பாடல் #1540: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)
சேய னணியன் பிணியிலன் பேர்நந்தி
தூயன் றுளக்கற நோக்கவல் லார்கட்கு
மாயன் மயக்கிய மானிட ராமவர்
காய மிளைக்குங் கருத்தறியார் களே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
செய னணியன பிணியிலன பெரநநதி
தூயன றுளககற நொககவல லாரகடகு
மாயன மயககிய மானிட ராமவர
காய மிளைககுங கருததறியார களெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சேயன் அணியன் பிணி இலன் பேர் நந்தி
தூயன் துளக்கு அற நோக்க வல்லார்கட்கு
மாயன் மயக்கிய மானிடராம் அவர்
காயம் இளைக்கும் கருத்து அறியார்களே.
பதப்பொருள்:
சேயன் (நிலையான மனமில்லாதவர்களுக்கு தூரத்தில் இருந்து அருளுபவனும்) அணியன் (நிலையான மனமுடையவர்களுக்கு அருகிலே இருப்பவனும்) பிணி (இந்த இரு நிலையில் இருப்பவர்களின் மேலும் பற்று) இலன் (இல்லாதவனும்) பேர் (பெயரில்) நந்தி (நந்தி என்று அழைக்கப் படும் இறையே குரு என்ற நிலையில் இருப்பவனும்)
தூயன் (தூய்மையானவனும்) துளக்கு (ஆகிய இறைவனை அசைவு) அற (இல்லாத மனதுடன்) நோக்க (தமக்குள்ளேயே பார்க்க) வல்லார்கட்கு (முடிந்தவர்களுக்கு அவ்வாறெல்லாம் இருப்பான்)
மாயன் (அவ்வாறு பார்க்க முடியாதவர்களுக்கு மாயனாக இருந்து) மயக்கிய (மாயையில் மயக்கிய) மானிடராம் (மனிதர்களாகிய) அவர் (மற்றவர்கள் அனைவரும்)
காயம் (தம்முடைய உடலின் மேல் இருக்கின்ற) இளைக்கும் (பற்றை குறைத்து உடலுக்குள் இருக்கின்ற ஆன்மாவை அறிந்து கொள்ளுகின்ற) கருத்து (முறையை) அறியார்களே (அறியாமல் இருக்கின்றார்கள்).
விளக்கம்:
நிலையான மனமில்லாதவர்களுக்கு தூரத்தில் இருந்து அருளுபவனும் நிலையான மனமுடையவர்களுக்கு அருகிலே இருப்பவனும் இந்த இரு நிலையில் இருப்பவர்களின் மேலும் பற்று இல்லாதவனும் பெயரில் நந்தி என்று அழைக்கப் படும் இறையே குரு என்ற நிலையில் இருப்பவனும் தூய்மையானவனும் ஆகிய இறைவனை அசைவு இல்லாத மனதுடன் தமக்குள்ளேயே பார்க்க முடிந்தவர்களுக்கு அவ்வாறெல்லாம் இருக்கின்றான் இறைவன். அவ்வாறு பார்க்க முடியாமல் இருக்கின்ற மனிதர்களாகிய மற்றவர்கள் அனைவருக்கும் அவன் மாயனாகவே இருந்து மாயையில் மயக்கி வைத்திருப்பதால் அவர்கள் அனைவரும் தம்முடைய உடலின் மேல் இருக்கின்ற பற்றை குறைத்து உடலுக்குள் இருக்கின்ற ஆன்மாவை அறிந்து கொள்ளுகின்ற முறையை அறியாமல் இருக்கின்றார்கள்.