பாடல் #1562: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)
அரனெறி யாவ தறிந்தேனு நானுஞ்
சிவநெறி தேடித் திரிந்த வன்னாளு
முரைநெறி யுள்ளக் கடல் கடந்தேறுந்
தரநெறி யாய தனிச்சுடர் தானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
அரனெறி யாவ தறிநதெனு நானுஞ
சிவநெறி தெடித திரிநத வனனாளு
முரைநெறி யுளளக கடல கடநதெறுந
தரநெறி யாய தனிசசுடர தானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
அரன் நெறி ஆவது அறிந்தேனும் நானும்
சிவ நெறி தேடி திரிந்த அந் நாளும்
உரை நெறி உள்ள கடல் கடந்து ஏறும்
தர நெறி ஆய தனி சுடர் தானே.
பதப்பொருள்:
அரன் (அனைத்தையும் காத்து நிற்கின்ற இறைவனை அடைவதற்கான) நெறி (வழி முறைகளாக) ஆவது (இருப்பவற்றை) அறிந்தேனும் (அறிந்து கொண்டேன்) நானும் (யானும்)
சிவ (அந்த இறைவனை அடைவதற்கான) நெறி (வழி முறைகளை) தேடி (தேடி) திரிந்த (யான் திரிந்து கொண்டு இருந்த) அந் (முன்னொரு) நாளும் (நாட்களில்)
உரை (எமக்குள் பல விதமான எண்ணங்கள் அலை மோதிக் கொண்டு இருக்கின்ற) நெறி (வழி முறைகளில்) உள்ள (எமது உள்ளமாகிய) கடல் (பெரும் கடலை) கடந்து (கடந்து) ஏறும் (மேல் நிலைக்கு செல்லுவதற்கு)
தர (இறைவன் எமக்குத் தந்து அருளிய) நெறி (வழி முறைகள்) ஆய (ஆக இருந்து வழி காட்டுவது) தனி (தமக்கு சரிசமமாக எதுவும் இல்லாத) சுடர் (பேரொளிச் சுடராக) தானே (எமக்குள் இருக்கின்ற இறைவனே என்பதை அறிந்து கொண்டேன்).
விளக்கம்:
அனைத்தையும் காத்து நிற்கின்ற இறைவனை அடைவதற்கான வழி முறைகளாக இருப்பவற்றை அறிந்து கொண்டேன் யானும். அந்த இறைவனை அடைவதற்கான வழி முறைகளை தேடி யான் திரிந்து கொண்டிருந்த முன்னொரு நாட்களில் எமக்குள் பல விதமான எண்ணங்கள் அலை மோதிக் கொண்டு இருக்கின்ற வழி முறைகளில் எமது உள்ளமாகிய பெரும் கடலை கடந்து மேல் நிலைக்கு செல்லுவதற்கு இறைவன் எமக்குத் தந்து அருளிய வழி முறைகளாக இருந்து வழி காட்டுவது தமக்கு சரிசமமாக எதுவும் இல்லாத பேரொளிச் சுடராக எமக்குள் இருக்கின்ற இறைவனே என்பதை அறிந்து கொண்டேன்.