பாடல் # 796

பாடல் # 796 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

ஆயும் பொருளும் அணிமலர் மேலது
வாயு விதமும் பதினா றுளவலி
போய மனத்தைப் பொருகின்ற வாதாரம்
ஆயுவு நாளும் முகுர்த்தமு மாமே.

விளக்கம் :

யோகிகள் உள் நோக்கி தியானம் செய்து ஆராயும் பொருள் முழுமுதற்சிவனாகும், ஆராய்ந்த சிவன் நம் அழகான கண் மலர்களுக்கு மேலே உள்ளான். பதினாறு மாத்திரை அளவு செய்யும் மூச்சுப் பயிற்சியின் மூலம் சுவாசத்தை மாற்றி அமைத்தால் அந்த சிவனை நன்கு உணரலாம். அவ்வாறு உணர்ந்தால் வாழ் நாட்களைக் கூறுபடுத்தி வழங்கும் நாள், கிழமை, மாதம், ஆண்டு முகூர்த்தம் ஆகியவை காரணப்பொருளாக இருந்து உயிரின் ஆயுளை அதிகரிக்கும்.

பாடல் # 795

பாடல் # 795 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
இடுகின்ற வாறுசென் றின்பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே.

விளக்கம் :

மூச்சுக்காற்று நடுநாடியாகிய சுழுமுனையில் நிற்காமல் இடப்பக்கமாகவும் வலப்பக்கமாகவும் மாறி மாறி இயங்குகின்ற போது உலகியல் வாழ்க்கையில் கிடந்து வருத்தப்பட நேரிடும். யோகியானவன் மூச்சுக்காற்றை நாடிகள் கூடுகின்ற நடுநாடியின் சுழுமுனையில் குண்டலினியோடு சேர்க்க நடுநாடியின் உச்சியில் தீபத்தின் ஒளி தோன்றும் என்று நந்தி அருளினான்.

பாடல் # 794

பாடல் # 794 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

உதித்து வலத்திடம் போகின்ற போது
அதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரும்
உதித்தது வேமிக யோடிடு மாகில்
உதித்த விராசி யுணர்ந்துகொ ளுற்றே.

விளக்கம் :

பிராணன் வலப்பக்கம் தோன்றி இடப்பக்கம் ஓடும் போது ஒரு பக்கம் கனமாகவும் ஒரு பக்கம் மெல்லியதாகவும் இருக்கும். இரு பக்கமும் கணமாகவும் மெல்லியதாகவும் மாறி மாறி பிராணன் ஒடுவது இயற்கையாக உள்ளது என்பதை உணர்ந்து அறிந்துகொள்ளலாம்.

பாடல் # 793

பாடல் # 793 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

மாறி வருமிரு பான்மதி வெய்யவன்
ஏறி இழியும் இடைபிங் கலையிடை
ஊறும் உயிர்நடு வேயுயி ருக்கிரம்
தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே.

விளக்கம் :

சந்திரனும் சூரியனும், இடகலை பிங்கலை நாடிகளில் மாறி மாறி இயங்கும். இடகலை வழியே ஏறிப் பிங்கலை வழியே இறங்கும். பிங்கலை வழியே ஏறி இடகலை வழியே இறங்கும். நடு நாடியில் மூச்சு ஊர்ந்து போகும். நாசிகள் வழியே இயங்கும் மூச்சில் சிவம் உள்ளது என்பதை அறிந்து தெளியலாம்.

Om Namah Shivay — Shiva lingam

பாடல் # 792

பாடல் # 792 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

செவ்வாய் வியாழன் சனிஞாயி றேஎன்னும்
இவ்வா றறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்
டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே.

விளக்கம் :

செவ்வாய்க் கிழமை தேய்பிறை வியாழக்கிழமை சனிக் கிழமை ஞாயிற்றுக் கிழமை ஆகிய நாட்களில் மூச்சை வலப்பக்க நாடி வழியே அறிந்து கொள்ளும் யோகி இறைவன் ஆவான். இந்த நாட்களில் மூச்சு இட நாடியில் நடந்தால் அதை மாற்றி வல நாடியில் புரிய வேண்டும். அப்போது ஆனந்தம் கூடும்.

பாடல் # 791

பாடல் # 791 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றும்
தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்
ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே.

