பாடல் #293

பாடல் #293: முதல் தந்திரம் – 20. கல்வி (உண்மையான அறிவைக் கற்றுக்கொள்ளும் முறை)

கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்
பல்லி யுடையார் பாம்பரிந்து உண்கின்றார்
எல்லியும் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் வாதித்தது காயமு மாமே.

விளக்கம்:

உலக ஞானத்தை மட்டும் அறிந்து கொள்ளும் கல்வியை கற்றுக்கொண்ட பலகோடி உயிர்கள் எப்போதும் பிறந்து இறந்து கொண்டுதான் இருக்கின்றனர். எண்ணம் சிதறாத மனமுடையவர்கள் உண்மையான ஞானத்தை சிறிது சிறிதாக பெற்று தினமும் காலையும் மாலையும் இறைவனை போற்றி வழிபட்டால் சித்தக் குளிகையால் செம்பு பொன்னாவது போல இறைவனது அருளால் அழிகின்ற உடல் என்றும் அழியாத காயகல்ப உடலாக மாறிவிடும்.

கருத்து: உண்மையான பேரறிவு ஞானத்தைப் பெறுவதற்கு எதிலும் சிதறாத வலிமையான மனதோடு இறை வழிபாடு தேவை.

பாடல் #294

பாடல் #294: முதல் தந்திரம் – 20. கல்வி (உண்மை அறிவான ஞானம்)

துணையது வாய்வரும் தூயநற் சோதி
துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வரும் தூயநற் கந்தம்
துணையது வாய்வரும் தூயநற் கல்வியே.

விளக்கம்:

பாடல் #293 இல் கூறியுள்ளபடி என்றும் அழியாத உடலைப் பெற்ற உயிர்களுக்கு துணையாக கூடவே வருபவை தூய்மையான பேரொளி ஜோதியாகிய இறைவனும் அந்த உயிர்கள் வேறு உயிர்களுக்கு சொன்னது அப்படியே உடனே நடக்கும் சத்தியவாக்கும். அவர்கள் செய்த நல்ல கர்மங்களின் நல்ல ஜென்மாந்திர வாசனையும் உண்மையான ஞானமாகிய கல்வியும் அந்த உயிர்களுடன் எப்போதும் துணையாக வருபவை ஆகும்.

பாடல் #295

பாடல் #295: முதல் தந்திரம் – 20. கல்வி (உண்மை அறிவான ஞானம்)

நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினால் பண்பின் பயன்கெடும்
கோலொன்று பற்றினால் கூடா பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே.

விளக்கம்:

அறநூல்கள் கூறிய வழிமுறைகளின்படி நடந்து இறைவனை அடைய முடியாத உயிர்கள் உலக ஆசைகளின்படி வழி நடந்து நல்ல பண்புகளால் கிடைக்கும் பயன்களை கெடுத்துக் கொண்டு திரிகின்றார்கள். குச்சி ஒன்றை எடுத்து காண்பித்தால் உணவை உண்ண வரும் பறவைகள் விலகி ஓடிவிடுவதுபோல அறநூல்கள் கூறிய வழிமுறைகளின்படி நடந்தால் உலக ஆசைகளைக் கொடுக்கும் ஐம்புலன்களும் நம்மை விட்டு ஓடிவிடும். இது தெரியாமல் உலக ஆசைகளில் மயங்கிக் கிடந்து வாழ்வை இழக்கின்றனர் உயிர்கள்.

பாடல் #296

பாடல் #296: முதல் தந்திரம் – 20. கல்வி (உண்மை அறிவான ஞானம்)

ஆய்ந்துகொள் வார்க்கரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்தது மனமல்கு நூலேணி யாமே.

விளக்கம்:

உண்மை கல்வியான ஞானத்தை ஆராய்ந்து உணர்ந்து கொள்பவர்களின் உள்ளத்துக்குள்ளேயே இறைவன் வெளிப்படுவான். மணிவிளக்கின் உள்ளிருந்து வெளிப்படும் நெருப்பு வெளிச்சத்தைப் போல தாம் உணர்ந்த கல்வி ஞானத்தின் மூலம் இறைவனை ஜோதியாக தமக்குள் தரிசிக்க பெற்றவர்களுக்கு இறைவனை அடைய மனம் தகுதிபெற்று அந்த மனமே அவர்களை முக்திக்கு ஏற்றிவிடும் ஏணியாகவும் இருக்கும்.

பாடல் #297

பாடல் #297: முதல் தந்திரம் – 20. கல்வி (உண்மை அறிவான ஞானம்)

வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாங்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாமும்ப ராமுல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே.

விளக்கம்:

உண்மை ஞானமாகிய கல்வி கற்றவர்களின் சிந்தனை உயிர்களுக்கெல்லாம் வழித்துணையாகவும் நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருக்கும். உண்மை ஞானமாகிய கல்வி இல்லாதவர்களின் சிந்தனை இறைவனைப் பற்றிய எண்ணங்களை இல்லாமல் அறியாமையை கொடுக்கும். உண்மை ஞானமாகிய கல்வி கற்றவர்களுக்கு, தேவலோகம் முதலிய ஏழு உலகங்களுக்கும் வழித்துணையாய் இருக்கும் இறைவனே பெருங்கருணையுடன் அருள் புரிவான்.

