27-10-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
இவ்வுலக நிலையில் பொதுவாக மானிடர்களிடம் ஓர் தன்மை உண்டு. அத்தன்மையானது மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது. பொதுவாக மற்றவர்கள் நல்ல நிலையில் இருந்தால் அதைக்கண்டு யாமும் அந்த நிலையை அடைய வேண்டும் என்று எண்ணாது சிறு பொறாமைத் தன்மையையும் வளர்க்கின்றனர். இதனைத் தவிர்த்தல் வேண்டும் என்று இங்கு கூறுகிறோம். பொதுவாக ஒப்பிடுவதை ஓர் நல்வழியில் மாற்றி அமைத்தல் வேண்டும். மற்றொருவரின் நல்குணங்கள் நம்மிடம் உள்ளதா என்று ஆராய்தல் வேண்டும். அவ்விதம் இல்லையேல் அதனை நம் வாழ்வில் அமைக்க முயற்சித்தல் வேண்டும். இது மட்டும் அல்லாது தீயவர்களின் குணங்கள் நம்மிடத்தில் உண்டா என்று எண்ணி அவ்விதம் இருந்தால் அதை நீக்குதல் வேண்டும். இதுவே சீரான ஒப்பிடும் முறை என்று இங்கு கூறுகிறோம். இக்காலத்தில் ஒப்பிடுதல் செல்வம், அறிவு, பதவி என்கின்ற நிலையில் செல்கின்றது. இது ஓர் வருத்தமான காரியமாகின்றது. சிறிது சிறிதாக ஒப்பிடுதலை மாற்றி நம் நன்மைக்கென ஒப்பிட்டுப் பயன் பெறுவீர்களாக.