பாடல் #1560: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)
சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியிற்
பவனவன் வைத்த பழவழி நாடி
யிவனவ னென்ப தறியவல் லார்கட்
கவனவ னங்குள னாங்கட னாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சிவனவன வைதததொர தெயவ நெறியிற
பவனவன வைதத பழவழி நாடி
யிவனவ னெனப தறியவல லாரகட
கவனவ னஙகுள னாஙகட னாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சிவன் அவன் வைத்தது ஓர் தெய்வ நெறியில்
பவன் அவன் வைத்த பழ வழி நாடி
இவன் அவன் என்பது அறிய வல்லார்கட்கு
அவன் அவன் அங்கு உளனாம் கடன் ஆமே.
பதப்பொருள்:
சிவன் (சிவப் பரம்பொருளாக இருக்கின்ற) அவன் (இறைவன்) வைத்தது (வைத்து அருளிய) ஓர் (ஒரு) தெய்வ (தெய்வத்தை அடைவதற்கான) நெறியில் (நெறி முறையை கடைபிடித்து)
பவன் (அந்த சிவப் பரம்பொருளாகிய) அவன் (அவனே) வைத்த (வைத்து அருளிய) பழ (பழமையான) வழி (வழியை) நாடி (தமக்குள்ளே தேடி அடைந்து)
இவன் (அதன் மூலம் தமது ஆன்மாவாக இருப்பதும்) அவன் (அவனே) என்பது (என்பதை) அறிய (அறிந்து கொள்ள) வல்லார்கட்கு (முடிந்தவர்களுக்கு)
அவன் (தாம் பார்க்கின்ற அனைத்திலும்) அவன் (அவனை காண்பவர்களுக்கு) அங்கு (அவர்கள் பார்க்கின்ற அனைத்திலும்) உளனாம் (அதனதன் தன்மையிலேயே வந்து இருக்க வேண்டியது) கடன் (அந்த இறைவனின் கடமை) ஆமே (ஆகும்).
விளக்கம்:
சிவப் பரம்பொருளாக இருக்கின்ற இறைவன் வைத்து அருளிய தெய்வத்தை அடைவதற்கான ஒரு நெறி முறையை கடைபிடித்து அந்த சிவப் பரம்பொருளே வைத்து அருளிய பழமையான வழியை தமக்குள்ளே தேடி அடைந்து அதன் மூலம் தமது ஆன்மாவாக இருப்பதும் அவனே என்பதை அறிந்து கொள்ள முடிந்தவர்களுக்கு, தாம் பார்க்கின்ற அனைத்திலும் அவனை காண்பவர்களுக்கு அவர்கள் பார்க்கின்ற அனைத்திலும் அதனதன் தன்மையிலேயே வந்து இருக்க வேண்டியது அந்த இறைவனின் கடமை ஆகும்.