பாடல் #41

பாடல் #41: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

சினம்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனம்செய்த நெஞ்சிடைப் போற்றவல் லார்க்குக்
கனம்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே
இனம்செய்த மான்போல் இணங்கிநின் றானே.

விளக்கம்:

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து சீறிக்கொண்டு எழுந்த ஆலகால விஷம் யாரையும் தீண்டாதவாறு தாமே அருந்தி அனைவரையும் காத்தருளிய தேவர்களின் தலைவனும் அந்த விஷம் உள்ளே இறங்கிவிடாமல் கழுத்திலேயே தடுத்து வைத்த பேரொளி வீசும் நெற்றியைக் கொண்ட உமையம்மையாரைத் தன் உடலின் சரி பாதியாகக் கொண்ட சதாசிவமூர்த்தி தமது குறைகளையும் தாண்டிய உறுதியோடு நெறி வழியில் செல்ல இறைவனைத் தம் நெஞ்சத்தினுள்ளே வைத்துப் பூஜிக்கக்கூடியவர்களுடன் பெண் மானைச் சேர்ந்த ஆண் மான் போல எப்போதும் பிரியாது இணைந்து நிற்கின்றான்.

உள் விளக்கம்:

உண்மையான பொருளான இறைவனை அடையும் ஆசையில் அவனை நெஞ்சத்தில் வைத்துப் போற்றிப் புகழ்ந்து வரும் அடியவர்களின் நெஞ்சத்திலிருந்து ஆணவம், அகங்காரம், கோபம் அவர்களைப் பாதிக்காதவாறு தாமே எடுத்துக்கொண்டு, அவர்களைச் சூழ்ந்துகொண்டு இறைவனை அடையவிடாமல் தடுக்கும் கர்மங்களை அவர்களின் வழியில் குறுக்கிடாதவாறு தடுத்து நிறுத்திவிட்டு அவர்கள் செல்லும் நேர்வழிப் பாதையில் அவர்களோடு இணைந்து ஒன்றாக நடந்து வந்து அவர்களைக் காத்தருள்வான் சதாசிவமூர்த்தி.

பாடல் #42

பாடல் #42: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

போயரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயக னான்முடி செய்தது வேநல்கு
மாயகஞ் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றுந் தானே.

விளக்கம்:

சிவபெருமானை அடைக்கலம் புகுந்து துதிப்பவர்கள் பெறத்தக்க பயன் என்னவென்றால் நான்கு திருமுடியுடைய பிரம்மன் படைப்பான மாய உலகில் மறுபடியும் மறுபடியும் பிறக்க வேண்டியவர்கள் ஆனாலும் மூங்கில் போன்ற திரட்சியான தோள்களையுடைய உமாதேவியின் தலைவனான சிவபெருமான் அவர்களுடன் பொருந்தி இருப்பான்.

பாடல் #43

பாடல் #43: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரனடி செய்தங் கொதுங்கவல் லார்க்கு
நிரனடி செய்து நிறைந்துநின் றானே.

விளக்கம் :

இறைவன் திருவடியை நினைத்து அவன் நாமத்தை கூறி அன்பால் கசிந்துருகி அழுது ஆராய்ந்து தெளிந்து இறைவன் திருவடியை நாள்தோறும் உறுதியான உள்ளத்தோடு தியானித்து அந்த உணர்விலே இலயித்து இருப்பவர்களுக்கு திருவடிபேற்றை அருளி இறைவன் அவர்களுடன் நிறைந்து இருப்பான்.

பாடல் #44

பாடல் #44: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.

விளக்கம் :

போற்றுவார்கள் அமரர்கள் தூய நிர்மல இறைவனின் திருவடியை போற்றுவார்கள் அசுரர்கள் தூய நிர்மல இறைவனின் திருவடியை போற்றுவார்கள் மனிதர்கள் தூய நிர்மல இறைவனின் திருவடியை யாமும் எமது அன்பினுள் அவனை போற்றி நிலைபெறச்செய்தேன்.

பாடல் #45

பாடல் #45: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

விதிவழி அல்லதிவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவன் ஆமே.

விளக்கம்:

கர்ம விதிப்படியே இந்த உலகம் இயங்குகின்றதே அன்றி வேறில்லை. உயிர்கள் பெறும் இன்பமும் துன்பமும் அவரவர்களின் கர்ம விதிப்படியே இருக்குமேயன்றி மாறி இருப்பதில்லை. இருப்பினும் முக்தியடைய வேண்டும் என்கிற எண்ணத்தில் இறைவனை தினமும் வணங்கித் துதித்து வரும் உயிர்களுக்கு அவர்களின் கர்ம விதிகளை அகற்ற சூரியன் போல் ஒளியாய் வந்து இறைவன் முக்திபெறும் வழியைக் காட்டி அருள்வான்.

பாடல் #46

பாடல் #46: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
சிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
புந்திவண் ணன்எம் மனம்புகுந் தானே.

