பாடல் #1558: ஐந்தாம் தந்திரம் – 23. உட் சமயம் (அக வழிபாடு மூலம் இறைவனை அடையும் வழி முறைகள்)
ஒன்றது பேரூர் வழியா றதற்குள
வென்றது போல விருமுச் சமையமு
நன்றிது தீதிது யென்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயையொத் தாரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஒனறது பேரூர வழியா றதறகுள
வெனறது பொல விருமுச சமையமு
நனறிது தீதிது யெனறுரை யாளரகள
குனறு குரைததெழு நாயையொத தாரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள
என்று அது போல இரு முச் சமையமும்
நன்று இது தீது இது என்று உரை ஆளர்கள்
குன்று குரைத்து எழு நாயை ஒத்தாரே.
பதப்பொருள்:
ஒன்று (ஒன்றாக) அது (இருக்கின்ற) பேரூர் (மிகப் பெரும் ஊருக்கு / முக்திக்கு) வழி (வழியாக) ஆறு (ஆறு விதமானவை) அதற்கு (அதை நோக்கிச் செல்லுகின்ற வழிகளாக) உள (உள்ளன)
என்று (என்று கூறுகின்ற) அது (உவமையை) போல (போலவே) இரு (இரண்டும்) முச் (மூன்றும் பெருக்கி வரும் மொத்தம் ஆறு) சமையமும் (சமயங்களும் ஒரே பரம்பொருளாகிய இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளையே சொல்லுகின்றன. ஆனால் இதை முழுவதுமாக உணர்ந்து கொள்ளாமல்)
நன்று (நன்மையானது) இது (இந்த சமயம்) தீது (தீமையானது) இது (இந்த சமயம்) என்று (என்று பிரித்து பிரித்து வேறுபாடுள்ள) உரை (கருத்துக்களை உரைத்து) ஆளர்கள் (தாம் கூறுவதே உண்மை என்று மற்றவர்களை நம்ப வைக்க பிரச்சாரம் செய்கின்றவர்கள்)
குன்று (மலையைப் பார்த்து) குரைத்து (குரைத்து) எழு (குதிக்கின்ற) நாயை (நாயை) ஒத்தாரே (போலவே இருக்கின்றார்கள்).
விளக்கம்:
ஒன்றாக இருக்கின்ற மிகப் பெரும் ஊருக்கு செல்லுவதற்கு ஆறு விதமான வழிகள் இருக்கின்றது. அது போலவே ஆறு விதமான சமயங்களும் ஒரே பரம்பொருளாகிய இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளையே சொல்லுகின்றன. ஆனால் இதை முழுவதுமாக உணர்ந்து கொள்ளாமல் நன்மையானது இந்த சமயம் தீமையானது இந்த சமயம் என்று பிரித்து பிரித்து வேறுபாடுள்ள கருத்துக்களை உரைத்து தாம் கூறுவதே உண்மை என்று மற்றவர்களை நம்ப வைக்க பிரச்சாரம் செய்கின்றவர்கள் மலையைப் பார்த்து குரைத்து குதிக்கின்ற நாயை போலவே இருக்கின்றார்கள்.