பாடல் #1040: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)
கொடிஆறு சென்று குலாவிய குண்டம்
அடியிரு கோணமா யந்தமு மொக்கும்
படியே ழுலகும் பரந்த சுடரை
மடியாது கண்டவர் மாதன மாமே.
விளக்கம்:
பாடல் #1039 இல் உள்ளபடி ஆறு சக்திமயங்களிலும் உச்ச நிலையில் இருக்கும் சக்தியானது உடலாகிய நவகுண்டத்தோடு பேரின்பத்தில் இருக்கும். இந்த சக்தியானது மூலாதாரத்திலிருந்து சுடரொளியாக இரண்டு கோணங்களாகச் சென்று ஏழு உலகங்களுக்கும் பரவி அதையும் தாண்டிய உச்சியாக இருக்கும். மூலாதாரத்தில் இருக்கும் இந்த சுடரொளியை தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருப்பவர்கள் இறைவனின் மாபெரும் அருளைப் பெற்றவர்கள் ஆவார்கள்.
கருத்து: இறைவனை உத்தம ஜோதியாக உணர்ந்த சாதகரின் ஆறு சக்கரங்களிலுள்ள சக்தியானது உச்ச நிலையை அடைகிறது. இந்த உச்ச நிலையை அடைந்த சக்தியானது தந்து மூலாதாரத்திலிருந்து V போல இரண்டு கோணங்களாக சென்று ஏழு உலகங்களுக்கும் பரவி இருக்கும். இந்த நிலையை தொடர்ந்து செய்யும் சாதகர் இறைவனின் மாபெரும் அருளைப் பெற்றவர் ஆவார்.
குறிப்பு: சக்தி பரவும் விதத்தை படத்தில் காண்க.
ஏழு உலகங்கள்:
- சத்ய லோகம்
- தப லோகம்
- ஜன லோகம்
- மகர லோகம்
- சுவர் லோகம்
- புவர் லோகம்
- பூலோகம்
