பாடல் #1561: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)
ஆமா றுரைக்கு மறுசமை யாதிக்குப்
போமாறு தானில்லைப் புண்ணிய மல்லதங்
காமார் வழியாக்கு மவ்வே றுயிர்கட்கும்
போமா றவ்வாதார பூங்கொடி யாளே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஆமா றுரைககு மறுசமை யாதிககுப
பொமாறு தானிலலைப புணணிய மலலதங
காமார வழியாககு மவவெ றுயிரகடகும
பொமா றவவாதார பூஙகொடி யாளெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஆம் ஆறு உரைக்கும் அறு சமைய ஆதிக்கு
போம் ஆறு தான் இல்லை புண்ணியம் அல்லது அங்கு
ஆம் ஆர் வழி ஆக்கும் அவ் வேறு உயிர்கட்கும்
போம் ஆறு அவ் ஆதார பூங் கொடியாளே.
பதப்பொருள்:
ஆம் (அவரவர்களின் நிலைக்கு ஏற்றபடியே) ஆறு (இறைவனை அடைவதற்கான வழியை) உரைக்கும் (எடுத்துக் கூறுகின்ற) அறு (ஆறு விதமான) சமைய (சமயங்களுக்கும்) ஆதிக்கு (ஆதிப் பரம்பொருளாகிய இறைவனிடம்)
போம் (போய் சேருகின்ற) ஆறு (வழி) தான் (தானாக) இல்லை (இருப்பது இல்லை) புண்ணியம் (புண்ணியம்) அல்லது (இல்லாத எதனாலும்) அங்கு (அவ்வாறு இறைவனிடம் போய் சேருவதற்கு வழியாக இருக்காது)
ஆம் (ஆகவே புண்ணியத்தினால்) ஆர் (இறைவனை அடைகின்ற) வழி (வழியை) ஆக்கும் (உருவாக்கிக் கொடுத்து) அவ் (அதனால்) வேறு (பல வகையான) உயிர்கட்கும் (உயிர்களுக்கும்)
போம் (இறைவனிடம் போய் சேருகின்ற) ஆறு (வழியாக) அவ் (அவர்களுக்குள் இருக்கின்ற) ஆதார (ஆறு ஆதார சக்கரங்களின்) பூங் (பூவிதழ்களை) கொடியாளே (இணைக்கின்ற கொடியாக இருந்து ஏழாவது சக்கரமாக இருக்கின்ற இறைவனிடம் இணைப்பது இறைவியே ஆகும்).
விளக்கம்:
அவரவர்களின் நிலைக்கு ஏற்றபடியே இறைவனை அடைவதற்கான வழியை எடுத்துக் கூறுகின்ற ஆறு விதமான சமயங்களுக்கும் ஆதிப் பரம்பொருளாகிய இறைவனிடம் போய் சேருகின்ற வழி புண்ணியத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆகவே புண்ணியத்தினால் இறைவனை அடைகின்ற வழியை உருவாக்கிக் கொடுத்து அதனால் பல வகையான உயிர்களுக்கும் இறைவனிடம் போய் சேருகின்ற வழியாக அவர்களுக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களின் பூவிதழ்களை இணைக்கின்ற கொடியாக இருந்து ஏழாவது சக்கரமாக இருக்கின்ற இறைவனிடம் இணைப்பது இறைவியே ஆகும்.