பாடல் #1189

பாடல் #1189: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

ஈறது தான்முத லெண்ணிரண் டாயிரம்
மாறுத லின்றி மனோவச மாயெழில்
தூறது செய்யுஞ் சுகந்தச் சுழியது
பேறது செய்து பிறந்துஇருந் தாளே.

விளக்கம்:

பாடல் #1188 இல் உள்ளபடி அனைத்தும் சென்று அடைகின்ற இறுதியான இடமாக இருக்கின்ற இறைவியானவள் சாதகருக்குள் இருக்கும் சகஸ்ரதளத்தின் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரிலும் பதினாறு கலைகளிலும் முதன்மையாவளாக வீற்றிருந்து சாதகரின் தன்மைக்கு ஏற்றபடி அவருடைய மனதை தன் வசப்படுத்தி வேறு எதிலும் அதைச் செல்ல விடாமல் தடுத்துக் காப்பாற்றி அந்த மனதை தாம் வசிப்பதற்கு ஏற்ற இடமாக பேரழகுடனும் நறுமணத்துடனும் மாற்றுவதற்கு மனதில் இருக்கும் அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்து சாதகருக்கு பேரருளைக் கொடுத்து அதன் படி மாறிய மனதிற்குள் புதியதாக புகுந்து வீற்றிருக்கின்றாள்.

குறிப்பு: முதல் வரியில் வரும் எண்ணிரண்டாயிரம் என்பதன் பொருள் எண் + இரண்டு + ஆயிரம் என்று பிரித்து படிக்க வேண்டும். எண் என்றால் எட்டு அதன் பிறகு வரும் இரண்டால் எட்டை பெருக்கினால் பதினாறு வரும் பதினாறு என்பது உயிர்களின் உடலின் இயக்கத்திற்கு காரணமாக இருக்கும் செயல்களைக் குறிப்பதாகும். இதனை பாடல் #1070 இல் காணலாம்.

பாடல் #1190

பாடல் #1190: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

இருந்தன ளேந்திழை யீறதி லாகத்
திருந்திய ஆனந்தஞ் செந்நெறி நண்ணிப்
பொருந்து புவனங்கள் போற்றிசெய் தேத்த
வருந்த விருந்தனள் மங்கைநல் லாளே.

விளக்கம்:

பாடல் #1189 இல் உள்ளபடி சாதகரின் மனதிற்குள் புதியதாக புகுந்து வீற்றிருக்கும் இறைவியானவள் அழகிய ஆபரணங்களை அணிந்து கொண்டு அவரது மனதையே தனக்கு ஏற்ற இடமாகக் கொண்டு வீற்றிருந்து அவளுக்கு ஏற்ற விதத்தில் மாறி இருக்கும் மனதிற்கு பேரானந்தத்தைக் கொடுக்கும் சிறப்பான வழிகளை காண்பித்து அதன் படியே சாதகரை நடக்க வைத்து அருளுகின்றாள். அனைத்து உலகங்களிலும் வாழும் உயிர்களும் போற்றி வணங்குகின்ற இறைவனை சாதகர் தமக்கு இறைவி அருளிய சிறப்பான வழிகளில் சிரத்தையோடு வழிபடும் போது அதை ஏற்றுக் கொண்டு மகிழ்வோடு வீற்றிருக்கின்றாள் என்றும் இளமையுடன் இருக்கும் நன்மையின் வடிவான இறைவி.

கருத்து:

இறைவனை அடைய வேண்டிய சிறப்பான வழிகளை சாதகருக்கு கொடுத்து அருளி அதன் படியே அவரை நடக்க வைக்கும் இறைவி தாம் அருளிய வழிகளில் சாதகர் சிரத்தையோடு வழிபடும் போது அதை ஏற்றுக் கொண்டு அவரை இறைவனிடம் கொண்டு சேர்த்து அருளுகின்றாள்.

பாடல் #1191

பாடல் #1191: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

மங்கையு மாரனுந் தம்மொடு கூடிநின்
றங்குலி கூட்டி யகம்புறம் பார்த்தனர்
கொங்கைநல் லாளுங் குமாரர்க ளைவரும்
தங்களின் மேவிச் சடங்குசெய் தாரே.

