பாடல் #214: முதல் தந்திரம் – 11. அக்கினி காரியம் (யாகம் / வேள்வி செய்வதன் முக்கியத்துவம்)
வசைஇல் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையும் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேத முதலாம்
அசைஇல் அந்தணர் ஆகுதி வேட்கிலே.
விளக்கம்:
ஒழுக்கத்திலிருந்து சிறிதும் மாறாத வேதம் அறிந்த அந்தணர்கள் கருத்தோடும் சிரத்தையோடும் மந்திரங்கள் ஓதி நெய்யிட்டு ஹோமத்தினால் மாசில்லாத சுத்தமான மழை நீரைத் தரும் மேகங்களைக் கொண்ட வானமும் அது பொழிந்தால் வளம் பெறும் நிலங்களும் அப்படி வளம் பெற்ற நிலங்களில் விளைந்த விளைச்சல்களைப் பெற்று அதைச் சுற்றி எட்டுத் திசையிலும் வாழும் நாட்டு மக்களும் அந்த மக்கள் திசைக்கொரு காவலர்களாக வைத்து வணங்கும் பல தேவர்கள் கூட்டமும் ஆகிய இவை அனைத்தும் தனது காரியங்களை சிறப்பாக செய்ய வேதங்களும் வேள்விகளும் முக்கியமாக இருக்கின்றது.
கருத்து: ஒரு நாட்டில் இருக்கும் அந்தணர்கள் தமது ஒழுக்கத்திலிருந்து சிறிதும் மாறிவிடாமல் சிறப்பான வேதங்களை முதலாக வைத்து முறையாக மந்திரங்கள் ஓதி ஹோமத் தீயை வளர்த்து வந்தால் அந்த நாட்டின் வளமும் அதில் வாழும் மக்களின் வளமும் அவர்கள் வணங்கும் தெய்வங்களின் சக்தியும் சிறப்பாக இருக்கும்.