பாடல் #341: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு வீரச்செயல்கள்)
எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியும்
தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
அங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே.
விளக்கம்:
அண்டசராசரமெங்கும் பரவி இருப்பவனும் வாணுலகம் மண்ணுலகம் என்று இரண்டு நிலங்களையும் தாங்கி இருப்பவனும் தம்மை நாடி வருபவர்களுக்கு தஞ்சம் கொடுப்பவனுமாகிய இறைவனின் திருவடிகளின் பெருங்கருணையை உணர்ந்து இருக்கும் தேவர்கள் பிரம்மனைப் பார்த்துக் கோபம் கொண்டனர். பிரம்மன் படைப்புத் தொழிலைச் செய்வதாலும் ஐந்து தலைகளைக் கொண்டதாலும் மும்மூர்த்திகளிலேயே தாம்தான் உயர்ந்தவர் என்று தற்பெருமை கொண்டிருந்ததால் இறைவனது திருவடிக் கருணையை உணராமல் இருந்தார். பிரம்மனின் தற்பெருமையால் படைப்பு பாதிக்கப்படுவதைக் கண்ட இறைவன் பைரவ அவதாரம் எடுத்து பிரம்மனின் ஐந்து தலைகளின் ஒன்றைத் தனது விரல் நகத்தால் கிள்ளி எடுத்துவிட்டார். பிரம்மாவின் கிள்ளி எடுக்கப்பட்ட தலையிலிருந்து வந்த குருதியை அந்த கபாலத்திலேயே எடுத்து திருமாலை ஏற்றுக்கொள்ளச் செய்து அருளினார். இது நிகழ்ந்த இடம் திருக்கண்டியூர் தலமாகும்.
உட்கருத்து: உயிர்களிடம் இருக்கும் நான் என்னும் அகங்காரம் அகந்தை தான் யார் என்பதை உணரவிடாமல் செய்து நல்ல எண்ணம் குணங்களை அழிப்பதுடன் இறைவனையும் அடையவிடாமல் செய்து விடுகிறது. மேலும் அகந்தை அகங்காரத்தினால் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து அதன் அடுத்த பிறவியையும் பாதிக்கிறது. (உதாரணமாக உயிருக்கு கர்மவினையின்படி 10 பிறவிகள் என்று எடுத்துக்கொண்டால் அகந்தை அகங்காரத்தினால் மேலும் பிறவிகள் எண்ணிக்கை கூடி அடுத்து வரும் பிறவிகளையும் பாதிக்கிறது) பிறவிகள் உயிர்கள் இறைவா என்னை காப்பாற்று என்று இறைவனை வேண்டிட தன்னை நாடி வருபவர்களுக்கு பெருங்கருணை செய்யும் இறைவன் அந்த அகந்தை அகங்காரத்தை அடியோடு வெட்டி எடுத்து உயிர்களை காக்கும் திருமாலிடம் அளித்து மீண்டும் இந்த உயிருக்கு மீண்டும் அகந்தை அகங்காரம் வராமல் இருக்க அருளினார்.