விளக்கம்:

பாடல் #1190 இல் உள்ளபடி இறைவி அருளிய வழியின் படியே சிரத்தையோடு வழிபடும் முறையை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். என்றும் இளமையுடன் இருக்கும் இறைவியும் இறைவனும் ஒன்றாகச் சேர்ந்து சாதரின் நெஞ்சத்திலிருந்து ஒரு கட்டை விரல் அளவிற்கு உள்ளிருக்கும் ஆன்மாவோடு ஒன்றாகச் சேர்ந்து வீற்றிருந்து சாதகரின் உள்ளுக்குள்ளும் வெளியிலும் இருக்கின்ற இறை சக்தியை பார்த்துக் கொண்டு சாதகம் செய்து கொண்டு இருக்கின்றார்கள். இந்த சாதகத்தின் பயனாக பேரின்பமாகிய அமிழ்தப் பாலைக் கொடுக்கும் அழகிய முலைகளையுடைய நன்மையின் வடிவான இறைவி சாதகருக்கு ஞானத்தை உணர்த்தி அருளுகின்றாள். அந்த ஞானத்தின் மூலம் சாதகர் தமக்குள் இருக்கும் ஐந்து பூதங்களும் வெளியில் இருக்கும் ஐந்து பூதங்களும் ஒரே சக்தியாக இருப்பதை உணர்ந்து கொள்கிறார். அதன் பிறகு சாதகர் தமக்குள் இறை சக்தியாக உணர்ந்த ஐந்து பூதங்களையும் தமக்குள் உணர்ந்த இறைவன் இறைவி ஆன்மாவுடன் ஒன்றாக பொருந்தி நின்று சாதகம் செய்கின்றார்.

பாடல் #1192

பாடல் #1192: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

சடங்கது செய்து தவம்புரி வார்கள்
கடந்தனி லுள்ளே கருதுவ ராகில்
தொடர்ந்தெழு சோதி துளைவழி யேறி
அடங்கிடு மன்பின தாயிழை பாலே.

விளக்கம்:

பாடல் #1191 இல் உள்ளபடி ஐந்து பூதங்களையும் இறைவன் இறைவி ஆன்மாவுடன் ஒன்றாகப் பொருந்தி நின்று செய்கின்ற சாதகத்தையே தவமாக மேற்கொள்ளுகின்ற சாதகர்கள் தங்களின் உடலை மறந்து அதற்கு உள்ளே உணர்ந்து இருக்கின்ற இறை சக்தியை எண்ணிக் கொண்டே இருந்தால் அவர்களின் எண்ணத்தைத் தொடர்ந்து மூலாதாரத்திலுள்ள குண்டலினி சோதியானது எழும்பி சுழுமுனை நாடித் துளை வழியே மேலேறிச் சென்று சகஸ்ரதளத்தில் சோதியாக இருக்கின்ற பேரன்பின் வடிவான சாதகரின் அன்பிற்கு ஏற்ற அழகிய அணிகலன்களை அணிந்திருக்கும் இறைவியிடம் சென்று அடங்கி விடும்.

பாடல் #1193

பாடல் #1193: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

பாலித் திருக்கும் பனிமல ராறினும்
ஆலித் திருக்கு மவற்றி னகம்படி
சீலத்தை நீக்கத் திகழ்ந்தெழு மந்திரம்
மூலத்து மேலது முத்துஅது வாமே.

விளக்கம்:

பாடல் #1192 இல் உள்ளபடி சாதகரின் குண்டலினி சோதியானது சகஸ்ரதளத்தில் இருக்கும் இறைவியோடு சேர்ந்து அடங்கி இருக்கும் போது இறைவியின் சக்தியானது சாதகருக்குள் இருக்கும் ஆறு ஆதார சக்கரங்களிலும் ஒன்றாகக் கலந்து இருக்கும். அப்போது அந்தச் சக்கரங்களின் உள்ளே படிந்திருக்கின்ற இன்பத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கின்ற நிலையிலிருந்து சாதகர் தம்மை நீக்கி விட்டால் அவருக்குள்ளிருந்து பிரகாசமாக ஒரு மந்திரம் மூலாதாரத்திலிருந்து மேலெழும்பி வரும். இந்த மந்திரமே கடலின் ஆழத்தில் கிடைக்கும் அபூர்வமான முத்து போன்ற மிகப் பெரும் செல்வமாகும்.

