பாடல் #1709

பாடல் #1709: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

ஆறந்த முங்கூடி யாகுமுடம் பினிற்
கூறிய வாதார மாறுங்குறிக் கொண்மி
னாறிய வக்கரமா மைம்பதின் மேலே
யூறிய வாதாரத் தோரெழுத் தாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆறநத முஙகூடி யாகுமுடம பினிற
கூறிய வாதார மாறுஙகுறிக கொணமி
னாறிய வககரமா மைமபதின மெலெ
யூறிய வாதாரத தொரெழுத தாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆறு அந்தமும் கூடி ஆகும் உடம்பினில்
கூறிய ஆதாரம் ஆறும் குறி கொண்மின்
ஆறிய அக்கரம் ஆம் ஐம்பதின் மேலே
ஊறிய ஆதாரத்து ஓர் எழுத்து ஆமே.

பதப்பொருள்:

ஆறு (ஆறு ஆதார சக்கரங்களின்) அந்தமும் (எல்லைகளும்) கூடி (ஒன்றாக கூடி) ஆகும் (ஆகுகின்ற) உடம்பினில் (உயிர்களின் உடம்பினுள்)
கூறிய (சொல்லிய) ஆதாரம் (ஆதாரங்களாகிய) ஆறும் (ஆறு சக்கரங்களையும்) குறி (குறிக்கோளாக) கொண்மின் (கொண்டு சாதகம் செய்யுங்கள்)
ஆறிய (அப்போது அந்த ஆறு சக்கரங்களிலும்) அக்கரம் (வீற்றிருக்கின்ற எழுத்துக்களும்) ஆம் (சக்தியூட்டம் பெற்று) ஐம்பதின் (ஆறு அத்துவாக்களுக்கு ஆதாரமாக இருக்கின்ற ஐம்பது எழுத்துக்களுக்கு) மேலே (மேலே வீற்றிருந்து)
ஊறிய (அந்த ஐம்பது எழுத்துக்களுக்குள் ஊறி இருந்து) ஆதாரத்து (நடுவில் ஆதாரமாக வீற்றிருக்கின்ற) ஓர் (ஒரு) எழுத்து (எழுத்தாகிய) ஆமே (ஓங்காரமாகவே மாறி இருக்கும்).

விளக்கம்:

ஆறு ஆதார சக்கரங்களின் எல்லைகளும் ஒன்றாக கூடி ஆகுகின்ற உயிர்களின் உடம்பினுள் சொல்லிய ஆதாரங்களாகிய ஆறு சக்கரங்களையும் குறிக்கோளாக கொண்டு சாதகம் செய்யுங்கள். அப்போது அந்த ஆறு சக்கரங்களிலும் வீற்றிருக்கின்ற எழுத்துக்களும் சக்தியூட்டம் பெற்று, ஆறு அத்துவாக்களுக்கு ஆதாரமாக இருக்கின்ற ஐம்பது எழுத்துக்களுக்கு மேலே வீற்றிருந்து, அந்த ஐம்பது எழுத்துக்களுக்குள் ஊறி இருந்து நடுவில் ஆதாரமாக வீற்றிருக்கின்ற ஒரு எழுத்தாகிய ஓங்காரமாகவே மாறி இருக்கும்.

பாடல் #1710

பாடல் #1710: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

ஆகு முடம்பு மழிக்கின்ற வவ்வுடல்
போகு முடம்பும் பொருந்திய வாறுதா
னாகிய வக்கர மைம்பது தத்துவ
மாகு முடம்புக்கு மாறந்த மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆகு முடமபு மழிககினற வவவுடல
பொகு முடமபும பொருநதிய வாறுதா
னாகிய வககர மைமபது தததுவ
மாகு முடமபுககு மாறநத மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆகும் உடம்பும் அழிக்கின்ற அவ் உடல்
போகும் உடம்பும் பொருந்திய ஆறு தான்
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்
ஆகும் உடம்புக்கும் ஆறு அந்தம் ஆமே.

பதப்பொருள்:

ஆகும் (ஆறு ஆதார சக்கரங்களால் ஆகிய) உடம்பும் (உயிர்களின் உடம்பை) அழிக்கின்ற (அழிக்கின்றதும்) அவ் (அந்த ஆறு சக்கரங்களே ஆகும்) உடல் (உயிர்களின் உடல் முடிகின்ற காலத்தில்)
போகும் (ஐம்பூதங்களில் இருந்து வந்த உடம்பை அதிலேயே திரும்பி போகும் படி செய்வதும்) உடம்பும் (உயிர்களின் உடம்புக்குள்) பொருந்திய (பொருந்தி மறைந்து இருக்கின்றதும்) ஆறு (அந்த ஆறு சக்கரங்கள்) தான் (தான்)
ஆகிய (அந்த ஆறு சக்கரங்களாக ஆகி இருப்பது) அக்கரம் (ஆறு எழுத்துக்களாகும். அந்த எழுத்துக்களுக்குள் அடங்கி இருப்பது) ஐம்பது (ஐம்பது) தத்துவம் (தத்துவங்களாகும்)
ஆகும் (இந்த ஐம்பது தத்துவங்களால் ஆகிய) உடம்புக்கும் (உடம்புக்கும்) ஆறு (அந்த ஆறு சக்கரங்களின் எழுத்துக்களுக்கும்) அந்தம் (எல்லையாக இருப்பது ஓங்காரமே) ஆமே (ஆகும்).