விளக்கம் :

இயல்பாகவோ அல்லது பயிற்சியினாலோ திங்கள் புதன் வெள்ளிக் கிழமைகளில் மூச்சு இடைகலை வழியாக நடைபெற்றால் ஞானத்தைப் பெறுதற்கு வாயிலாகிய உடம்பிற்கு எந்த ஒரு குறையும் அழிவும் உண்டாகாது என்று அருள் வள்ளலாகிய நந்தி பெருமான் அனைவருக்கும் மகிழ்ந்து அருளினார்.

280 Har Har Mahadev Full HD Photos 1080p Wallpapers Download Free Images (202

பாடல் # 790

பாடல் # 790 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்
தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே.

விளக்கம் :

வெள்ளி திங்கள் புதன் கிழமைகளில் இட நாடி வழியாக மூச்சு இயங்க வேண்டும். சனி ஞாயிறு செவ்வாய்க் கிழமைகளில் வல நாடி வழியே மூச்சு இயங்க வேண்டும். வளர்பிறை வியாழக் கிழமைகளில் இடநாடியிலும் தேய்பிறை வியாழக் கிழமைகளில் வலது நாடியிலும் மூச்சு இயங்க வேண்டும். இவ்வாறு இயங்குவது உடல் நலத்திற்கு ஏற்ற இயற்கையான பிராண இயக்கமாகும்.

பாடல் #789

பாடல் #789 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
குறிப்பது கூடிய கோலக் குரம்பைப்
பழப்பதி யாவது பற்றறும் பாசம்
அழப்படி செய்வார்க் ககலும் மதியே.

விளக்கம் :

உயிர்கள் பிறத்தல் வேண்டும் என நந்தி திருவுள்ளக் குறிப்புக் கொண்டருளினன். அக்குறிப்பினால் மாயையால் இவ்வுடம்பு உயிர்களுக்கு அமைந்தது. இவ்வுடல் தொன்று தொட்டு தொடர்ந்து வருவது பாசம் என்னும் பற்று அறுப்பதற்க்கான கருவியாக உள்ளது. இந்த அழகிய உடல் பிஞ்சு, காய், செங்காய் என்று ஆகி முடிவில் பழமாய்ப் பழுத்து விழுந்து அழிந்து விடும். விழுவதற்குள் பாசங்களில் ஆழ்ந்து போகாமல் பாசங்களை விலகும்படி செய்து அதற்குரிய முறைகளில் பழகினால் பாசம் விலகி மெய்யுணர்வு பெருகி ஞானம் மிகும்.

பாடல் #788

பாடல் #788 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

அதுவரு ளும்மரு ளான துலகம்
பொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளும்
மதுவரு ளும்மலர் மங்கையர் செல்வி
இதுவருள் செய்யும் இறைஅவ னாமே.

விளக்கம் :

சிவம் அருளிச்செய்த இவ்வுலகத்தில் அனைத்து உயிர்க்கும் பொதுவாக உலக இன்பத்தையும் உயர்ந்தோர்க்கு சிறப்பாக பேரின்பத்தை தந்து சிவானந்தத் தேனாகிய சக்தியை கொடுத்து ஆயுளை அதிகரித்து அருளைப்புரிவது இறைவனே.

Of the three gods of the Hindu trinity, Shiva is the most commonly worshipped in India today, Vishnu being the second, and Brahma the third. The origins of Shiva are found in a pre-Aryan fertility god and also in a fierce deity of the Vedas called Rudra.

பாடல் #787

பாடல் #787 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

அறிவது வாயுவொ டைந்தறி வாய
அறிவா வதுதான் உலகுயி ரத்தின்
பிறிவுசெய் யாவகை பேணிஉள் நாடிற்
செறிவது நின்று திகழு மதுவே.

விளக்கம் :

பிராணவாயுவின் இயக்கத்தை அறிந்து கொண்டால் நிலையாக இருக்கும் ஐம்பொறிகளாகிய 1. பார்த்தல் 2. கேட்டல் 3. தொடுஉணர்ச்சி 4. சுவை 5. முகர்தல் என்று சொல்லப்படுவது எதுவோ அதுவே, உலகில் உயிர் என்று அறியப்படும், அவ்வுயிர் உலகினின்றும் பிரிந்து போகாதவாறு அதற்குரிய முறைகளை அறிந்து, அந்த வழியிலே உயிரை பேணிக் காத்தால் உயிர் உடம்பில் நிலைபெற்று இருக்கும்.