் (பேரின்பத்தை) செய் (கொடுக்கின்றவனும்)
வையத்து (உலகங்கள் அனைத்திற்கும்) தலைவனை (தலைவனாக இருக்கின்றவனும் ஆகிய இறைவனை) வந்து (நீங்களும் வந்து) அடைந்து (உங்களுக்குள் தேடி அடைந்து) உய்மினே (அவனை உண்மையாக உணர்ந்து மேன்மை பெறுங்கள்).

விளக்கம்:

சைவம் என்று அறியப்படுகின்ற இறைவனை அடைவதற்கான நெறிமுறைக்கு மிகப்பெரும் பெருமையாக இருக்கின்றவனும் தனக்கு சரிசமமாக வேறு யாரும் இல்லாத தலைவனாக இருக்கின்றவனும் உயிர்கள் அனைத்தும் தம்மை அடைவதற்காக அவற்றுக்குள் உணர்வாக கலந்து நின்று இயக்குகின்றவனும் அதற்கான ஞானத்தை தரும் ஜோதியாக இருந்து மாயையாகிய இருளை அகற்றுகின்ற குருநாதனாக இருக்கின்றவனும் தம்மை உண்மையாக அறிந்து கொண்ட பெருமை மிக்க அடியவர்களிடம் அன்பு செய்கின்ற அடியவனாக இருந்து பேரின்பத்தை கொடுக்கின்றவனும் உலகங்கள் அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்றவனும் ஆகிய இறைவனை நீங்களும் வந்து உங்களுக்குள் தேடி அடைந்து அவனை உண்மையாக உணர்ந்து மேன்மை பெறுங்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.