பாடல் #1378: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
பரந்தி ருந்துள்ளே யறுப்பது சத்தி
கரந்தன கன்னிக ளப்படி சூழ
மலர்ந்திரு கையில் மலரவை யேந்திச்
சிறந்தவ ரேத்துஞ் சிறீதன மாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
பரநதி ருநதுளளெ யறுபபது சததி
கரநதன கனனிக ளபபடி சூழ
மலரநதிரு கையில மலரவை யெநதிச
சிறநதவ ரெததுஞ சிறிதன மாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
பரந்து இருந்து உள்ளே அறுப்பது சத்தி
கரந்தன கன்னிகள் அப்படி சூழ
மலர்ந்து இரு கையில் மலர் அவை ஏந்தி
சிறந்தவர் ஏத்தும் சிறீம் தனம் ஆமே.
பதப்பொருள்:
பரந்து (அனைத்திலும் பரந்து விரிந்து) இருந்து (இருக்கின்ற இறைவியானவள்) உள்ளே (சாதகருக்கு உள்ளிருந்து) அறுப்பது (அவரது மும்மலங்களையும் அறுக்கின்ற) சத்தி (சக்தியாக இருக்கின்றாள்)
கரந்தன (அவளது அருளை வாங்கிக் கொடுக்கின்ற) கன்னிகள் (அறுபத்து நான்கு சக்திகளும்) அப்படி (சாதகர் இருக்கின்ற நிலையில் அவரைச்) சூழ (சுற்றி இருந்து)
மலர்ந்து (மலர்ந்து இருக்கின்ற) இரு (தங்களின் இரண்டு) கையில் (கைகளிலும்) மலர் (தாமரை மலர்களை) அவை (பல விதங்களில்) ஏந்தி (ஏந்திக் கொண்டு இருக்கின்றார்கள்)
சிறந்தவர் (இவர்களின் அருளால் தாம் செய்யும் சாதகத்தை சிறப்பாக செய்கின்ற சாதகர்கள்) ஏத்தும் (போற்றி வணங்குகின்ற) சிறீம் (நவாக்கிரி சக்கரத்தில் உள்ள ‘ஶ்ரீம்’ எனும் பீஜ மந்திரத்தின்) தனம் (பலனாகவே) ஆமே (இறைவி இருக்கின்றாள்).
விளக்கம்:
அனைத்திலும் பரந்து விரிந்து இருக்கின்ற இறைவியானவள் சாதகருக்கு உள்ளிருந்து அவரது மும்மலங்களையும் அறுக்கின்ற சக்தியாக இருக்கின்றாள். பாடல் #1371 இல் உள்ளபடி அவளது அருளை வாங்கிக் கொடுக்கின்ற அறுபத்து நான்கு சக்திகளும் சாதகர் இருக்கின்ற நிலையில் அவரைச் சுற்றி இருந்து பாடல் #1376 இல் உள்ளபடி மலர்ந்து இருக்கின்ற தங்களின் இரண்டு கைகளிலும் தாமரை மலர்களை பல விதங்களில் ஏந்திக் கொண்டு இருக்கின்றார்கள். இவர்களின் அருளால் தாம் செய்யும் சாதகத்தை சிறப்பாக செய்கின்ற சாதகர்கள் போற்றி வணங்குகின்ற நவாக்கிரி சக்கரத்தில் உள்ள ‘ஶ்ரீம்’ எனும் பீஜ மந்திரத்தின் பலனாகவே இறைவி இருக்கின்றாள்.