பாடல் #298

பாடல் #298: முதல் தந்திரம் – 20. கல்வி (உண்மை அறிவான ஞானம்)

பற்றது பற்றின் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகின் கிளரொளி வானவர்
கற்றுஅவர் பேரின்பம் உற்றுநின் றாரே.

விளக்கம்:

எதையாவது வேண்டும் என்று எண்ணி அதனை அடைய ஆசைப்பட்டால் இறைவன் வேண்டும் என்று ஆசைப்பட்டு அவனை அடையுங்கள். அனைத்திற்கும் முதல்வனாகிய இறைவனை அடைந்து அவன் அருளைப் பெற்றுவிட்டால் எல்லா ஆசைகளுக்கும் மேலானதை அடைந்திருப்பதை உணரலாம். தவ ஒளியுடன் இருக்கும் தேவர்களை விட உண்மைக்கல்வி ஞானத்தின் மூலம் இறைவனை உணர்ந்தவர்கள் மிகுந்த பேரின்பம் பெறுகிறார்கள்.

பாடல் #299

பாடல் #299: முதல் தந்திரம் – 20. கல்வி (உண்மை அறிவான ஞானம்)

கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்
துடலுடை யான்பல ஊழிதொ றூழி
அடல்விடை ஏறும் அமரர்கள் நாதன்
இடமுடை யார்நெஞ்சத் திலிருந் தானே.

விளக்கம்:

கடலாக இருப்பவனும் மலையாக இருப்பவனும் ஐந்து பூதங்களையே தனக்கு உடலாக வைத்திருப்பவனும் உலகம் தோன்றி அழியும் பலகோடி ஊழிக்காலங்களிலும் மாறாமல் நின்று வலிமையான காளையின் மேல் ஏறிவரும் அமரர்களுக்கெல்லாம் தலைவனுமான இறைவனை உண்மை கல்வி ஞானத்தைப் பெற்று தம் மனதில் இடம்கொடுப்பவர் நெஞ்சத்தில் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கின்றான்.

பாடல் #280

பாடல் #280: முதல் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யு மருளது வாமே.

விளக்கம்:

தம்மை இகழ்ச்சியாக பேசும் உயிர்களையும் போற்றி வணங்கும் உயிர்களையும் சிவபெருமான் அறிவான். தம்மை இகழ்ந்து பேசிய உயிர்களுக்கும் மனமுவந்து அவரவர் மனதிற்கேற்ப அருளை வழங்கும் உத்தமமான தலைவன் இறைவன். அப்படிப்பட்ட இறைவனை உயிர்கள் தமது உள்ளத்திலிருந்து வெளிவரும் தூய்மையான அன்போடு அழைத்து அருள் வேண்டுமென்று கேட்டுவிட்டால், அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் வேண்டியதை உடனே தந்துவிடுவதும் அந்த இறைவனின் பேரருளே ஆகும்.

பாடல் #281

பாடல் #281: முதல் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

இன்பப் பிறவிக் கியல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல எண்ணினும்
அன்பிற் கலவிசெய் தாதிப் பிரான்வைத்த
முன்புஇப் பிறவி முடிவது தானே.

விளக்கம்:

உயிர்கள் பிறந்த பிறவியிலேயே பேரின்பம் அடைவதற்குத் தேவையான அனைத்து வழிகளையும் இறைவன் செய்து வைத்திருந்தாலும் உயிர்கள் தாம் எடுத்த பிறவியில் துன்பத்தைத் தரக்கூடிய உலக ஆசைகளின் வழியே பலவித செயல்களைச் செய்கின்றனர். உயிர்கள் ஆசை வழியே சென்றாலும் உயிர்கள் மீது கொண்ட பேரன்பினால் அவர்களின் பிறவியை அறுக்கும் ஒரு வழியாக தூய்மையான அன்பை வைத்து இருக்கின்றான். ஆசை வழியே சென்று துன்பத்திற்குரிய காரியங்களைச் செய்யும் உயிர்களானாலும் தூய்மையான அன்புடன் இருந்தால் அவர்களுக்கு வேறு பிறவியில்லாத முக்தியை இறைவன் அவர்களுக்கு வழங்கி அருளுவான்.

பாடல் #282

பாடல் #282: முதல் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொ டேற்க இசைந்தன
துன்புறு கண்ணியைந் தொடும் துடக்கற்று
நண்புறு சிந்தையொடு நாடுமின் நீரே.

விளக்கம்:

அனைத்து உயிர்களிடமும் தூய்மையான அன்புடன் இருப்பவர்களின் எண்ணத்தில் பேரொளியாக எழும் இறைவன் உயிர்களின் பிறவியை அறுத்து பேரின்பத்தைக் கொடுக்கும் அமிர்தமாக இரண்டு கண்களுக்கு நடுவே இருக்கும் ஆக்ஞா சக்கரத்தில் இணைந்து எழுகின்றான். உயிர்களின் உள்ளத்தில் பேரொளியாக இறைவன் எழுந்தபின் ஆன்மாக்களுக்கு துன்பத்தை தரும் ஐம்புலன்களின் தொடர்பு அறுபட்டு நீங்கும். அனைத்து உயிர்களிடமும் அன்பையே சிந்தனை செய்யும் எண்ணத்தோடு அவனைச் சென்று அடையுங்கள் நீங்கள்.