பாடல் #1541

பாடல் #1541: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

வழியிரண் டுக்குமோர் வித்தது வான
கழியது பார்மிசை வாழ்த லுறுதல்
சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின்
றழிவறி வார்நெறி நாடகில் லாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வழியிரண டுககுமொர விததது வான
கழியது பாரமிசை வாழத லுறுதல
சுழியறி வாளனறன சொலவழி முனனின
றழிவறி வாரநெறி நாடகில லாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வழி இரண்டுக்கும் ஓர் வித்து அது ஆன
கழி அது பார் மிசை வாழ்தல் உறுதல்
சுழி அறிவாளன் தன் சொல் வழி முன் நின்று
அழிவு அறிவார் நெறி நாட கில்லாரே.

பதப்பொருள்:

வழி (இறைவனை அடையும் முக்திக்கு வழி என்று யோக மார்க்கமும் ஞான மார்க்கமும் அறிந்து செல்பவர்களுக்கும் இறைவனை அடைவதற்கான வழி எது என்று அறியாமலேயே பக்தி மார்க்கத்திலும் கர்ம மார்க்கத்திலும் செல்பவர்கள்) இரண்டுக்கும் (ஆகிய இரண்டு வழியில் செல்பவர்களுக்கும்) ஓர் (ஒரே) வித்து (மூல விதையாக) அது (அவர்களுக்குள்) ஆன (இருப்பதாகிய)
கழி (சுழுமுனை நாடி) அது (எனும் நடு நாடியின் மூலம் குண்டலினி சக்தியை ஏற்றி சென்று) பார் (இந்த உலகத்தின்) மிசை (மேல்) வாழ்தல் (வாழ்வதும்) உறுதல் (கர்மங்களை அனுபவிப்பதும் ஆகிய இரண்டிலிருந்தும் விடுதலை பெறுவதற்கு)
சுழி (சுழுமுனை நாடியின் உச்சித் துளையில் வீற்றிருக்கும்) அறிவாளன் (அனைத்தும் அறிந்தவனாகிய) தன் (இறைவனே குருவாக இருந்து) சொல் (சொல்லி அருளுகின்ற) வழி (வழியை) முன் (முயற்சி செய்து) நின்று (விட்டுவிடாமல் கடைபிடித்து)
அழிவு (அதன் மூலம் கர்மங்கள் அனைத்தும் அழிந்து போவதை) அறிவார் (அறிந்து கொண்டவர்களின்) நெறி (வழி முறையை) நாட (தேடி அடைவதற்கு) கில்லாரே (முயற்சி செய்யாமலேயே ஆசைகளின் வழியே சென்று கொண்டு இருக்கின்றார்கள்).

விளக்கம்:

இறைவனை அடையும் முக்திக்கு வழி என்று யோக மார்க்கமும் ஞான மார்க்கமும் அறிந்து செல்பவர்களுக்கும் இறைவனை அடைவதற்கான வழி எது என்று அறியாமலேயே பக்தி மார்க்கத்திலும் கர்ம மார்க்கத்திலும் செல்பவர்கள் ஆகிய இரண்டு வழியில் செல்பவர்களுக்கும் ஒரே மூல விதையாக அவர்களுக்குள் இருப்பதாகிய சுழுமுனை நாடி எனும் நடு நாடியின் மூலம் குண்டலினி சக்தியை ஏற்றி சென்று இந்த உலகத்தின் மேல் வாழ்வதும் கர்மங்களை அனுபவிப்பதும் ஆகிய இரண்டிலிருந்தும் விடுதலை பெறுவதற்கு சுழுமுனை நாடியின் உச்சித் துளையில் வீற்றிருக்கும் அனைத்தும் அறிந்தவனாகிய இறைவனே குருவாக இருந்து சொல்லி அருளுகின்ற வழியை முயற்சி செய்து விட்டுவிடாமல் கடைபிடித்து அதன் மூலம் கர்மங்கள் அனைத்தும் அழிந்து போவதை அறிந்து கொண்டவர்களின் வழி முறையை தேடி அடைவதற்கு முயற்சி செய்யாமலேயே ஆசைகளின் வழியே சென்று கொண்டு இருக்கின்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.