பாடல் #492: இரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவவர்க்கம் (மூன்று விதமான உயிர்கள்)
சத்தி சிவன்விளை யாட்டால் உயிராக்கி
ஒத்த இருமாயா கூட்டத் திடைபூட்டிச்
சுத்தம தாகுந் துரியம் பிரிவித்துச்
சித்தம் புகுந்து சிவமய மாக்குமே.
விளக்கம்:
அசையா சக்தியாகிய சிவமும் அசையும் சக்தியாகிய சக்தியும் தங்கள் திருவிளையாட்டால் ஆன்மா ஆசைப்படும் போது அதைத் தீர்த்துக் கொள்ள வினைகளைச் சேர்த்து உயிராக்கி உலகத்தில் பிறக்க வைத்து அந்த உயிருக்கு சுத்த மாயை அசுத்த மாயை என்ற இரண்டு விதமான மாயைகளையும் வினைகள் தீரும் வரை உடலுக்குள் வைத்து பூட்டுகின்றார்கள். பின்பு உயிர்களின் எண்ணத்தில் புகுந்து சுத்த மாயை அசுத்த மாயை ஆகிய இரண்டு விதமான மாயைகளையும் நீங்கி உயிர் உருவாகுவதற்கு முன்பு இருந்த துரியம் எனும் ஆழ்நிலை உறக்க நிலையில் ஆன்மாவை சிவமாக்குகின்றார்கள்.
உட்கருத்து: இறைவன் தனது திருவிளையாட்டினால் தன்னிடம் துரிய நிலையில் கலந்திருக்கும் ஆன்மாவை மாயையை சேர்த்து பிறக்க வைத்து பின்பு மாயை நீக்கி தன்னிடமே சேர்த்துக்கொள்கிறார். துரிய நிலையையும் மாயை சேரும் நிலையையும் பாடல் #460 இல் காண்க.