பாடல் #628

பாடல் #628: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்
பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே.

விளக்கம்:

எண்ணங்களைச் சிதறவிடாமல் மனதை ஒருமுகப்படுத்தி குண்டலினி சக்தியின் மேல் வைத்து அதை சுழுமுனை வழியே மேலேற்றிச் சென்று இந்த உலகையெல்லாம் அழகாக செதுக்கி உருவாக்கிய பேரொளியாகிய இறைவனின் பொன் போன்ற அழகிய பாதத்தை நாடி அறிவால் இறைவனை உணர்ந்து சிவமும் தாமும் இரண்டாக இல்லாமல் ஒன்றாகக் கலந்து இருத்தல் சமாதி நிலையாகும்.

பாடல் #629

பாடல் #629: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்
வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளுங்
குலைப்பட் டிருந்திடுங் கோபம் அகலுந்
துலைப்பட் டிருந்திடந் தூங்கவல் லார்க்கே.

விளக்கம்:

மனதை ஒருமுகப்படுத்தி இறை நினைப்பிலேயே ஒன்றி சமாதி நிலையில் இருக்கக் கூடியவர்களுக்கு தான் யார் என்பதை உணர்ந்து தனக்குள் இருக்கும் சிவமும் உலகங்களை இயக்கிக்கொண்டிருக்கும் சக்தியும் ஒன்றாக சேர்ந்து இருக்கும். மாயை நீங்கி அருள்சக்திக்கு எதிரான காமம், கோபம், அகங்காரம் அகன்றுவிடும்.

பாடல் #630

பாடல் #630: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந் தன்புறு வாரே.

விளக்கம்:

சமாதி நிலையில் நம்முடைய ஆன்மா ஈடு இணையில்லாத பேரொளியாய் விளங்கும் சிவபெருமானோடும் ஆதி சக்தியோடும் ஒன்றாகக் கலந்து விடும். அந்நிலையில் படைப்புக்கு முதல்வனான பிரமனும் கடல் போன்ற நீல நிற மேனியுடைய திருமாலும் ஆதிக்கடவுளான சிவபெருமானிடம் அடிபணிந்து அன்பு செலுத்துவதை நாம் உணரலாம்.

பாடல் #631

பாடல் #631: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்
சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.

விளக்கம்:

சமாதி நிலையை அடைபவர்களுக்கு பலவிதமான யோகங்களோடு அறுபத்து நான்கு விதமான சித்திகளும் கிடைக்கும். இறைவனுடன் ஒன்றாகக் கலந்து தாமே சிவமாகிய பின் சமாதி நிலையே தேவையில்லை.