பாடல் #1194

பாடல் #1194: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

முத்து வணத்தி முகந்தொறு முக்கண்ணி
சத்தி சதிரி சகளி சடாதரி
பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி
வித்தகி யென்னுள்ள மேவிநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1193 இல் உள்ளபடி மூலாதாரத்திலிருந்து முத்துப் போல கிடைக்கும் மந்திரமானது இறைவியின் அம்சத்தில் இருப்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். இந்த மந்திரமான இறைவி முத்து போன்ற வெண்மை ஒளியாகப் பிரகாசிக்கின்றாள். தனது அனைத்து முகங்களிலும் மூன்று கண்களை வைத்திருக்கின்றாள். சக்தி மயமாக இருக்கின்றாள். அளவில்லாத ஆற்றலைக் கொண்டிருக்கின்றாள். அடியவர் வேண்டும் உருவத்தையே மேற்கொண்டு வருகின்றாள். சடை முடியை அணிந்து கொண்டிருக்கின்றாள். பத்துக் கைகளைக் கொண்டிருக்கின்றாள். அசையா சக்தியாகிய இறைவனைச் சுற்றிக் கொண்டிருக்கும் பொன் வளையலாக இருக்கின்றாள். ஞானத்தின் தலைவியாக இருக்கின்றாள். இந்த இறைவியே எமது உள்ளம் முழுவதும் பரவி வீற்றிருக்கின்றாள்.

பாடல் #1195

பாடல் #1195: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

மேவிய மண்டல மூன்றுடன் கீழெரி
தாவிய நற்பதத் தண்மதி யங்கதிர்
மூவருங் கூடி முதல்வியாய் முன்நிற்பார்
ஓவினு மேவிடு முள்ளொளி யாமே.

விளக்கம்:

பாடல் #1194 இல் உள்ளபடி சாதகரின் உள்ளத்திற்கும் பரவி வீற்றிருக்கும் இறைவியானவள் அவருக்குள் இருக்கும் மூன்று மண்டலங்களிலும் பேரொளி உருவமாக இருப்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். சாதகருக்குள் இருக்கும் மூன்று மண்டலங்களில் அடியில் இருக்கும் அக்னி மண்டலமாகிய மூலாக்னியே இறைவியின் நன்மை தரும் திருவடிகளாகவும், சூரிய மண்டலமே இறைவியின் திருமேனியாகவும், தலை உச்சிக்கு மேலே இருக்கும் துவாதசாந்த வெளியையும் தாண்டி இருக்கும் சந்திர மண்டலமே (பாடல் #1187 இல் உள்ளபடி) இறைவியின் திருமுடியாகவும் கொண்ட பேரொளி உருவமாக இறைவி இருக்கின்றாள். சாதகர் கண்மூடி தியானத்தில் இருந்தாலும் தமக்குள் பேரொளி உருவமாக இறைவி வீற்றிருப்பதை உணர்ந்து தரிசிக்க முடியும்.

பாடல் #1196

பாடல் #1196: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

உள்ளொளி மூவிரண் டோங்கிய வங்கங்கள்
வெள்ளொளி யங்கியின் மேவி யவரொடுங்
கள்ளவிழ் கோனைக் கலந்துட னேநிற்கும்
கொள்ள விசுத்திக் கொடியமு தாமே.