விளக்கம்:

ஆறு ஆதார சக்கரங்களே உயிர்களின் உடம்பை ஆக்குவதும் அழிக்கின்றதும் ஆகும். உயிர்களின் உடல் முடிகின்ற காலத்தில் ஐம்பூதங்களில் இருந்து வந்த உடம்பை அதிலேயே திரும்பி போகும் படி செய்வதும், உயிர்களின் உடம்புக்குள் பொருந்தி மறைந்து இருக்கின்றதும், அந்த ஆறு சக்கரங்களே ஆகும். அந்த ஆறு சக்கரங்களாக ஆகி இருப்பது ஆறு எழுத்துக்களாகும். அந்த எழுத்துக்களுக்குள் அடங்கி இருப்பது ஐம்பது தத்துவங்களாகும். இந்த ஐம்பது தத்துவங்களால் ஆகிய உடம்புக்கும் அந்த ஆறு சக்கரங்களின் எழுத்துக்களுக்கும் எல்லையாக இருப்பது ஓங்காரமே ஆகும்.

பாடல் #1711

பாடல் #1711: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

ஆயு மலரி னணிமலர் மேலது
மாய விதழும் பதினாறு மங்குள
தூய வறிவு சிவானந்த மாகிப்போய்
மேய வறிவாய் விளைந்தது தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆயு மலரி னணிமலர மெலது
மாய விதழும பதினாறு மஙகுள
தூய வறிவு சிவானநத மாகிபபொய
மெய வறிவாய விளைநதது தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆயு மலரின் அணி மலர் மேல் அதும்
ஆய இதழும் பதினாறும் அங்கு உள
தூய அறிவு சிவ ஆனந்தம் ஆகி போய்
மேய அறிவு ஆய் விளைந்தது தானே.

பதப்பொருள்:

ஆயு (உயிர்களின் உலக வாழ்க்கைக்கு ஆயுள் காலத்தை வரையறுப்பது) மலரின் (ஆறு ஆதார சக்கரங்களாகிய மலர்களாகும்) அணி (அவற்றை அணிகலனாக அணிந்து இயக்குகின்ற ஆறு எழுத்துக்கள்) மலர் (அந்த மலர்களின்) மேல் (மேல்) அதும் (இருக்கின்றது)
ஆய (இவ்வாறு எழுத்துக்களால் இயக்கப் படுகின்ற ஆதார சக்கரங்களின்) இதழும் (இதழ்களும்) பதினாறும் (பதினாறு கலைகளும்) அங்கு (அங்கேயே) உள (உள்ளது)
தூய (இவற்றை சாதகத்தின் மூலம் இயக்குவதால் தூய்மை பெற்ற) அறிவு (அறிவானது) சிவ (இறைவனது) ஆனந்தம் (பேரின்பத்தை தாங்குகின்ற) ஆகி (பாத்திரமாக ஆகி) போய் (விடுகின்றது)
மேய (அதன் பிறகு உலக அறிவானது மாறி இறைவனது) அறிவு (பேரறிவு) ஆய் (ஆக) விளைந்தது (விளைய வைப்பதற்கு) தானே (இந்த ஆறு ஆதார சக்கரங்களே காரணமாக இருக்கின்றன).

விளக்கம்:

உயிர்களின் உலக வாழ்க்கைக்கு ஆயுள் காலத்தை வரையறுப்பது ஆறு ஆதார சக்கரங்களாகிய மலர்களாகும். அவற்றை அணிகலனாக அணிந்து இயக்குகின்ற ஆறு எழுத்துக்கள் அந்த மலர்களின் மேல் இருக்கின்றது. இவ்வாறு எழுத்துக்களால் இயக்கப் படுகின்ற ஆதார சக்கரங்களின் இதழ்களும் பதினாறு கலைகளும் அங்கேயே உள்ளது. இவற்றை சாதகத்தின் மூலம் இயக்குவதால் தூய்மை பெற்ற அறிவானது இறைவனது பேரின்பத்தை தாங்குகின்ற பாத்திரமாக ஆகி விடுகின்றது. அதன் பிறகு உலக அறிவானது மாறி இறைவனது பேரறிவு ஆக விளைய வைப்பதற்கு இந்த ஆறு ஆதார சக்கரங்களே காரணமாக இருக்கின்றன.