பாடல் #1663: ஆறாம் தந்திரம் – 9. தவ வேடம் (அகத் தவத்தின் தன்மையை புற வேடத்தில் காட்டுவது)
யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளி
தோகைக்குப் பாசத்துச் சுற்றுஞ் சடையொன்று
வாகத்து நீறணி யாங்கக் கப்பாளஞ்
சீகத்த மாத்திரை திண்பிரம் பாகுமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
யொகிக கிடுமது வுடகடடுக கஞசுளி
தொகைககுப பாசததுச சுறறுஞ சடையொனறு
வாகதது நீறணி யாஙகக கபபாளஞ
சீகதத மாததிரை திணபிரம பாகுமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
யோகிக்கு இடும் அது உள் கட்டுக்கு கஞ்சுளி
தோகைக்கு பாசத்து சுற்றும் சடை ஒன்று
ஆகத்து நீறு அணி ஆம் அக்கு பாளம்
சீகத்த மாத்திரை திண் பிரம்பு ஆகுமே.
பதப்பொருள்:
யோகிக்கு (சிவ யோகிகள்) இடும் (அணிகின்ற) அது (பொருள்களான) உள் (தங்களின் இடுப்புக்கு கீழே) கட்டுக்கு (கட்டுகின்ற கோவணமும்) கஞ்சுளி (உடலைப் போர்த்தி இருக்கின்ற காவி ஆடையும்)
தோகைக்கு (மயிலின் தோகையால் திரித்த) பாசத்து (கயிறு போல) சுற்றும் (சுற்றி இருக்கின்ற) சடை (திரிந்த சடை முடி) ஒன்று (ஒன்றும்)
ஆகத்து (உடம்பு முழுவதும்) நீறு (திருநீறு) அணி (அணிந்தும்) ஆம் (மார்பில் அணிந்து இருக்கின்ற மாலையாகிய) அக்கு (உருத்திராட்ச) பாளம் (மணியும்)
சீகத்த (அழகிய கைப் பிடியைக் கொண்ட) மாத்திரை (கமண்டலமும்) திண் (உறுதியான) பிரம்பு (தண்டமும்) ஆகுமே (அவர்களின் தவ அடையாளங்கள் ஆகும்).
விளக்கம்:
சிவ யோகிகள் அணிகின்ற பொருள்களான தங்களின் இடுப்புக்கு கீழே கட்டுகின்ற கோவணமும், உடலைப் போர்த்தி இருக்கின்ற காவி ஆடையும், மயிலின் தோகையால் திரித்த கயிறு போல சுற்றி இருக்கின்ற திரிந்த சடை முடி ஒன்றும், உடம்பு முழுவதும் திருநீறு அணிந்தும், மார்பில் அணிந்து இருக்கின்ற மாலையாகிய உருத்திராட்ச மணியும், அழகிய கைப் பிடியைக் கொண்ட கமண்டலமும், உறுதியான தண்டமும் அவர்களின் தவ அடையாளங்கள் ஆகும்.