பாடல் #300: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (தெளிவான கேள்வி கேட்டு மனத்தை அடக்கியிருத்தல்)
அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்
புறங்கேட்டும் பொன்னுரை மேனிஎம் ஈசன்
திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.
விளக்கம் :
அறநூல்கள் சொல்லும் உண்மைகளைக் கேட்டும் பாடல் # 224ல் உள்ளபடி இருக்கும் அந்தணர்களின் அறிவுரைகளைக் கேட்டும் பாவங்கள் இவை என கூறும் நீதிநூல்கள் கூறுவதை கேட்டும் தேவர்களின் வழிபாட்டு கூறிய மந்திரங்களைக்கேட்டும் இறைவனைப்பற்றி சொல்லாத பிற நூல்களில் சொல்லப்படும் நல்ல கருத்துக்களைக் கேட்டும், பொன் போன்ற ஈசனின் திருமேனியாக இருக்கும் அவன் நாமத்தையும் அதன் தன்மைகளையும் கேட்டு அதன் படி நடந்தால் சிவகதி அடையலாம்.