விளக்கம்:

மாலைநேர அந்தி சூரியனைப் போன்ற சிவந்த நிறத்தையுடைய பிறவியை அழிக்கும் அரனே சிவனே என்று மனதில் எண்ணிக்கொண்டே இருந்து இறைவனைத் தொழுகின்ற மனம் திருந்திய அடியவர்களுக்கும் அனைத்திற்கும் ஆரம்பமானவனே அனைத்திற்கும் முதல்வனே ஆதியானவனே என்று துதிக்கும் எமக்கும் ஞானத்தி ரூபமான இறைவன் எமது மனத்துள் புகுந்து நிற்கின்றான்.

பாடல் #47

பாடல் #47: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நின்இன்பம் தானே.

விளக்கம்:

கர்மவினைப் பயனால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே எப்போதும் இறைவன் சிந்தனையில் இருக்கக் கூடியவர்கள் மாபெரும் தவம் செய்பவர்களுக்கு ஈடானவர்கள். இறைவனை எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பவர்கள் அவனின் பேரன்பிலேயே எப்போதும் நிற்கின்றார்கள். பனைமரத்தில் கூடு கட்டி வாழும் பருந்து பனைமரத்தின் பலன்களை அனுபவிக்காமல் (சுவையான பனம்பழங்களையோ இலைகளையோ பட்டைகளையோ உண்ணாமல்) வெளியில் உணவு தேடி அலைகின்றதோ அதுபோலவே இறைவன் அருகில் இருந்தும் இறைவனை நினைக்காமல் இருக்கின்றவர்களுக்கு பேரின்பம் எப்போதும் கிடைப்பதில்லை.

பாடல் #48

பாடல் #48: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கென்று மேவிநின் றேனே.

விளக்கம்:

அடியவர்கள் போற்றிப் புகழும் தேவர்களின் தலைவனை தலை தாழ்த்தி வணங்கி அனைத்திற்கும் முதல்வனானவனை எனது எண்ணத்தில் வைத்து உலகமனைத்திலும் உள்ள உயிர்களுக்கு அருளும் ஆதிப் பொருளானவனை எனது தந்தை என்று நினைத்து ஆன்ம இருளைப் போக்கும் எப்போதும் அனையாத மணிவிளக்கு அவன் என்று உணர்ந்து அவனோடு கலந்து நின்றேன்.

பாடல் #49

பாடல் #49: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

பரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசத் தொருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசம் கடந்தெய்த லாமே.

விளக்கம்:

மாயையால் உயிர்களைக் கட்டிப்போடும் பரை (பராசக்தி) மும்மலங்களால் கட்டுண்ட ஆன்மாவாகிய பசு ஆன்மாக்களை உலகோடு கட்டிப்போடும் பாசம் (உலகப் பற்றுக்கள்) இவை அனைத்திற்கும் தலைவனான இறைவனை உள்ளத்தில் வைத்துப் போற்றிப் புகழ்ந்து அன்பினால் அவனோடு கலந்து இருக்கக்கூடியவர்களுக்கு ஆன்மாவின் கர்மாக்கள் பெருங்கடல் போன்று சூழ்ந்து மெய்ஞானத்தை மறைக்கும் திரைபோல இருந்தாலும் இறைவனின் அருளால் அந்தக் கடலையும் நீந்திக் கரையேறி மும்மலக்கட்டுக்களை அறுத்து உலகப் பற்றுக்களை ஒதுக்கி மாயையைக் கடந்து முக்தியை எய்தலாம்.

பாடல் #50

பாடல் #50: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்
றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று
நாடுவன் நானின் றறிவது தானே.

விளக்கம்:

இறைவனின் திருவடிகளை என் தலைமேல் சூடிக்கொள்வேன். அவனின் திருவடிகளை என் நெஞ்சத்தில் வைத்துக்கொள்வேன். எம்பெருமான் என்று அவன் புகழ்களைப் பாடுவேன். பலவித மலர்களை அவன் திருவுருவத்தின் மேல் தூவி அவனைப் பணிந்து நின்று அவன் முன்னால் அவன் பெருமைகளைப் பாடிக்கொண்டே ஆடுவேன். ஆடியபின் அமரர்களின் தலைவனான இவனே எனக்கு முக்தியளிக்கக்கூடியவன் என்று அவனை நாடி அடைந்தபின் அனைத்தும் அவனே எனும் உண்மை ஞானத்தை அறிந்து அவனோடே கலந்து நிற்பேன்.

உள்விளக்கம்:

இறைவனை அடைந்து முக்திபெற மாபெரும் தவங்கள் யோகங்கள் யாகங்கள் இருந்தாலும் அவனது திருவடியை எண்ணத்தில் எப்போதும் வைத்து அவனைப் புகழ்ந்து பாடி ஆடி பலவித மலர்களைத் தூவி பூஜித்தாலே அவனை நாடி முக்தியை அடையலாம். இதுவே யாம் அறிந்த சிறந்த உபாயம் என்று திருமூலர் அருளுகின்றார்.