விளக்கம்:

பாடல் #1195 இல் உள்ளபடி சாதகருக்குள் பேரொளியாக வீற்றிருக்கும் இறைவியானவள் தனது சக்தியின் மூலம் சாதகருக்குள் இருக்கும் ஆறு ஆதாரச் சக்கரங்களுக்கும் உயர்ந்த நிலையை அருளி அவருக்குள் இருக்கும் குண்டலினி சக்தியாகிய அக்னியில் பரவி அதனோடு சேர்ந்து நிற்கின்றாள். தேன் நிறைந்து இருக்கும் கொன்றை மலர்களை மாலையாகச் சூடியிருக்கும் அரசனாகிய இறைவனுடன் ஒன்றாகக் கலந்து இறை சக்தியுடனே சாதகருக்குள் வீற்றிருக்கும் இறைவியானவள் சாதகர் தம்மை உணர்ந்து அனுபவித்துக் கொள்ளும்படி தொண்டைக்கு அருகில் இருக்கும் விசுத்திச் சக்கரத்தில் இருந்து கொடி போல மேலேறிச் சென்று தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்திலிருந்து அமிழ்தமாகப் பொழிகின்றாள்.

பாடல் #1197

பாடல் #1197: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

கொடியதி ரேகை குறியுள் இருப்பப்
படியது வாருணைப் பைங்கழ லீசன்
வடிவது வானந்தம் வந்து முறையே
இடுமுத லாறங்க மேந்திழை யாளே.

விளக்கம்:

பாடல் #1196 இல் உள்ளபடி விசுத்திச் சக்கரத்திலிருந்து கொடி போல மேலேறிச் சென்று சகஸ்ரதளத்தில் உச்ச நிலையில் மின்னல் போன்ற ஒளியையும் சக்தியையும் கொண்டு இருக்கும் இறைவியானவள் அங்கிருக்கும் இறை சக்தியையே முதன்மையாகக் கொண்டு அதனுள் வீற்றிருக்கும் போது அங்கிருந்து கங்கையைப் போன்ற அமிழ்தம் கீழிறங்கும் படி இறை சக்தியானது ஊற்றாகப் பொழிகின்றது. இதுவே பசுமையான பொன் போன்ற திருவடிகளைக் கொண்ட இறைவனின் உருவமாக இருப்பது பேரின்பமாகும். இந்தப் பேரின்பத்தை அருளும் அமிழ்தத்தை சாதகரின் பக்குவத்திற்கு ஏற்றபடி அவருக்குள் இருக்கும் ஆறு ஆதார சக்கரங்களுக்கும் முறையாக அருளுகின்ற தலைவியாக அழகிய ஆபரணங்களை அணிந்திருக்கும் இறைவி இருக்கின்றாள்.

கருத்து: இறைவன் சகஸ்ரதளத்திலிருந்து அமிழ்தத்தின் மூலம் பேரின்பத்தை அருளும் உருவமாக இருக்கின்றார். இறைவி அதை ஆறு சக்கரங்களுக்கு கொடுக்கும் சக்தியாக இருக்கின்றாள்.

பாடல் #1198

பாடல் #1198: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

ஏந்திழை யாளு மிறைவர்கள் மூவரும்
காந்தார மாறுங் கலைமுத லீரெட்டும்
ஆந்த குளத்தியு மந்திர ராயுவுஞ்
சார்ந்தன ரேத்த விருந்தனள் சத்தியே.

விளக்கம்:

பாடல் #1197 இல் உள்ளபடி அழகிய ஆபரணங்களை அணிந்து ஆறு ஆதார சக்கரங்களுக்கும் சக்தியளிக்கின்ற இறைவியானவள் மும்மூர்த்திகளாகிய பிரம்மன் திருமால் உருத்திரன் ஆகியோருடைய சக்தியாகவும் ஆறு ஆதாரச் சக்கரங்களிலும் வீசுகின்ற ஒளியாகவும் பதினாறு கலைகளின் மூலம் பதினாறு விதமான செயல்களைப் புரிந்து கொண்டு இருப்பவளுமாகிய இறைவியை தமது எண்ணங்கள் முழுவதும் வைத்து தியானிப்பவர்களும் வேத மந்திரங்களை ஆராய்ந்து இறைவியைத் தெரிந்து கொள்ள முயல்கின்றவர்களும் இறைவியே சரணம் என்று அவளை மட்டுமே சார்ந்து போற்றி வழிபடுபவர்களும் ஆகிய அடியவர்களுக்குள் அவள் வீற்றிருக்கின்றாள்.